கடன் நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்காக அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்ட அரசாங்கம்!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்

நாடு எதிர்கொள்ளும் கடன் நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்காக, துறைமுகங்கள் மற்றும் விமான தளங்கள் போன்ற அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாகவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குத்துறையை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக JVPயின் முன்னாள் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டின் கடன்களை திருப்பிச் செலுத்த அரசாங்கம் அதிக கடன்களைப் பெற வேண்டும். எனினும் சர்வதேச கடன் மதிப்பீட்டு முகவர் மையங்கள், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை தரமிறக்கியுள்ளதால் வெளிநாடுகளிலிருந்து கடன்களைப் பெறுவதில் அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

டொலர் மூலமாக கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக சர்வதேச அளவில் கடன்களைப் பெறுவதற்கான அனைத்து வழிகளையும் அரசாங்கம் இன்று இழந்துள்ளது.

இதன் விளைவாக ஏனைய நாடுகள் இலங்கையின் வளங்களை பேரம் பேசுகின்றது.வெளிநாட்டு இருப்புக்களின் சரிவு, எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி விகிதம்,சுற்றுலாத்துறை மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலமான அந்நிய செலாவணி வருவாய் குறைதல் ஆகியவை கடன் நெருக்கடியை மோசமாக்கியுள்ளதென்றும்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்திற்காக இலங்கை சர்வதேச அளவில் விமர்சிக்கப்பட்டது.

இருப்பினும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குத்துறையை விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்னர் தேசிய சொத்துக்களை விற்கப் போவதில்லை என்று உறுதியளித்த அரசாங்கம் அதற்கேற்ப செயற்படாமல் மக்களின் கோரிக்கைக்கு முரணாகவே செயற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இதன்மூலம் அரசாங்கம் சொத்துக்களை விற்பனை செய்யப்போவதில்லை என்று பொதுமக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை மீறப்படுகிறது.

துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய துறைமுக அதிகார சபைக்கு வருமானம் போதுமானதாக இல்லை என்று கூறியே கிழக்கு இறங்குத்துறை விற்பனையை நியாயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.

இந்நிலையில் இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட இந்தியாவின் அதானி குழுமத்திற்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குத்துறையை விற்பனை செய்ய அமைச்சர் றோஹித அபேகுணவர்த்தன அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த நடவடிக்கையை கைவிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்த முன்வருமாறுஅனைத்து தேசபக்தர்களுக்கும் தாம் அழைப்பு விடுப்பதாக JVPயின் முன்னாள் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page