குர்ஆனின் அடிப்படையில் சட்டங்கள் குறித்து முஸ்லிம் சமூகத்துக்கிடையில் கூட இணக்கப்பாடு இல்லை! -அதுரலியே ரதன தேரர்

முஸ்லிம் சட்டத்தின் காதி நீதிமன்றம் மூலமாக அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. பெண்களின் உரிமை மட்டுமல்லாது சிறுவர் உரிமைகளும் பறிக்கப்படுகிறது. எனவே முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்தை சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் சபையில் தெரிவித்தார். முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்தை சட்டத்தை நீக்கும் தனிநபர் பிரேரணையையும் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,ஒரே சட்டம் ஒரே நாடு என்ற விடயத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கம் தமது தேர்தல் கொள்கையில் முன்வைத்துள்ளது. சகலருக்கும் ஒரே சட்டம், இன மத, பிரதேச பேதமின்றி சட்டம் கையாளப்பட வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். எனினும் முஸ்லிம் சட்டம் இதற்கு மாறுபட்ட ஒன்றாகும். குர்ஆன் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இந்த சட்டங்கள் குறித்து முஸ்லிம் சமூகத்துக்கிடையில் கூட இணக்கப்பாடு இல்லை. இலங்கையைப் பொறுத்தவரையில் பத்து சத வீதமான முஸ்லிம்கள் நாட்டில் வாழும் நிலையில் அவர்களின் திருமணம் மற்றும் விவாகரத்து என்பன முஸ்லிம் சட்டத்தின் கீழேயே கையாளப்படுகின்றன. காதி நீதிமன்றம் என்ற பெயரில் இயங்கும் இந்த முறைமையில் நீதிபதிகளுக்கு சம்பள கொடுப்பனவுகளை வழங்குவது நீதி அமைச்சாகும். ஆனால் திருமண சட்டம் குறித்து நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு எந்தவொரு தெளிவும் இல்லை.

எனவே காதி நீதிமன்றம் மூலமாக அரசியல் அமைப்பின் 12(1) சரத்தின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதால் இவற்றை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நீதி அமைச்சர் ஏற்றுக் கொள்வாரா? திருமணம் என்பது மணமுடிக்கும் இருவரது இணக்கப்பாடே தவிர பெற்றோர் உறவினரது இணக்கப்பாடு அல்ல என்பதை விளக்கிக்கொள்ள வேண்டும். ஆனால் காதி நீதிமன்றம் மூலம் வலியுறுத்துவது குர்ஆன் வாக்கியங்களேயாகும். அதேபோல் முஸ்லிம் சட்டத்தில் திருமணத்தில் பெண்ணின் விருப்பம் அவசியமில்லை. குறிப்பாக கூறுவதென்றால் திருமண சான்றிதழில் கையெழுத்திடக்கூட பெண்ணுக்கு உரிமை இல்லை. எனவே முஸ்லிம் சட்டங்களினால் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றது.

மேலும் முஸ்லிம் சட்டத்தின் கீழ் சிறுவர்கள் பாதிக்கப்படுவதை அரசாங்கம் அறிந்துள்ளா? எனவே முஸ்லிம் சட்டம் குறித்து தீர்மானம் எடுப்பது நீதி அமைச்சா அல்லது ஜம்இய்யதுல் உலமா சபையா என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என்றார். முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்தை சட்டத்தை நீக்கும் தனிநபர் பிரேரணையையும் நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

VIAmetronews
Previous articleஇன்றைய தங்க விலை (09-02-2021) செவ்வாய்க்கிழமை
Next articleஇன்றைய தங்க விலை (10-02-2021) புதன்கிழமை