அடக்க அனுமதி! யாரால் சாத்தியமானது?

மழை நின்ற போதிலும்‌ தூறல்‌ நிற்‌கவில்லை என்பதாகவே கொவிட்‌ 19 வைரஸ்‌ தொற்றால்‌ மரணிக்கும்‌ முஸ்‌லிம்களின்‌ ஜனாஸாக்களை அடக்கம்‌ செய்வதற்குரிய அரசாங்கத்தின்‌ அனுமதி அமைந்துள்ளது. கொவிட்‌ 19 தொற்றால்‌ மரணிக்கின்றவர்களை அடக்கம்‌ செய்‌வதற்கும்‌ முடியுமென்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்த போதிலும்‌, இலங்கை அரசாங்கம்‌ சுகாதாரத்துறை நிபுணர்களின்‌ கூற்றை முன்னிலைப்படுத்தி, அரசியல்‌ தேவைக்காக மேற்படி தொற்றால்‌ மரணிக்கின்றவர்களை அடக்கம்‌ செய்ய முடியாது, தகனம்‌ மட்‌டுமே செய்ய முடியுமென்று கட்டாயமாக்‌கியது.

அரசாங்கத்தின்‌ இந்த அறிவித்தலை மீள்பரிசீலனை செய்து அடக்கம்‌ செய்வதற்கு அனுமதிக்குமாறு இலங்கை முஸ்‌லிம்கள்‌ முதல்‌ உலக நாடுகள்‌ பலவும்‌, ஐ.நா மனித உரிமைப்‌ பேரவை உட்பட சர்வதேச அமைப்புக்களும்‌ இலங்கை அர சாங்கத்திடம்‌ கோரிக்கைகளை விடுத்த போதிலும்‌, அவை யாவும்‌ தட்டிக்‌ கழிக்‌கப்பட்டன.

இந்நிலையில்‌, 20ஆவது திருத்தச்‌ சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம்‌ கட்சிகளின்‌ பாராளுமன்ற உறுப்பினர்கள்‌, கொவிட்‌ தொற்றால்‌ மரணிக்கின்ற முஸ்லிம்களை அடக்கம்‌ செய்வதற்கான அனுமதியை அரசாங்கம்‌ வழங்க வேண்‌டுமென்ற கோரிக்கைகயை முதன்மைப்‌படுத்தியே அச்சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கினோம்‌. அதனால்‌, விரைவில்‌ நல்லது நடக்குமென்று நம்பிக்கை வெளியிட்டார்கள்‌. ஆனால்‌, இவர்களின்‌ நம்பிக்கை நிறைவேறவில்லை.

பாராளுமன்றத்தில்‌ பிரதமர்‌ மஹிந்தராஜபக்ஷ மேற்படி ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதியளிக்கப்படும்‌ என்று தெரிவித்தார்‌. பின்னர்‌, ஆளுந்‌ தரப்பினரே பிரதமர்‌ அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றும்‌, பிரதமரால்‌ அதனை தீர்மானிக்க முடியாது. சுகாதாரத்துறை நிபுணர்களே அதனை முடிவு செய்ய வேண்டுமென்‌றெல்லாம்‌ தெரிவித்தார்கள்‌.

இந்நிலையில்‌ 20ஆவது திருத்தச்‌ சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம்‌ பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ அரசாங்‌கத்தின்‌ மீது நம்பிக்கை இழந்தார்கள்‌. அரசாங்கம்‌ எங்களை ஏமாற்றிவிட்டது. ஜனாஸா அடக்கம்‌ தொடர்பில்‌ அரசாங்‌கத்திற்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்வோம்‌ என்று தெரிவித்துதங்களின்‌ மீதான எதிர்‌ விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தார்கள்‌.

