முஸ்லிம் பிரதேசங்களை இலக்குவைத்து அதிக PCR பரிசோதனைகள் ஏன்?

கொவிட்‌19 இனால்‌ உயிரிழக்கும்‌ முஸ்‌லிம்களின்‌ ஜனாஸாக்கள்‌ தொடர்ந்தும்‌ எரிக்கப்பட்டு வருவது முஸ்லிம்‌ உம்‌மாவின்‌ ஆன்மாவை கொதிப்படைய வைத்துள்ளது. பல்வேறு முனைகளிலும்‌ சாத்வீக வழியில்‌ போராடி எந்தத்‌ தீர்வும்‌ கிடைக்காத நிலையில்‌ தொடர்ந்தும்‌ முஸ்லிம்‌ சமூகத்தின்‌ அடிப்படையான கலாசார உரிமையொன்று அதிகார வர்க்‌கத்தால்‌ மீறப்பட்டு வருகின்றது.

இவ்விவகாரத்தை ஒட்டி எழும்‌ வேறு சில விவாதங்கள்‌ (ஜனாஸாக்களை மாலைதீவில்‌ அடக்கம்‌ செய்தல்‌ போன்‌றன) முஸ்லிம்களின்‌ எதிர்கால இருப்புக்‌ குறித்த பாரிய அச்சத்தையும்‌ ஐயத்‌தையும்‌ உருவாக்கியுள்ளது.

கபன்‌ சீலைப்‌ போராட்டத்தால்‌ அரசு சற்று திக்குமுக்காடியுள்ள போதும்‌ ஜனாஸாக்களை எரியூட்டும்‌ அதன்‌ பிடிவாதம்‌ மனிதாபிமான அடிப்படைகளையும்‌ ஜனநாயக விழுமியங்களையும்‌ மீறி தொடர்ந்த வண்ணம்‌ உள்ளது.

அழுத்தம்‌ தெரிவிக்கும்‌ ஆற்றலோ பேரம்‌ பேசும்‌ ஆற்றலோ கிஞ்சிற்றும்‌ இல்‌லாத சமூகத்தின்‌ உளவியலை, தாம்‌ எதிர்‌பார்ப்பது போன்று கட்டமைக்க விரும்பும்‌ அதிகார வர்க்கத்தின்‌ ஒவ்வொரு நகர்வும்‌ முஸ்லிம்களை திணற வைத்துள்ளது. கொத்தடிமைத்‌ தனத்தின்‌ தொடக்க நிகழ்‌வுகளாக இவை இருக்குமோ என்ற சந்தேகத்தை அவை கிளறி வருகின்றன.

கொரோனா இரண்டாம்‌ அலை பொருளாதார, சமூக, உளவியல்‌ பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது என்பது வெளிப்படை. சமூகம்‌ ஒருவகை மனஉளைச்சலுக்கு உட்பட்டு வருகின்றது. பிசிஆர்‌ எழு மாற்று சோதனை, லொக்டவுலள்‌, நிகழும்‌ மரணங்கள்‌ மீது கொரோனா முத்திரை, வணிக முடக்கம்‌ என சங்கிலித்‌ தொடர்‌ போல்‌ மனஉனைச்சலைத்‌ தரும்‌ காரணிகள்‌ திட்டமிட்டு திணிக்கப்படுவது போன்றே தெரிகின்றது.

நாட்டிலுள்ள பிற சமூகங்களுக்கும்‌ இது போன்ற நிலைமை உள்ளதே என்ற தேசிய நியாயத்தை முன்வைக்க முடியாத அளவு ஒப்பீட்டு ரீதியில்‌ அதிக இழப்‌பையும்‌ அதிக பாதிப்பையும்‌ முஸ்லிம்கள்‌ சுமந்து வருகின்றனர்‌.

