நல்லடக்கத்துக்கான இடம் குறித்து இரு நாட்களில் அறிக்கை தரவும்

கொவிட் தொற்றினால் இறப்பவர்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமான இடங்களை இன்னும் ஓரிரு தினங்களில் அடையாளப்படுத்தி தனக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் தலைமையில் அரச தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உட்பட மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்திலே பிரதமர்
இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

பாராளுமன்ற கட்டடத்தில் வியாழனன்று மாலை இந்தக் கூட்டம் நடைபெற்றது. இறப்பவர்களை அடக்கம் செய்வதற்கான மதிப்பீட்டில் உள்ள தடைகள் பற்றி பிரதமர் அதிகாரிகளிடம் இக்கூட்டத்தில் கேட்டறிந்தார். சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழு முன்வைக்கும் மாற்றுத் திட்டம் எது என பிரதமர் கேட்டுள்ளார். 70 அடிக்குக் கீழ் நீர்உள்ள பிரதேசங்களில் அடக்கம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதா? என்றும் அவ்வாறான இடங்களை போய்ப் பார்த்துள்ளீர்களா? என்றும் பிரதமர் கேட்டுள்ளார். இதுவரை அவ்வாறான இடங்களுக்கு போகவில்லை என தெரிவித்த அதிகாரிகளுக்கு நாளையே அந்த இடங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி அது தொடர்பான அறிக்கைகளை ஓரிரு தினங்களில் சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

சுகாதார குழுவின் செயற்பாட்டினால் அரசுக்கே அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் இப்பிரச்சினைக்கு சாதகமான தீர்வொன்று வழங்குவது அவசியமென்றும் பிரதமர் இக்கூட்டத்தில் தெரிவித்ததாக பிரதமரின் அலுவலக பேச்சாளர் ஒருவர் நவமணிக்குத் தெரிவித்தார்.

அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, சந்திரசேன, பவித்ரா வன்னிஆரச்சி, மற்றும் டாக்டர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே உட்பட எம். பி.க்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

SOURCENawamani
Previous articleபிற நாடுகளின் முடிவை பொறுத்தே கொரோனா தடுப்பூசியை எமது மக்களுக்கு செலுத்துவோம்
Next articleவானொலி முஸ்லிம் சேவையில் நான்கு உலமாக்களுக்கு தடை