ஹோட்டல் உரிமையாளர் கொலை : 16 நாட்களின் பின் துலக்கப்பட்ட மர்மங்கள் – விபரம் இதோ !

பிலியந்தலை – கெஸ்பேவ ஹோட்டல் உரிமையாளரின் கொலை தொடர்பில் மர்மம் துலக்கப்பட்டு, இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஒருவர் உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மேல் மாகண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் லலித் அபேசேகரவின் கீழ் அதன் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பெரேரா தலைமையிலான குழுவினர் கொலை மர்மத்தை துலக்கி சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கொலையை அடுத்து கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் 34 பவுண் தங்க ஆபரணங்கள், ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ரூபா வரையிலான பணம், பெறுமதி மதிப்பீடு செய்யப்படாத 15 மாணிகக் கற்கள், கொலைச் செய்யப்பட்டவரின் ஸ்மார்ட் தொலைபேசி ஆகியவற்றையும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கம்பி, கொலை செய்யும்போது அணிந்திருந்த,  ரீ சேட்டினால் செய்யப்பட்ட முக மூடி, கையுறை, கொலைக்கு முன் அருந்தியதாக கூறப்படும் பியர் ரின்கள் 2 என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந் நிலையில், மேல் மாகாணத்தில் சன நடமாட்டம் மிக்க பகுதியில் இடம்பெற்ற இக்கொலை தொடர்பில் மர்மத்தை துலக்க சுமார் 16 நாட்கள் வரை எடுத்துக்கொண்ட பொலிஸார் நேற்று அது தொடர்பில் விஷேட செய்தியாளர் சந்திப்பினையும், மேல் மாகாண தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் நடாத்தினர்.

கடந்த 6 ஆம் திகதி பின்னிரவில் பிலியந்தலை – கெஸ்பேவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

குறித்த ஹோட்டலின் மேல் மாடி அறையில்,  அவர் கொலைச் செயப்பட்டிருந்ததுடன், அவரது மனைவி, பிள்ளைகளை குளியலறையில் அடைத்த பின்னர்  அங்கிருந்த பெறுமதியான பொருட்களும் கொள்ளையிடப்பட்டிருந்தன.

கெஸ்பேவ குருகம்மானவைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இதன்போது உயிரிழந்தவராவார்.

இந் நிலையில் இந்த விசாரணைகளை முதலில் பிலியந்தலை பொலிஸார் முன்னெடுத்த நிலையில், விசாரணைப் பொறுப்பு பின்னர் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரால் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் லலித் அபேசேகரவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந் நிலையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸ் அத்தியட்சர் லலித் அபேசேகரவுடன் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன பின்வறுமாறு தெரிவித்தார்.

இந்த விசாரணைகளில், நாம் இரு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளோம்.  ஒருவர் இராணுவத்தில் இருந்து தப்பி வந்தவர். மற்றையவர் குறித்த நபருடன் சிறைச்சாலையில் வைத்து பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டவர். 

இராணுவத்திலிருந்து தப்பி வந்த நபர் கடந்த 2019 ஆம் ஆண்டில் குறித்த ஹோட்டலில் ஒரு மாதம் வரை வேலைச் செய்துள்ளார்.  அதில் அவர் அறிந்த விடயங்களை வைத்தே கொள்ளை திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த 6 ஆம் திகதி இரவு இருவரும்,  ஒரு ஸ்குரூப் ட்ரைவர் உபகரணம், மின் விளக்கொன்றுடன்  அந்த ஹோட்டல் அருகே காத்திருந்துள்ளனர்.

ஹோட்டலில் உள்ளவர்கள் தூங்கும் வரையிலேயே அவ்வாறு அவர்கள் காத்திருந்துள்ளனர். அதன்போது அவர்கள் 4 ரின் பியரினை அருந்தியுள்ளனர்.  அதில் இரு வெற்று ரின்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

ஹோட்டலில் அனைவரும் உறங்கியதை உறுதி செய்துகொண்ட பின்னர், அவர்கள் கதவினை ஸ்குரூப் ட்ரைவர் உபகரணம் கொண்டு கழற்றிவிட்டு உள்ளே நுழைந்துள்ளனர்.  அங்கு ஹோட்டல் உரிமையாளர் உறங்கிய அறைக்கு சென்று அவரை பொல்லினால் தாக்கியுள்ளனர். இதன்போது அவர்கள் முக மூடிகளையும் கையுறைகளையும் அணிந்திருந்துள்ளனர்.

அவ்வாறு அவர்கள் அணிந்திருந்த, ரீ சேட்டினால் செய்யப்பட்ட முக மூடி ஒன்றினையும் ஒரு ஜோடி கையுறைகளையும் இதுவரை  மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது அங்கு, குறித்த ஹோட்டல் உரிமையாளரின் மனைவி, பிள்ளைகளை அவர்கள் குளியலறையொன்றுக்குள் அடைத்துள்ளனர்.  அதன் பின்னர் கொள்ளையிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், கிடைக்கப்பெற்ற அறிவியல் தடயங்களை வைத்து முதலில் பொலிஸார் ஆராச்சிகட்டுவ பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்தனர்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே கிரிதலை பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்கள் தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விரிவான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஹோட்டல் உரிமையாளரைக் கொலைச் செய்த பின்னர், சந்தேக நபர்கள்  அந்த அறையில் இருந்து 5 பவுன் நிறைக் கொண்ட தங்க சங்கிலி, 12 பவுன் நிறைக் கொண்ட தங்கச் சங்கிலி, ஹோட்டல் உரிமையாளரின் கழுத்திலிருந்த 15 பவுண் தங்கச் சங்கிலி, மேலதிகமாக மேலும் இரண்டு பவுன் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளனர். இதனைவிட  பெறுமதி கணிக்கப்படாத 15 மாணிக்க கற்களையும் அவர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.

கொள்ளையிட்ட நகைகளை அடகுக் கடை ஒன்றில் வைத்து பெற்றுக்கொண்ட பணத்தில், ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவைச் அந்தேக நபர் ஒருவர் அவரது  சகோதரரின் வங்கிக்கணக்கில் வைப்புச் செய்துள்ளார்.  மேலும் 2 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாவை  உறவினர் ஒருவரின் வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டுள்ளார்.

ஏனைய பணத்தில் இருவரும் ஹோட்டல்களில் தங்கி  சொகுசு வாழ்க்கை ஒன்றினை அனுபவித்துள்ளனர். அத்துடன் புதிதாக இரு ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளையும்  கொள்வனவு செய்துள்ளனர்.

சந்தேக நபர்களின் குற்றத்துக்கு முன்னரான நடமாட்டம், குற்றத்தின் போதான நடவடிக்கைகள், குற்றத்தின் பின்னரான செயற்பாடுகள் என அனைத்தையும் விசாரணையாளர்கள் துல்லியமாக சாட்சிகளுடன் கண்டறிந்துள்ள நிலையில், விரைவாக அரச இரசாயன பகுப்பாய்வாளரின் உதவியையும் பெற்று விசாரணைகளை நிறைவு செய்து வழ்ககு தொடர தேவையான நடவடிக்கைகள் எடுக்கபப்டும்.’ என தெரிவித்தார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters