வேறு நோயினால் இறப்போருக்கு ஒரே நாளில், பி.சி.ஆர் நடத்தி சடலத்தை கையளிக்க விசேட திட்டம்: முஜீபுர் ரஹ்மான்

கொரோனா அல்லாத வேறு நோய்களினால் இறப்பவர்களுக்கு ஒரே நாளைக்குள்  பி.சி.ஆர் பரிசோதனை  நடத்தி சடலத்தை கையளிக்க  விசேட முறைமையொன்றை மேற்கொள்ள சுகாதார அமைச்சு உடன்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

வேறு நோய்களினால் இறப்பவர்களின் சடலங்கள் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு நான்கைந்து நாட்களின் பின்னரே உறவினர்களிடம் கையளிக்கப்படுவது தொடர்பில் சுகாதார அலுவல்கள் குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் ஆராயப்பட்டது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தலைமையில் சுகாதார அலுவல்கள் குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது கொரோனாவுடன் தொடர்புள்ள பல்வேறு விடயங்கள் இங்கு ஆராயப்பட்டுள்ளன.

இதன்போது இங்கு கருத்து தெரிவித்த முஜிபுர் ரஹ்மான் எம்.பி, கொரோனாவினால் இறப்பவர்களுக்கும்  பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு இரண்டு மூன்று நாட்களுக்கு பின்னரே அறிக்கை கிடைக்கிறது. அறிக்கை நெகடிவ் ஆக இருந்தாலும் கூட உடனடியாக  சடலம் கையளிக்கப்படுவதில்லை. அதற்கும் ஓரிரு நாட்களின் பின்னர் தான் சடலம் கையளிக்கப்படுகிறது. அழுகிய நிலையில் சடலங்கள் வழங்கப்படுவதால் உறவினர்கள் பெரும் அசௌகரியத்திற்கும் மன வேதனைக்கும் உள்ளாகின்றனர்.  இது தொடர்பாக மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என சுட்டிக் காட்டியுள்ளார்.

முஜிபுர் ரஹ்மான் முன்வைத்த விடயத்தை ஆராய்ந்த சுகாதார அமைச்சின் செயலாளர், ஒரே நாளில் பி.வி.ஆர் பரிசோதனை நடத்தி சடலங்களை கையளிக்க அடுத்த வாரம் முதல் அலுவலகமொன்றை ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளார். 

VIAவீரகேசரி பத்திரிகை
SOURCEM R M.வஸீம்
Previous articleஎன்டிஜென் டெஸ்ட் கிட் பிரதான அரச வைத்தியசாலைகளில்.
Next articlePCR பரிசோதனையை புறக்கணிப்போர், அவர்களுக்கு உதவுவோருக்கு 3 வருடங்கள் சிறை -அஜித் ரோஹண