மல்கம் ரஞ்சித் – ரிஸ்வி முப்தி ஆகியோரிடையே நடந்த, முக்கியத்துவமிக்க கடிதப் பரிமாற்றம் (தமிழில்)

“சிலோன் டுடே” பத்திரிக்கையில் வெளியான காடினல் மெல்கம் ரஞ்ஜித் அவர்களின் ஆக்கத்திற்கு ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் எழுதிய மடல் மற்றும் அதற்கு காடினல் அவர்களின் பதில் மடல்

15.12.2020

“சிலோன் டுடே” பத்திரிக்கையில் 04.12.2020 அன்று ஷரீஆ சம்பந்தமாக வெளியான காடினல் மெல்கம் ரஞ்ஜித் அவர்களின் ஆக்கத்திற்கு அகில இலங்கை ஜமிஇய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் எழுதிய மடல் மற்றும் அதற்கு காடினல் அவர்களின் பதில் மடல் இங்கு காணலாம்.

காடினல் மெல்கம் ரஞ்ஜித் அவர்களின் ஆக்கத்திற்கு அகில இலங்கை ஜமிஇய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் எழுதிய மடல் 

மரியாதைக்குரிய அருட்தந்தை மெல்கம் ரஞ்ஜித் பேராயர்

பேராயர் இல்லம், ஞானார்த பிரதீப மாவத்தை,  கொழும்பு 08.

பெருமதிப்பிற்குரிய அருட்தந்தை அவர்களே,

2020 டிசம்பர் 4 ஆம் திகதி “சிலோன் டுடே” பத்திரிகையில் இஸ்லாமிய ஷரீஆ பற்றித் தாங்கள் குறிப்பிட்டதாக வெளியிடப்பட்டிருந்ததைக் கண்டு நாம் பேரதிர்ச்சி அடைந்தோம். ஷரீஆ சட்டம் முஸ்லிம்களுக்கு முக்கியமானதாக இருந்தாலும் அதை நாட்டின் சட்டமாக வரைவிலக்கணம் செய்யவோ, அறிமுகம் செய்யவோ, அதை வேறு சமூகத்தினருக்கு திணிக்கவோ, அதன் மூலம் அவர்களை அச்சுறுத்தவோ, அவர்களை ஆட்டிப்படைக்கவோ முடியாது என்று தாங்கள் கூறியதாக அச்செய்தியில் வந்துள்ளது.

அது மட்டுமன்றி, 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று நடைபெற்ற கோரத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் மூலம் மேற்படி தாக்குதல்களில் ஷரீஆ சட்டம் மற்றும் அதை போதிக்கும், மேம்படுத்தும் அமைப்புக்கள் பாரியதொரு பாத்திரத்தில் இருந்து செயற்பட்டதாகவும் தாங்கள் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நமது கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் தேவ ஆராதனையில் ஈடுப்பட்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட அக்கொடிய தாக்குதல் நடைபெற்ற உடனேயே தாங்கள் காட்சிப் படுத்திய பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் சகோதரத்துவ உணர்ச்சியை நாம் இன்றும் நினைவு கூறுகின்றோம். அவ்வடிப்படையில், மேற்படி கூற்றுக்களை தாங்கள் செய்ததாக திரித்தும், பின்புலத்தை விட்டு விலகியும் வெளியிடப்பட்டுள்ளது என்றே நாம் நம்புகின்றோம்.

அவ்வாறில்லாத பட்சத்தில், ஷரீஆ சட்டம் விடயத்தில் தவறான எண்ணங்களை தாங்கள் கொண்டிருப்பின் அதற்கான சரியான தெளிவை தரும் நோக்கத்துடனேயே இக்கடிதத்தை நாம் தங்களுக்கு எழுதுகின்றோம். தற்காலத்தில் உலகில் அதிகம் தவறாக புரியப்பட்டுள்ள மற்றும் திரிக்கப்பட்ட வியாக்கியானங்கள் தரப்படுகின்ற மதம் இஸ்லாமாகவே இருக்கின்ற நிலை காரணமாகவும் இது போன்ற தவறான கருத்துக்கள் எவருக்கும் ஏற்பட இடமுண்டு.