இதன்‌ பின்னரும்‌ அவர்கள்‌ கொவிட்‌ தொற்றால்‌ மரணிக்கின்ற முஸ்லிம்களை அடக்கம்‌ செய்வதற்கு அரசாங்கம்‌ அனுமதிக்க வேண்டுமென்று அரசாங்‌கத்திற்கு அழுத்தங்களைக்‌ கொடுக்கவில்லை. அரசாங்கம்‌ ஏமாற்றியதற்காக ஒரு வார்த்தையேனும்‌ கண்டனத்தை தெரிவிக்கவில்லை. பாகிஸ்தான்‌ பிரதமர்‌ இம்ரான்கான்‌ இலங்கை வந்த போது, ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதிக்க வேண்டும்‌. பிரதமர்‌ மஹிந்தராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென்று காலிமுகத்திடலில்‌ நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்‌ கூட 20இற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம்‌ பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ கலந்து கொள்ளவில்லை.

அரசாங்கம்‌ எங்களை ஏமாற்றி விட்டதென்றும்‌, போராட்டங்‌களை செய்வோம்‌ என்றும்‌ தெரிவித்துக்‌ கொண்டவர்களின்‌ போலித்தனம்‌ இன்‌னுமொரு தடவை தோலுரிக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும்‌. ஆகவே, கொவிட்‌ தொற்றால்‌ மரணித்த முஸ்லிம்களை அடக்கம்‌ செய்வதற்கு அரசாங்கம்‌ அனுமதி வழங்‌கியமைக்கு 20இற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம்‌ பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ எந்தவகையிலும்‌ காரணமாக இருக்கவில்லை என்பதே உண்மையாகும்‌. இவ்‌வாறு உண்மை இருக்கின்ற போதிலும்‌,

ஜனாஸா அடக்கத்திற்கான அனுமதி கிடைப்பதற்கு நாங்களே காரணமென்று தங்களின்‌ வட்டாரங்களில்‌ இந்த முஸ்லிம்‌ பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ கூறிவருவதாகவும்‌ அறிய முடிகின்றது. கொவிட்‌ தொற்றால்‌ மரணிக்கின்ற முஸ்லிம்களின்‌ உடல்களை அடக்கம்‌ செய்வதற்குரிய அனுமதியை இலங்கை அரசாங்கம்‌ வழங்கியமைக்கு பிரதான காரணம்‌ சர்வதேச ரீதியான அழுத்தங்‌களேயாகும்‌. உலக சுகாதார அமைப்பு, ஐ.நாவின்‌ மனித உரிமை பேரவை, சர்வதேச மன்னிப்பு சபை, ஓ.ஐ.சி எனும்‌ முஸ்லிம்‌ நாடுகளின்‌ அமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும்‌, முஸ்லிம்‌ நாடுகளும்‌ இலங்கை அரசாங்கம்‌ கொவிட்‌ தொற்றால்‌ மரணித்த முஸ்லிம்களை அவர்களின்‌ மார்க்க அடிப்‌படையில்‌ அடக்கம்‌ செய்வதற்கு அனு மதிக்க வேண்டுமென்று இலங்கையை கேட்டுக்‌ கொண்டன. ஆயினும்‌, இதற்கு கூட இலங்கை அரசாங்கம்‌ தனது தீர்மானத்திலிருந்து மாறவில்லை.

இந்நிலையில்தான்‌ ஐ.நா மனித உரிமைப்‌ பேரவையின்‌ கூட்டத்‌ தொடர்‌ ஆரம்பமாகியுள்ளது. இங்கு இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல்‌ தொடர்பான பிரேரணை முன்‌ வைக்கப்படவுள்ளது. இலங்கை அரசாங்‌கத்திற்கு சாதகமான சூழல்‌ இருப்பதாக இன்னும்‌ உறுதி செய்யப்படவில்லை. இந்தியா இலங்கைக்கு ஆதரவாக செயற்‌படுமா என்பதில்‌ இன்னும்‌ முடிவு தெரியவில்லை. இதனால்‌, முஸ்லிம்‌ நாடுகளின்‌ ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம்‌ அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்எது. முஸ்லிம்‌ நாடுகளின்‌ ஆதரவைப்‌ பெற்றுக்‌ கொள்ள வேண்டுமாயின்‌ ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதியளித்‌தாக வேண்டும்‌.