2019 ஆம்‌ ஆண்டு ஈஸ்டர்‌ தாக்குதலின்‌ நெருக்குவாரங்களை சந்தித்து மனமுடைந்தது போன்று 2020 முழுவதும்‌ கொரோனாவின்‌ நெருக்குவாரங்களுக்கு முகம்கொடுத்து ஒரு திணறல்‌ நிலையை ஒட்டுமொத்த சமூகமும்‌ எதிர்கொண்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேறி, வேறெங்கேனும்‌ சென்று குடும்பத்தோடு குடியமரலாமா என்று பலரை சிந்திக்கத்‌ தூண்டும்‌ அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

தற்போதைய கோவிட்‌19 தொடர்பான சுகாதாரத்‌ துறையினரின்‌ நகர்வுகளை உன்னிப்பாக நோக்கும்போது எழுப்பப்படாத சில கேள்விகளும்‌ அளிக்கப்படாத சில பதில்களும்‌ நம்மைக்‌ குறுக்கீடு செய்‌வது தவிர்க்க முடியாதது. PCR, RAT ஆகிய சோதனைகள்‌ ஒப்பீட்டு ரீதியில்‌ முஸ்‌லிம்கள்‌ வாழும்‌ பிரதேசங்களை விரட்டி விரட்டி மேற்கொள்ளப்படுகின்றன. அங்கும்‌ ஒரு தொற்றாளர்‌ கண்டுபிடிக்கப்‌பட்டால்‌ மீளவும்‌ எழுமாற்று முறையில்‌ சோதனைகள்‌ தொடர்கின்றன. அதன்‌ பொழுது புதிய தொற்றாளர்கள்‌ கண்டுபிடிக்கப்படுகின்றனர்‌. பின்னர்‌ அப்பிரதே சங்களின்‌ கதையோ வேறு திசையில்‌ செல்கிறது. அவை முடக்கப்படுகின்றன.

முடக்கப்பட்ட பிரதேசத்தில்‌ இடம்‌ பெறும்‌ உயிரிழப்பு கொரோனாவினால்தான்‌ நிகழ்ந்துள்ளது என்பதை வலிந்து கண்டுபிடிப்பதற்கு ஜனாஸாக்‌களும்‌ பிசிஆர்‌ சோதனைக்கு உட்படுத்‌தப்படுவதாகக்‌ கூறப்படுகிறது. முடிவில்‌ அத்தகைய மரணங்களும்‌ கொரோனா தொற்றினாலேயே நிகழ்ந்துள்ளதாக அவசர அவசரமாக அறிக்கை செய்யப்பட்டு ஜனாஸாக்கள்‌ உடனடியாக எரிக்கப்படுகின்றன.

இது இன்று ஒரு படிவார்ப்புச்‌ செயன்‌ முறை போல பல்வேறு இடங்களிலும்‌ தொடர்வது ஆச்சரியமளிக்கின்றது. இதிலுள்ள மிகப்‌ பெரிய முரண்பாடுகளில்‌ ஒன்று, பிசிஆர்‌ எழுமாற்று சோதனை (Random Test) பெரும்பான்மைச்‌ சிங்களவர்கள்‌ மத்தியில்‌ அவர்களது சனத்தொகைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படவில்லை என்பதோடு, எழுமாற்றில்‌ ஈடுபடுத்தப்‌படும்‌ குறைந்த தொகை மாதிரிகளில்‌ மிகக்‌ குறைந்த தொற்றாளர்களே அடையாளம்‌ காணப்படுவதால்‌ அங்கு லொக்‌டவுனும்‌ இல்லை கொரோனா மரணங்‌களும்‌ இல்லை.

இந்த வாதத்தை வலிமைப்படுத்தும்‌ ஓர்‌ எடுத்துக்‌ காட்டு இது. மேல்‌ மாகாணம்‌, கம்பஹா மாவட்டம்‌. அத்தனகல்ல பிரதேச செயலகப்‌ பிரிவுக்கு உட்பட்ட MOH அலுவலகத்தின்‌ அறிக்கை மீதான பார்வை இவ்வுண்மையை உறுதி செய்‌கின்றது.

சிங்களப்‌ பிரதேசங்களில்‌ எடுக்கப்பட்ட எழுமாற்று மாதிரிகள்‌ மிகக்‌ குறைவாகும்‌. எடுத்துக்காட்டாக நிட்டம்புவ மேற்கு (5). எனவே தொற்றாளர்‌ எண்ணிக்கையும்‌ மிகக்‌ குறைவாகும்‌. சனத்தொகை அதிகமாக உள்ள மேற்போந்த சிங்களப்‌ பிரதேசங்களிலிருந்து தன்னியல்பாக பிசிஆர்‌ சோதனைக்கு வருகை தந்துள்ள சிங்களவர்களின்‌ தொகை மிகக்‌ குறைவு என்‌பதை இந்த அட்டவணை காட்டுகின்றது.

