ஜனாஸா எரிப்பு தொடர்ந்தால் முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படைவாதத்துக்குள் தள்ளப்படலாம்! –நீதி அமைச்சர் அலிசப்ரி

கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தால் முஸ்லிம் இளைஞர்கள் காலப்போக்கில் மன அழுத்தத்துக்கு உள்ளாகி அடிப்படைவாத குழுக்களுடன் இணைந்து கொண்டால் அது பாரிய விபரீதத்திலே முடிவடையும். எனவே, அந்த நிலைக்கு செல்ல இடமளிக்கக்கூடாது.

அத்துடன் மரணிப்பவர்களின் உடலில் இருந்து வைரஸ் பரவுமா இல்லையா என்பதை வைரஸ் தொடர்பான நிபுணர்களே தீர்மானிக்க வேண்டும். மாறாக புவியியலாளர்களுக்கு அதனை தீர்மானிக்க முடியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடு மாறாமல் இருப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளையும் எமது நாடு, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலின் பிரகாரமே அனைத்தையும் மேற்கொண்டு வருகிறது. அதன் பிரகாரமே மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்ய அனுமதிப்பதுபோல் அடக்கம் செய்யவும் அனுமதி வழங்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் வாதமாக உள்ளது. அது முறையற்ற வாதமல்ல.

கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய உலகில் இருக்கும் நாடுகளில் சீனாவை தவிர மற்ற அனைத்து நாடுகளும் அனுமதிக்கும்போது இலங்கை மாத்திரம் இதற்கு அனுமதிக்காமல் இருப்பது பாரிய பிரச்சினையாகும். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலில், மரணிப்பவர்களை தகனம் மற்றும் அடக்கம் செய்ய அனுமதிக்கும்போது இலங்கையும் சீனாவும் மாத்திரமே அதனைப் பின்பற்றாமல் உள்ளன. இதனை இனவாதமாக பார்க்கக்கூடாது. ஒரு சமூகத்தை இலக்கு வைத்து இதனை செய்வதாக இருந்தால் அது நல்லதல்லை.

அத்துடன் முஸ்லிம்களின் உடல்களை எமது நாட்டில் எரிப்பது தொடர்பில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசப்பட்டுள்ளது. அதேபோன்று அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு 51 நாடுகளை உள்ளடக்கிய முஸ்லிம் நாடுகளின் ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல சர்வதேச நிறுவனங்கள் எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளன. இது எமது நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது

மேலும் எமது இந்தத் தீர்மானத்தால் முஸ்லிம் இளைஞர்களில் சிலர் அடிப்படைவாதத்தின்பால் தள்ளப்படுவார்களோ என்ற அச்சம் எனக்குள் உள்ளது. மரணிப்பவர்களை அடக்கம் செய்யக் கூட உரிமை இல்லை என்ற மன அழுத்தத்துக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டு, அடிப்படைவாதிகளுடன் இணைந்து கொண்டால் அது பாரிய விபரீதத்திலேயே முடிவடையும். இதற்கு இடமளிக்கக்கூடாது.

மேலும் மாலைதீவுக்கு கொண்டுசெல்வது தொடர்பாகவும் பேசப்பட்டு வருகிறது. இதற்கு அனுமதிப்பது சர்வதேச ரீதியில் எமக்கு மேலும் பிரச்சினையை ஏற்படுத்தும். மாலைதீவில் அடக்க அனுமதிக்க முடியுமானால் ஏன் எமது நாட்டில் முடியாது என்றே நாங்கள் கேட்கின்றோம் என்றார்.

Previous articleஇன்றைய தங்க விலை (18-12-2020) வெள்ளிக்கிழமை
Next articleஇன்றைய தங்க விலை (19-12-2020) சனிக்கிழமை