அதே வேளை, இலங்கை வந்த பாகிஸ்தான்‌ பிரதமர்‌ இம்ரான்கான்‌ ஜனாதிபதி மற்றும்‌ பிரதமர்‌ ஆகியோர்களுடன்‌ மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின்‌ போது கூட ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதியளிக்க வேண்டுமென்று கேட்டுள்ளார்‌. இதனை. முஸ்லிம்‌ பாராளுமன்ற உறுப்பினர்களின்‌ சந்திப்பின்‌ போது இம்ரான்கான்‌ தெரிவித்தமைகுறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி, இந்த சந்திப்பு நடைபெற்றுக்‌ கொண்டிருந்த போது, அங்கு வருகை தந்த நீதி அமைச்சர்‌ அலிசப்ரி ஜனாதிபதி ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதியளிப்பதற்கு முடிவு செய்துள்ள செய்தியை தங்களிடம்‌ சொல்லுமாறு கேட்டுக்‌ கொண்டதாக இம்ரான்கானிடம்‌ தெரிவித்துள்ளார்‌.

ஆகவே, இலங்கை அரசாங்கம்‌ கொவிட்‌ தொற்றால்‌ மரணிக்க முஸ்‌லிம்களின்‌ உடல்களை அடக்கம்‌ செய்‌வதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை செய்துள்ளமையானது உள்நாட்டில்‌ மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களும்‌, சர்வதேசத்தின்‌ அழுத்தமும்‌, ஐ.நா. மனித உரிமைப்‌ பேரவையில்‌ இலங்கை எதிரான பிரேரணையிலிருந்து தம்மை பாதுகாத்துக்‌ கொள்வதற்காகவும்‌ என்பதே உண்மையாகும்‌. ஆதலால்‌, முஸ்லிம்‌ பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ தங்களினால்தான்‌ அரசாங்கம்‌ இந்த தீர்மானத்தை எடுத்துக்‌ கொண்டதென்று மார்தட்டிக்‌ கொள்ள வேண்டியதில்லை.

கொவிட்‌ தொற்றால்‌ மரணித்தவர்‌களை அடக்கம்‌ செய்யும்‌ போது நிலத்தடி நீரின்‌ மூலமாக கொவிட்‌ வைரஸ்‌ பரவும்‌ என்று பரப்புரை செய்த, விஞ்ஞானத்‌திற்கு மாற்றமான கருத்தினை உண்மையென்று நிறுவுவதற்காகவே இடங்களை தேடிக்‌ கொண்டிருக்கின்றார்கள்‌ என்பது போல்‌ தெரிகின்றது. அடக்கம்‌ செய்வதற்‌குரிய இடங்களாக சில பிரதேசங்களை அடையாளங்‌ கண்டுள்ள போதிலும்‌, அதற்குரிய அனுமதியை அரசாங்கம்‌ வழங்கவில்லை. அதுபற்றி ஆராய்வதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்நிலையில்‌ இரணைதீவில்‌ அடக்கம்‌ செய்வதற்கு அரசாங்கம்‌ முடிவு செய்துள்ளது. இதற்கு அங்குள்ள பொதுமக்கள்‌ பெரும்‌ எதிர்ப்பு தெரிவித்துக்‌ கொண்டிருக்கின்றார்கள்‌.

இந்நிலையில்‌, ௬காதார சேவைகள்‌ பணிப்பாளர்‌ நாயகம்‌ வைத்தியர்‌ அசேல குணவர்தன இந்த முடிவு தற்காலிகமான தென்று தெரிவித்துள்ளார்‌.

இரணைதீவினை தெரிவு செய்தமை கூட தமிழ்‌, முஸ்லிம்‌ உறவில்‌ விரிசலை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கையாகும்‌ என்றும்‌ தெரிவிக்கப்படுகின்றமை குறிப்‌பிடத்தக்கது.

கொவிட்‌ தொற்றால்‌ மரணிப்பவர்களை அடக்கம்‌ செய்யும்‌ போது நிலத்தடி நீர்‌ மூலமாக குறித்த வைரஸ்‌ பரவாதென்று வைத்திய பேராசிரியர்கள்‌ பலரும்‌ விஞ்ஞான அடிப்படையில்‌ நிரூபித்துள்ளார்கள்‌. ஆதலால்‌, மரணிக்கின்றவர்களின்‌ பிரதேசங்‌களிலேயே அடக்கம்‌ செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்‌. இவ்வாறு அடக்கம்‌ செய்யும்‌ போது உலக சுகாதார அமைப்பினால்‌ வெளியிடப்பட்‌டுள்ள பரிந்துரைகளை பின்பற்றுவது சாலப்‌ பொருத்தமாகும்‌.