முஸ்லிம்கள் ஷரீஆ சட்டத்தை முக்கியமாகக் கருதுகின்றனர் என தாங்கள் ஏற்றிருப்பதற்கு தங்களுக்கு நாம் நன்றி செலுத்துகின்றோம். உண்மையில் இன்று ஷரீஆ சட்டம் உலகளாவிய ரீதியில் சுமார் 200 கோடி முஸ்லிம்களின் வாழ்வை சட்டம் மற்றும் ஒழுக்கம் ஆகிய கோணங்களில் அதிசிறப்பாக நெறிப்படுத்தியுள்ளமை வெளிப்படையாகும். மனித வாழ்வில் ஷரீஆ சட்டம் வழிநடத்தல் தராத எந்த அம்சமும் கிடையாது எனலாம். மனித உரிமைகள், பரஸ்பர அன்பு, அக்கறை, பகிர்ந்து கொள்ளல், நம்பிக்கைப் பொறுப்பு, சமூக பொறுப்புக் கூறல் உட்பட அனைத்து விடயங்களுக்குமான வழிகாட்டல்களின் ஊற்றாகவே ஷரீஆ சட்டக்கோவை திகழ்கின்றது.

இது பற்றி அல் குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:

(இஸ்லாமிய) மார்க்கத்தில் வற்புறுத்தல் இல்லை. (ஏனெனில்) தவறில் இருந்து உண்மை தெளிவாக வேறுபடுத்தப்பட்டு விட்டது. (2:256).

மத வற்புறுத்தல் இஸ்லாமிய போக்கல்ல என்பதை வலியுறுத்தும் பல இறை வசனங்களில் இதுவும் ஒன்றாகும். சகிப்புத்தன்மையே இஸ்லாம் என அல் குர்ஆன் கூறுகின்றது. மேலும், பன்முகத்தன்மையை இஸ்லாம் ஏற்பதோடு ஐக்கியத்தை அது போற்றி மேம்படுத்துகின்றது. மற்றுமொரு அல் குர்ஆன் வசனம் இவ்வாறு கூறுகின்றது:

உங்கள் ஒவ்வொருவருக்கும் நாம் ஒவ்வொரு சட்டத்தையும் வழிமுறையையும் ஆக்கினோம். அல்லாஹ் நாடியிருந்தால் மனித இனம் அனைத்தையும் ஒரே சமூகமாக ஆக்கியிருப்பான். (5:48).

நாம் அறிந்தமட்டில் நாட்டின் சட்டக் கோவையாக ஷரீஆ சட்டம் ஆக வேண்டும் என்றோ, அது ஏனைய சமூகத்தினருக்கு திணிக்கப்பட வேண்டும் என்றோ இலங்கை முஸ்லிம் சமூகம் ஒரு போதும் கருத்துத் தெரிவிக்கவில்லை. அவ்வாறு கூறுவது இஸ்லாமிய நிலைப்பாட்டுடன் பொருந்தவும் மாட்டாது.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஷரீஆ சட்டம் தாக்கம் செலுத்தியதாக கருத்துக் கூறப்படும் விசாரணைகள் தொடர்பான தகவல்களை அறியும் அதிகாரமோ, வசதியோ எமக்குக் கிடையாது. அத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாமும் துக்கம் கொள்வதோடு அவர்களுக்காக நாமும் தொடந்து பிரார்த்தித்தும் வருகின்றோம். அந்த வழிதவறியவர்கள் ஏற்படுத்திய வேதனை மற்றும் துன்பத்தை நாமும் உணர்கின்றோம். அடிப்படையில் அக்கொடியவர்கள் மிகத்தெளிவாக ஷரீஆ சட்டத்தை மீறியவர்களே ஆவர். ஏனெனில் ஷரீஆ சட்டம் திட்டவட்டமாக தற்கொலையை கண்டிக்கின்றது, அப்பாவிகளின் உயிரை பறிப்பதை தடுக்கின்றது. அந்த நபர்களின் செயற்பாடு இஸ்லாத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டதாகும். துரதிஷ்டவசமாக இது போன்ற கீழ்த்தரமான சில நபர்கள் சகல மதத்தைச் சார்ந்த சமூகங்களிலும் இருப்பதை தாங்களும் சந்தேகமின்றி ஏற்பீர்கள் என நினைக்கின்றோம்.