முஸ்லிம்கள்‌ வாழும்‌ திஹாரிய பிரதேசத்தில்‌ 89 பேர்‌ சோதனைக்கு உள்ளாக்‌கப்பட்டுள்ளனர்‌. அதில்‌ 25 பேர்‌ அடையாளம்‌ காணப்பட்டுள்ளனர்‌. அதனால்‌ திஹாரிய டொக்டவுன்‌ செய்யப்பட்‌டுள்ளது.

கடந்த சில வாரங்களாக திஹாரியை அட்டுலுகமயுடன்‌ ஒப்பீடு செய்து முஸ்லிம்கள்‌ பிசிஆர்‌ பரிசோதனைக்கு முன்வருவதில்லை என்று பொய்ப்‌ பிரசாரம்‌ செய்து வந்த ஹிரு, தெரண இனவாத ஊடகங்களின்‌ முகங்களில்‌ இந்த அறிக்கை ஓங்கி அறைகிறது. பிசிஆர்‌ சோதனை முஸ்லிம்களுக்கு மத்தியில்‌ உள்ள கொரோனா தொற்றாளர்களை வலிந்து கண்டுபிடித்து அவர்களை தொற்றிலிருந்து பாதுகாக்கும்‌ அக்கறையோடுதான்‌ நடைபெறுகின்றதா என்பதை நாம்‌ எளிதில்‌ ஊகித்து அறியலாம்‌.

நிட்டம்புவ, அத்தனகல்ல என்பன சிங்களவர்கள்‌ மிகச்‌ செறிவாக வாழும்‌ பிரதேசங்கள்‌. ஆனால்‌ இரண்டிலும்‌ 22 பேர்‌ மட்‌டுமே பிசிஆர்‌ எழுமாற்று சோதனைக்கு உட்பட்டுள்ளனர்‌. இந்தத்‌ தரவிலிருந்து பிசிஆர்‌ இன்‌ அரசியல்‌ பின்புலத்தை நாம்‌ இலகுவில்‌ புரிந்துகொள்ளலாம்‌.

முஸ்லிம்கள்‌ பிசிஆர்‌ சோதனையை திட்டமிட்டு உதாசீனம்‌ செய்யவோ புறக்கணிக்கவோ இல்லை. சமீபத்தில்‌ முடக்கப்‌பட்ட குருணாகல்‌ மாவட்டத்தின்‌ பந்தாவ கிராமத்தில்‌ சில தினங்களுக்கு முன்னர்‌ சுமார்‌ 250 பிசிஆர்‌ எழுமாற்றுப்‌ பரிசோதனைகள்‌ மேற்கொள்ளப்பட்டன. 250 முஸ்லிம்கள்‌ மிகச்‌ சிறிய கிராமமொன்நிலிருந்து முன்வந்ததனாலேயே இது சாத்தியமானது.

இன்னொரு புறம்‌ பிசிஆர்‌ இன்‌ நம்பகத்‌ தன்மை குறித்து பொதுவாக நாட்டில்‌ ஏற்பட்டுள்ள எதிர்மறையான கருத்துக்கள்‌ முஸ்லிம்களிடம்‌ வலுவடைந்து வருவதும்‌ தட்டிக்‌ கழிக்க முடியாத உண்‌மையாகும்‌. பிசிஆர்‌ சோதனை 100% விஞ்ஞானபூர்வமானதும்‌ நம்பகத்தன்மை கொண்டதுமான சோதனையா என்ற கேள்‌ வியை இலங்கை மருத்துவர்கள்‌ ஏலவே எழுப்பத்‌ தொடங்கிவிட்டனர்‌. ஏனெனில்‌,கோவிட்‌19 வைரஸையும்‌ ஒரு மனிதனைப்‌ பீடித்துள்ள பிற வைரஸ்களையும்‌ பிசிஆர்‌ சோதனையால்‌ வேறு பிரித்தறிய முடியாமல்‌ உள்ளதாக மருத்துவர்கள்‌ சிலர்‌ கூறுகின்றனர்‌.

எடுத்துக்காட்டாக சளி, ஜலதோசம்‌, பிற வைரஸ்‌ காய்ச்சலால்‌ பாதிக்கப்பட்ட ஒருவர்‌ பிசிஆர்‌ சோதனை செய்தால்‌ அவரும்‌ கொரோனா தொற்றாளர்‌ என்றே அறிக்கையிடப்படுகிறார்‌. இது இன்று சாதாரண மக்களுக்கு மத்தியிலும்‌ ஒரு பேசுபொருளாகியுள்ளது.

