கொழும்பை விடவும் பாரிய கொத்தணி அட்டலுகமவில் உருவாகலாம்: GMOA எச்சரிக்கை!

களுத்துறை மாவட்டத்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நேரத்தில் சரியான தீர்மானங்களை எடுக்காவிட்டால் கொழும்பு மாநகரசபைக்கு சமமான அல்லது அதனை விடவும் பாரியளவிலான கொத்தணி அட்டலுகம பிரதேசத்தில் உருவாகக் கூடிய அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அழுத்கே இவ்வாறு எச்சரித்தார்.

அவர் மேலும் கூறுகையில் , கொழும்பு மாநகரசபையை அண்மித்த பகுதிகளில் நூற்றுக்கு 19 சதவீதமானோருக்கே கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது. ஆனால் அட்டலுகம பிரதேசத்தில் இதுவரையில் (நேற்று வரை) முன்னெடுக்கப்பட்டுள்ள பரிசோதனைகளில் நூற்றுக்கு 25 – 30 சதவீதமானோருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை 24 மணித்தியாலங்களில் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலைமை இன்னும் ஏற்படவில்லை. குறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம, வாதுவ உள்ளிட்ட பிரதேசங்களில் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு 72 மணித்தியாலங்களை விட அதிக காலம் செல்கிறது.

நாளொன்றுக்கு குறித்த பிரதேசத்தில் சுமார் 600 பரிசோதனைகளை முன்னெடுக்கும் போது அதன் முடிவுகளை 24 மணித்தியாலங்களுக்குள் வழங்க முடியும் என்றால்தான் அட்டலுகம தொடர்பில் சரியான தீர்மானத்தை எடுக்க முடியும். மாறாக முடிவுகள் கிடைப்பதற்கு ஒரு வாரம் தாமதமானால் எவ்வாறு நிலைமையை முகாமைத்துவம் செய்வது ?

இது இவ்வாறிருக்க மறுபுறம் இவ்வாறு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் கூட களுத்துறையில் பிரத்தியேக ஆய்வு கூடமொன்று நிருவப்படவில்லை. இதே போன்று குருணாகல் மற்றும் கேகாலையிலும் ஆய்வு கூடங்கள் இல்லை. குறைந்தபட்சம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கூட ஆய்வுகூடமொன்று அமைக்கப்படவில்லை. இதே நிலைமை தொடருமானால் மேலும் பல கொத்தணிகள் உருவாகுவதை தவிர்க்க முடியாது என்றார்.

SOURCEவீரகேசரி பத்திரிகை
Previous articleஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி – ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்
Next articleஇன்றைய தங்க விலை (02-12-2020) புதன்கிழமை