இம்மடல் மூலம் ஷரீஆ பற்றிய தவறான கருத்துக்கள் ஏதும் இருப்பின் அதை போக்குவதையே நாம் நாடுகின்றோம் என்பதை தாங்கள் புரிந்து கொள்வீர்க்ள என நாம் திடமாக நம்புகின்றோம். தங்களுடனும் ஏனைய மதத் தலைவர்களுடனும் ஒற்றுமையாக செயற்படவே நாம் விரும்புகிறோம். தாங்கள் அடிக்கடி வலியுறுத்துவது போன்று நாம் அனைவரும் ஐக்கியப்பட்டு, நம்மிடையே உள்ள வேற்றுமையை ஏற்படுத்தும் சில அம்சங்களை விடுத்து, அதற்கு பதிலாக நம்மிடையே இருக்கும் பொதுவான பெருமானங்கள் அடிப்படையில் செயற்பட நாம் அனைவரும் முன் வரவேண்டும். குறிப்பாக ஒரு மோசமான தொற்று நோயால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் நாம் ஒன்றிணைவது மிக அவசியமாகும். அமைதியுடன் வாழும் உரிமை அனைத்து இலங்கையருக்கும் இருப்பதையும், வாழ்விலும் மரணத்திலும் நம் ஒவ்வொருவரும் கண்ணியப்படுத்தப்படுவதையும் நாம் உறுதி செய்வோமாக.

அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி

தலைவர்,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அதற்கு காடினல் அவர்களின் பதில் மடல் இங்கு காணலாம்.

அன்புள்ள முஃப்தி ரிஸ்வி,

2020 டிசம்பர் 8 தேதியிடப்பட்ட தங்கள் கடிதம் எனக்குக் கிடைத்ததுடன், உங்கள் அன்பான சொற்களுக்கும் போற்றுதலுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

“சிலோன் டுடே” யில் வெளியாகியிருந்த செய்தி விடயத்தில் நீங்கள் ஆச்சரியப்பட்டதையும் அதன் தவறான புரிதலையும் நான் புரிந்து கொள்கின்றேன். பேராயர் இல்லத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு. காவிந்த ஜயவர்தன அவர்கள் வந்திருந்த சமயத்தில் அவருக்கு நான் அளித்த நேர்காணல் தொடர்பான விடயங்களை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

திரு. ஜெயவர்தன அவர்களே என்னை வந்து பார்க்க விரும்பினார் என்பதை நான் முதன் முதலில் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதன் பின் நான் அவருக்கு என்னை சந்திப்பதற்கான நியமனத்தைக் கொடுத்தேன். முன்னாள் அமைச்சர் திரு. எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ்வால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் “பெட்டிகலோ கெம்பஸ்” பல்கலைக்கழகத்தை குறித்து அவர் பாராளுமன்றத்தில் செய்த தலையீடு தொடர்பான சில தகவல்களை என்னிடம் சமர்ப்பிக்கவே அவர் வந்தார். அதாவது, அவர் பாராளுமன்றத்தில் கூறியதை என்னிடம் கூறவே வந்தார். இது அவருடைய உரிமை என்பதால் அவரே மேற்கொண்ட வேண்டுகோளின் பேரில் என்னை சந்திக்க அவருக்கு நான் அனுமதி கொடுத்தேன்.

எனது கூற்று பற்றி கூறுவதானால், நான் ஷரீஆ சட்டத்திற்கு எதிரானவன் என்றோ, ஷரீஆ சட்டத்தை பின்பற்ற முஸ்லிம்களை அனுமதிக்கக் கூடாது என்றோ நான் எத்தருணத்திலும் கூறவில்லை என இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அதைத் தீர்மானிப்பது எனது வேலையல்ல. கிறிஸ்தவர்களான நாங்கள் 10 கட்டளைகளை பின்பற்றுவது மற்றும் பௌத்தர்கள் பஞ்ச சீலயை பின்பற்றுவது போன்றே, முஸ்லிம் சமூகம் தாம் பின்பற்ற விரும்பும் சட்டத்தை தெரிவு செய்யும் உரிமை உள்ளவர்கள். அதை நாம் மதிக்க வேண்டும். 