இவ்வாறு அடக்கம்‌ செய்வதற்குரிய இடத்தையும்‌, அதற்குரிய வழிமுறைகளையும்‌ அறிவிப்பதில்‌ காலத்தை கடத்திக்‌ கொண்டிருக்கும்‌ அரசாங்கத்தின்‌ நடவடிக்கையைக்‌ கூட கண்டிப்பதற்கு அல்லது அதற்குரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளையாவது எடுப்பதற்கு 20இற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம்‌ பாராளுமன்ற உறுப்‌பினர்கள்‌ முயற்சிகளை எடுக்காதிருப்பது முதுகெலும்பற்ற செயலாகும்‌. கடந்த காலங்களில்‌ இவர்கள்‌ உட்பட இவர்‌களின்‌ கட்சித்‌ தலைவர்களும்‌ வாய்ச்‌சொல்‌ வீரர்களாகவே இருந்தார்கள்‌. அதனையே இன்றும்‌ செய்து கொண்டிருக்‌கின்றார்கள்‌. வாய்ச்சொல்‌ வீரர்களினால்‌ சமூகத்திற்கு எதுவும்‌ ஆவதில்லை என்‌பதற்கு முஸ்லிம்‌ கட்சிகளும்‌, அவற்றின்‌ பாராளுமன்ற உறுப்பினர்களை விடவும்‌ வேறு நல்ல உதாரணத்தை காண முடியாது.

சொல்லிலும்‌, செயலிலும்‌ உண்மை வீரர்களாக இருப்பவர்களே தலைவர்‌களாகவும்‌, பாராளுமன்ற உறுப்பினர்களாகவும்‌ இருக்க வேண்டுமென்பதே முஸ்லிம்‌ சமூகத்தின்‌ இன்றைய உடனடித்‌ தேவையாகும்‌. வாய்ச்‌ சொல்‌ வீரர்‌களினால்‌ முஸ்லிம்‌ சமூகம்‌ இழந்தவை ஏராளமாகும்‌.

இதேவேளை, 20இற்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்‌களில்‌ ஒருவராகிய ஹாபிஸ்‌ நசீர்‌ அஹமட்‌ கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர்‌ நகர்‌ மற்றும்‌ காத்தான்குடி பிரதேச செயலகப்‌ பிரிவுகளுக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்‌ குழுத்‌ தலைவராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்‌. இதே போன்று 20இற்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்‌ இந்த நியமனம்‌ வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகைய பதவியை நோக்காகக்‌ கொண்டே 20ஆவது திருத்தச்‌ சட்ட மூலத்திற்கு முஸ்லிம்‌ கட்சிகளின்‌ பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ ஆதரவு வழங்கினார்கள்‌. இந்நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக மெளனமாகவே இருப்பார்கள்‌.

தற்போது என்னதான்‌ விமர்சனம்‌ செய்தாலும்‌, தேர்தல்‌ வருகின்ற போது சமூகம்‌ அதனை மறந்து பணத்திற்கும்‌, பொருளுக்கும்‌, பொய்‌ வாக்குறுதிக்கும்‌, கட்சியை காப்பாற்ற வேண்டுமென்ற கோசத்திற்காகவும்‌, உரிமையை வெற்றி கொள்வோம்‌ என்ற வெற்றுக்‌ கோசத்‌திற்காகவும்‌ வாக்களிப்பார்கள்‌ என்ற நம்பிக்கை முஸ்லிம்‌ கட்சிகளுக்கும்‌, அவற்றின்‌ பாராளுமன்ற உறுப்பினர்‌களுக்கும்‌ அதிகமாக உள்ளது. சமூகம்‌ திருந்தாத வரை எந்தவொரு நல்ல மாற்றத்தையும்‌ ஏற்படுத்த முடியாது.

SOURCEஎஸ். ரிபான் - விடிவெள்ளி