கடந்த வாரம்‌ பிரிட்டனின்‌ முன்னணி சமூக செயற்பாட்டாளர்‌ ஒருவர்‌ தன்னை பிசிஆர்‌ பரிசோதனைக்கு உட்படுத்‌தினார்‌. ஒரே தினத்தில்‌ மூன்று முறை அவர்‌ சோதனையை மேற்கொண்டார்‌. வைத்தியசாலை அறிக்கைகள்‌ முரண்‌பட்டு நின்றது. காலையில்‌ எடுக்கப்‌பட்ட சோதனையில்‌ நெகடிவ்‌ என்றும்‌. சில மணித்தியாலங்களின்‌ பின்னர்‌ பகல்‌ வேளையில்‌ மேற்கொண்ட சோதனையில்‌ பொசிடிவ்‌ என்றும்‌ மீண்டும்‌ மாலை வேளையில்‌ மேற்கொண்ட சோதனையில்‌ நெகடிவ்‌ என்றும்‌ காட்டியது. இது உலக ஊடகங்களில்‌ பகிரங்கப்படுத்‌ தப்பட்டதை நாம்‌ அறிவோம்‌.

கொரோனா தொற்று குறித்து ஏனைய சமூகங்களை விட முஸ்லிம்களுக்கு மத்தியில்‌ ஒரு மரண பீதி பரப்பப்பட்டுள்‌ளது. இலங்கையைப்‌ பொறுத்தவரையில்‌ அவ்வாறு அஞ்சுவதற்கான நியாயங்கள்‌ இல்லை. ஏனெனில்‌, ஐரோப்பிய நாடுகளில்‌ பரவி வரும்‌ கொரோனா வைரஸுக்கும்‌ இலங்கையில்‌ தொற்றி வரும்‌ கொரோனா வைரஸாக்கும்‌ இடையில்‌ பெருத்த வேறுபாடு உள்ளது.

அரசியல்‌ அழுத்தத்திற்கு அப்பால்‌ நின்று செயல்படும்‌ மருத்துவர்கள்‌ சாதாரண தடிமன்‌, காய்ச்சல்‌ போன்றதே கொரோனா வைரஸின்‌ தாக்கமும்‌ என்‌கிறார்கள்‌. ஏனெனில்‌. இலங்கையைப்‌ பாதித்துள்ள வைரஸின்‌ வீரியம்‌ ஐரோப்‌பாவுடன்‌ ஒப்பிடும்போது குறைவானதாகும்‌. இந்த வித்தியாசத்தை உலக சுகாதார அமையமும்‌ ஒப்புக்கொண்டுள்ளது.

இலங்கையின்‌ சுகாதாரத்‌ துறை மற்றும்‌ மருத்துவ வட்டாரங்களின்‌ வெளிப்‌படைத்‌ தன்மை குறித்து ஐயத்தைத்‌ தோற்றுவிக்கும்‌ மற்றொரு விடயம்‌, வேறு நோய்களால்‌ பாதிக்கப்பட்டு மரணிப்பவர்களின்‌ பிரேதங்களை பிசிஆர்‌ சோதனைக்கு உட்படுத்துவதாகும்‌. இலங்‌கையின்‌ 46 ஆவது மரணம்‌ பதிவாகியசந்தர்ப்பத்தில்‌ கொரோனா ஒழிப்புக்குப் ‌பொறுப்பாக இருக்கின்ற இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நேரடியாகக்‌ கொரோனாவின்‌ பாதிப்பினால்‌ உயிரிழந்‌தவர்கள்‌ வெறும்‌ ஐந்து பேர்தான்‌ என்று குறிப்பிட்டமை இங்கு நினைவுகூரத்தக்‌கது.