எனது கூற்றானது, உயிர்த்த ஞாயிறன்று ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரமான தாக்குதல் தொடர்பான விசாரணைகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்பது பற்றியும், அதற்கு பொறுப்பானவர்கள் நீதிக்கு முன் கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்திடம் கோருகிறோம் என்பது பற்றியுமே இருந்தது. 

மேலும், விசாரணை தொடர்பான தாமதங்கள் குறித்து எனது அதிருப்தியை நான் வெளிப்படுத்தினேன். சரியான வழக்கு விசாரணை இல்லாமல் தாம் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தமது உரிமைகள் மிதிக்கப்பட்டு வருவதாகவும் பலர் முறையீடு செய்து வருகின்றார்கள். எனவே, எனது அதிருப்திக்கு இவர்களுடைய நிலையும் ஒரு காரணமாகும். விசாரணைகள் விரைவில் முடிவடைவதும், பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவதும் முக்கியமாகும். அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல. இதுபோன்ற செயல்களைச் செய்பவர்கள் எந்த ஒரு மதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது.

“பெட்டிகலோ கெம்பஸ்” பல்கலைக்கழகத்தைப் பொறுத்தமட்டில் நான் கூறியது என்னவென்றால், அது ஒரு பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் மதம் அல்லது மொழியைப் பொருட்படுத்தாமல் அனைத்து சமூகங்களின் மாணவர்களுக்கும் அது திறந்திருக்க வேண்டும் என்பதே.

நான் சகல விதமான பாகுபாடுகளுக்கும் எதிரானவன் என்பதை நான் மிகத் தெளிவாகக் கூற வேண்டும். யாராவது ஏதேனும் தவறு செய்தால், அவர்களின் இனம், மதம் என்ன என்பதை பொருட்படுத்தாமல் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை தொடரவேண்டும். சில்லறைக் காரணங்களை பொருட்படுத்தாது, நீதியின் ஆளுகையை நிலைநிறுத்துவதே எல்லாவற்றையும் விட முக்கியமானதாகும்.

துரதிஷ்டவசமாக இலங்கையில் நிலவும் நிலை என்னவென்றால், அரசியல் நோக்கங்களுக்காக, சட்ட அமுலாக்கத்தில் உள்ள சிலர் குற்றங்களை செய்பவர்களைப் பாதுகாக்கவும், உண்மைகளை மறைக்கவும் முயற்சி செய்கிறார்கள். யாராவது ஒரு தவறான செயலைச் செய்தால், அவர் எந்த அரசியல் கட்சி, இனம் அல்லது மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தண்டிக்கப்படவே வேண்டும். எது சரி, எது தவறு என்பதற்கான அணுகுமுறையில் பக்கச்சார்பற்றவர்களாக இருக்க நாம் எப்போதுதான் கற்றுக்கொள்ளப் போகிறோமோ?

எப்போது மிக அவசியமாகியதோ அத்ததருணத்தில், அதாவது 2019 ஏப்ரல் 21 தாக்குதல் சந்தர்ப்பத்தில், முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்காக நான் குரல் எழுப்பியதையும் அவர்களை பாதுகாத்ததையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன். நான் எந்த சமூகத்தினருக்கும் எதிரானவன் அல்ல. மாறாக, நான் சகலருக்காகவும் உள்ளவனாவேன்.

வித்தியாசங்களை மதித்த வண்ணம், சகோதரத்துவ உணர்வுடன், இந்நாட்டில் பெரும்பான்மை மக்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவர் இடையே ஐக்கியத்தை ஊக்குவித்து மேம்படுத்தவே நான் செயற்பட்டு வருகின்றேன். நம்மிடையே உள்ள வேற்றுமைகளை நாம் பாராட்டிக் கொண்டிருக்கும் வரை இந்த நாடு துன்பப்படவே செய்யும். முப்பது வருடமாக இருந்த யுத்தத்தின் அழிவிற்குப் பிறகாவது, நம்மை பிரிக்கும் விடயங்களை விட்டுவிட்டு எம்மை ஒற்றுமைபடுத்தும் விடயங்கள் பற்றி அதிகம் பேச நாம் கற்றுக்கொள்ள வேண்டாமா?

