கைக்கூலிகளை களமிறக்கி முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாமலாக்கும் சூழ்ச்சி

முஸ்லிம்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்களை குறைக்கும் நோக்குடன் செயற்படும் ராஜபக்ஷக்களின் அரசாங்கம், இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் இப்பணியைக் கச்சிதமாக முடிப்பதற்கு சில கைக்கூலிகளைக் களமிறக்கியுள்ளதாக மேல்மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த தலைமையிலான 52 நாள் அரசாங்கத்தில் விஜயதாச ராஜபக்ஷ இதுபற்றி பகிரங்கமாகக் கூறியிருந்தார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அஷ்ரஃபின் வேண்டுதலுக்காக ஐந்து வீதமாக மாற்றப்பட்ட விகிதாசார வெட்டுப்புள்ளியை, மீண்டும் 12 வீதத்துக்கு கொண்டு வந்து, முஸ்லிம்களின் அரசியல் பலத்தைத் தகர்க்க வேண்டும் என்றும் விஜயதாச ராஜபக்‌ஷ கூறியதை, மொட்டு அணியில் களமிறக்கப்பட்டுள்ள இந்தக் கைக்கூலிகள் கவனத்திற்கொள்ளாதமை வேதனையளிக்கிறது.

இந்தச் சதித் திட்டத்தை சட்டமாக்குவதற்கு முன்னர், ஒரு வௌ்ளோட்டத்திற்காக ராஜபக்ஷக்கள் இதைப் பரீட்சித்துப் பார்க்க விரும்பியே, சில முஸ்லிம் கைக்கூலிகளை மொட்டுச் சின்னத்தில் களமிறக்கியுள்ளனர். எனவே, இவ்வாறானவர்களுக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பது, முஸ்லிம் சமூகத்திற்குச் செய்யும் துரோகமாகும்.

கடந்த பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு இருந்த பலத்திற்கு அஞ்சியே இவர்கள் இச்சதியைச் செய்யத் துணிந்துள்ளனர். இந்த 21 முஸ்லிம் எம்.பிக்களில் ஒருவரைத் தவிர வேறு எவரும் ராஜபக்ஷக்களின் அணியில் இல்லாதமை பெரிதும் ஆறுதலளிக்கிறது. எனினும், புதிய முகங்களைக் களமிறக்கி எமது சமூகத்தின் வாக்குகளைச் சிதறடிக்கத் தீட்டப்பட்டுள்ள இத்திட்டத்தை, முஸ்லிம்கள் கட்டாயம் தோற்கடிக்க வேண்டும்.

இத் தோல்வியின் ஆரம்பத்திலிருந்துதான் சஜித் தலைமையிலான புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது. இழந்துபோன முஸ்லிம்களின் உரிமைகள், எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், சூறையாடப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு நிவாரணம் பெறுவதற்கும், இதுபோன்ற இன்னல்கள் எமது சமூகத்துக்கு இதன் பின்னர் ஏற்படாதிருப்பதற்கும், சஜித் தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்கி, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலம், பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களைப் பாதுகாப்போம்.

Read:  மீண்டும் ரணில் !!