இதய நோய்‌, நீரிழிவு, சிறுநீரக நோய்‌, புற்றுநோய்‌ போன்ற நீடித்த நோயுள்ளவர்கள்‌ மீது கொரோனாவின்‌ தாக்கம்‌ அதிகம்‌ என்பதை சம்பவித்த மரணங்கள்‌ காட்டுகின்றன. ஆனால்‌, இதையும்‌ கடந்து 70 வயதைத்‌ தாண்டியவர்கள்‌ இயற்கையாக மரணமடையும்போது அவர்களுக்கு பிசிஆர்‌ பரிசோதனை மேற்கொண்டு அவரது மரணம்‌ கோவிட்‌ தொற்றினால்‌ இடம்பெற்றுள்ளது என்று வலிந்து கண்டுபிடித்து அவரது உடலை எரியூட்டுவதற்கு அவசரம்‌ காட்டப்படுவதேன்‌? இது முஸ்லிம்கள்‌ மத்தியில்‌ பல்‌வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக்‌ கட்டுரை எழுதப்படும்போது கொரோனாவினால்‌ 165 மரணங்கள்‌ நேர்ந்துள்ளன. அதில்‌ 110 பேர்‌ முஸ்‌லிம்கள்‌ என்பது மிகுந்த திணறலைத்‌ தருகின்றது. கொரோனா வைரஸ்‌ கூட முஸ்லிம்களைச்‌ சரியாக எவ்வாறு அடையாளம்‌ காண்கிறது என்பதுதான்‌ இங்‌குள்ள கேள்வியாகும்‌.

அதேவேளை, முஸ்லிம்‌ பிரதேசங்கள்‌ மீது பிசிஆர்‌ எழுமாற்று சோதனை விரட்டி விரட்டி மேற்கொள்ளப்படுவதேன்‌ என்ற ஐயமும்‌ எழுவது இயல்பானது. 20 நாள்‌ நிரம்பிய ஷாயிக்‌ எனப்படும்‌ குழந்‌தையின்‌ மரணம்‌, 50 வயதான கொலன்‌னாவையைச்‌ சேர்ந்த பெண்ணின்‌
மரணம்‌, மரணப்‌ படுக்கையிலிருந்து சில மாதங்களின்‌ பின்னர்‌ வீட்டில்‌ மரணித்தவர்கள்‌ தொடர்பில்‌ மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்‌ சோதனை, இவை அனைத்தும்‌ சுகாதாரத்‌ துறையின்‌ வெளிப்படைத்‌ தன்மை பற்றிய சந்தேகத்தை எழுப்புகின்றது. ஐனாஸாக்களை எரிப்பதற்கு முன்வைக்கப்படும்‌ அறிவுபூர்வமற்ற போலி வாதங்களை இச்சந்தேகம்‌ தோலுரிக்கின்றது.

மேல்‌ மாகாணம்‌ இன்று கொரோனாப்‌ பூதமாகவே ஊடகங்களில்‌ காட்டப்படுகின்றது. இங்கு லொக்‌ டவுன்‌ செய்யப்பட்‌டிருக்கும்‌ அநேக இடங்கள்‌ முஸ்லிம்கள்‌ வாழும்‌ பிரதேசங்கள்‌. தொற்றாளர்களில்‌

அதிகமானவர்களும்‌ முஸ்லிம்களாகவே உள்ளனர்‌. கொழும்பில்‌ மாளிகாவத்தை, பஞ்சிகாவத்தை, வாழைத்தோட்டம்‌, தெமடகொட. புதுக்கடை, மருதானை, மோதர, மட்டக்குளிய, கொலன்னாவ, வெல்லம்‌பிடிய என்பனவே முடக்கப்பட்டுள்ளன. வெள்ளவத்தையில்‌ நஸீர்‌ வத்தை முடக்‌கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில்‌ அடுலுகம,வியங்கல்ல, பாணந்துறை, தொட்டவத்தை என்பன முடக்கப்பட்டுள்ளன. கம்பஹாவில்‌ திஹாரிய, பூகொடகுமாரிமுல்ல என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்‌ளன. கிட்டிய எதிர்காலத்தில்‌ எழுமாற்றுப்‌ பரிசோதனையை நிறைவுசெய்துள்ள கஹடோவிட, உடுகொட, ஒகடபொல, மல்வானை என்பனவும்‌ முடக்கப்படலாம்‌.

கிழக்கு மாகாணத்தில்‌ முஸ்லிம்கள்‌ மிகச்‌ செறிவாக வாழும்‌ கரையோரப்‌ பகுதிகள்‌ முடக்கப்பட்டு சிவப்பு வலயமாக (150 2௦0௦) பிரகடனப்படுத்தப்பட்டுள்‌ளது. அக்கரைப்பற்று முதல்‌ கல்முனை வரையான முக்கிய கிராமங்கள்‌ தனிமைப்‌படுத்தப்பட்டுள்ளன.