நான் ஒரு கத்தோலிக்கன் ஆவேன் என்ற போதிலும் எனது கத்தோலிக்க அடையாளத்தை இந்த நாட்டிற்குள் பிளவு ஏற்பட பயன்படுத்தியதில்லை. அத்தகைய வேறுபாடுகளை வெளிப்படுத்தும் சிறப்பு சலுகைகளைத் தவிர்க்கவே நான் விரும்புகிறேன். மதங்களுக்கும் இனங்களுக்கும் இடையிலான நட்பை நான் எப்போதும் வலியுறுத்தியுள்ளேன். மற்றும் அவற்றிற்காக நான் துணிச்சலுடன் குரல் கொடுத்து வந்துள்ளேன். வேதப் புத்தகத்தின் மக்களான நாம் அனைவரும் ஏனையவர்களும் தம்முடைய வேறுபாடுகளை வலியுறுத்துவதை விட்டுவிட்டு, நம்மை ஒன்றிணைக்கும் விடயங்கள் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒருவர் மற்றவருடைய அடையாளத்தை மதிப்பதோடு உணர்ச்சிகளைத் தூண்டாமல், ஒரு தேசத்திற்குள் நம்மை ஒருங்கிணைக்க கற்றுக்கொள்வோமாக. குறிப்பாக நமது இளைய சமுதாயத்தை இதற்காக நாம் வழிநடத்த வேண்டும். கிறிஸ்தவர்கள் அதை உயிர்த்த ஞாயிறன்று மிகுந்த பொறுமையுடன் செய்து காட்டினார்கள். நாம் தொடர்ந்தும் அவ்வாறே நடந்து கொள்வோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கின்றேன். எங்களைப் பொறுத்தவரை, முஸ்லிம்கள் அளவற்ற கருணையுள்ள சர்வ வல்லமையுள்ள ஒரு இறைவனை விசுவாசிக்கின்றவர்கள். நாமும் அதே நம்பிக்கை உடையவர்களே ஆவோம். எனவே எவரேனும் உங்களுக்கு அநீதி இழைத்தால் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக நிற்போம்.

நான் ஷரீஆவை கண்டிக்கவில்லை, மாறாக மட்டக்களப்பு பல்கலைக்கழகம் சகலருக்கும் திறக்கப்பட வேண்டும் என்றே நான் குறிப்பிட்டேன். சில ஊடகவியலாளர்கள் என்னுடைய எண்ணங்களுக்கு மேலதிக வார்த்தைகளை சேர்த்து அவர்களுடைய போக்கில் தவறான வரைவிலக்கணம் கொடுத்திருக்கலாம்.

நாமும் நமது முஸ்லிம் சகேராதரர்கள் விடயத்தில் நன்மதிப்பு வைத்துள்ளோம் என்பதை உறுதி படுத்துவதோடு, நாம் அனைவரும் அமைதியுடனும், ஐக்கியத்துடனும் வாழ்வதை உறுதி செய்வதற்காக, குலம், கோத்திரம், மதம் என்பனவற்றை பொருட்படுத்தாது நமது சக நாட்டு மக்களோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கோருகின்றேன். 

உங்கள் அன்பிற்கு நான் நன்றி செலுத்துவதோடு சர்வ வல்லமை பொருந்திய இறைவனின் அருள் நமது நாட்டிற்கும் நம் மக்களுக்கும் கிடைக்க பிரார்த்திக்கின்றேன்.

உங்கள் நம்பிக்கையுடைய 

மெல்கம் கார்டினல் ரஞ்ஜித் – கொழும்பு பேராயர்

SOURCEஜப்னா முஸ்லிம்
Previous articleமாலைதீவில் இலங்கை முஸ்லிம்களின் உடல்கள் அடக்கமா? ஐ.நா விசேட அறிக்கையாளர் தெரிவித்தது என்ன?
Next articleஇன்றைய தங்க விலை (17-12-2020) வியாழக்கிழமை