ஆக, தொற்றாளர்களில்‌ அதிகமானவர்கள்‌ முஸ்லிம்கள்‌ எனக்‌ காட்டப்படுகின்றது. அதனால்‌, இடம்பெறும்‌ மரணங்களில்‌ அதிகமானோர்‌ முஸ்லிம்கள்‌ என்பதும்‌ நியாயப்படுத்தப்படுகின்றது. இந்நிலைமை முஸ்லிம்களின்‌ பெளதிக இருப்பை மட்டுமன்றி, மத கலாசார அடிப்படை உரிமைகளையும்‌ விட்டுக்‌ கொடுக்கத்‌ தூண்டுகின்றது. அதையும்‌ தாண்டி அவர்களது தற்போதைய பண்டிகைக்‌ கால வியாபார முயற்சிகளையும்‌ முடக்குவதற்குக்‌ காரணமாக்கப்படுகின்றது.

தென்‌ மாகாணத்தில்‌ காலி, மாத்‌தறை. ஹம்பாந்தோட்டை என்பவற்றில்‌ பிசிஆர்‌ எழுமாற்று சோதனை போதியளவு இடம்பெறவில்லை என்பதும்‌ தொற்றாளர்கள்‌ அடையாளம்‌ காணப்படவில்லை என்பதும்‌ கொரோனா அரசியலின்‌ பின்புலத்தை தோலுரிக்கின்றது. முடக்கப்படும்‌ முஸ்லிம்‌ பிரதேசங்கள்‌ மேலே சொன்ன ஆபத்துக்களைத்‌ தாண்டி, எதிர்நோக்கியுள்ள இன்னொரு அபாயமே அவர்களுக்குப்‌ பெரும்‌ மன உளைச்சலைத்‌ தருகின்றது.

வயதாகி, நீடித்த நோய்களால்‌ இயற்கை மரணம்‌ எய்தும்‌ ஜனாஸாக்களையேனும்‌ நல்‌லடக்கம்‌ செய்வதற்கு அனுமதி வழங்‌காமை, பொலிஸார்‌, கிராம சேவகர்‌, பிஎச்ஐ ஆகியோர்‌ சகிதம்‌ அந்த ஜனாஸாக்கள்‌ வைத்தியசாலைக்குக்‌ கொண்டு செல்லப்பட்டு பிசிஆர்‌ சோதனை நடத்தப்பட்டு, அம்மரணம்‌ கொரோனா தொற்றினால்‌ நிகழ்ந்துள்ளதாக அறிக்கை யிடப்படுகின்றது. இந்நிலையில்‌ நமது வீடுகளில்‌ உள்ள வயதானோர்‌ நிம்மதியாக மரணிப்பதற்குக்‌ கூட விரும்பாத ஒரு மனஉளைச்சல்‌ திட்டமிட்டு உருவாக்‌கப்படுகின்றது. எனவேதான்‌, முஸ்லிம்கள்‌ கொரோனா விவகாரம்‌ கையாளப்படும்‌ விதத்தினை அச்சத்தோடும்‌ ஐயத்தோடும்‌ பார்க்கத்‌ தொடங்கியுள்ளனர்‌.

எல்லாவற்றையும்‌ சந்தேகிப்பது ஒரு வகை தாழ்வு மனப்பான்மைதான்‌. ஆனால்‌, ஒன்றையுமே சந்தேகிக்காமல்‌ இருப்பது அதை விட ஆபத்தானது என்று ஒருமுறை ஜேர்மனின்‌ தத்துவஞானி ஹெகல்‌ கூறியமைதான்‌ இந்த இடத்தில்‌ நினைவுக்கு வருகின்றது. ஏதோ புரிந்துகொள்ள முடியாத ஒரு மர்மம்‌ நீடிக்கின்றது என்பது மாத்திரம்‌ உண்மை. அதைப்‌ புரிந்துகொள்ளும்‌ நிலையில்‌ முஸ்லிம்‌ சமூகம்‌ இல்லை என்பதுதான்‌ அதைவிடவும்‌ துயரமானது.

VIAவிடிவெள்ளி
SOURCEமாலிக்‌ பத்ரி
Previous articleகொழும்பில் நாளை முதல் விடுவிக்கப்படும், புதிதாக முடக்கப்படும் பிரதேசங்கள்!
Next articleஇன்றைய தங்க விலை (28-12-2020) திங்கட்கிழமை