‘எரிப்பதற்கான ஆவணத்தில் கைச்சாத்திடாமையால் 3 ஜனாஸாக்கள் பிரேத அறையில்’! – அஸாத் சாலி

பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதை யாரும் மறுக்கவேண்டாம். அதற்காக உரிய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களை எரிப்பதற்கான ஆவணத்தில் முஸ்லிம்கள் யாரும் கைச்சாத்திட வேண்டாம் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அடுலுகம பிரதேசத்தில் மக்கள் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதை தவிர்க்கும்வகையில் போலி முகவரிகளை வழங்கி வருவதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருக்கும் விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அட்டுலுகம பிரதேசத்தில் மக்கள் பிசிஆர். பரிசோதனை மேற்கொள்வதை தவிர்க்கும் வகையில் மறைந்து வருவதுடன் அவர்கள் பொய் முகவரிகளை அதிகாரிகளுக்கு வழங்குவதாக இராணுவத் தளபதி தெரிவித்திருக்கிறார்.

அட்டுலுக பிரதேசத்தில் கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அந்தப் பிரதேசத்தில் அதிகமானவர்களை எந்தவித அறிவித்தலும் இல்லாமல் பஸ்களில் ஏற்றிச் சென்றிருப்பதாக அவர்களிடமிருந்து வந்த குரல் பதிவுகளில் இருந்து அறிய கிடைத்தது. அதனால்தான் அந்த மக்கள் அச்சத்தில் இவ்வாறு பிசிஆர். பரிசோதனையை மேற்கொள்ளாமல் மறைந்து வருகின்றனர்.

பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதை யாரும் மறுக்க வேண்டாம். அதற்காக உரிய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளாமல் நாங்கள் மறைந்திருந்தால், அதனை காரணம் காட்டி முழுf் குடும்பத்தையும் தனிமைப்படுத்தும் நிலை இருக்கின்றது.

அதனால் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம் என யாரும் குரல் பதிவுகளை மேற்கொண்டு மக்களை அச்சமூட்டக் கூடாது. ஏனெனில் பிசிஆர் பரிசோதனையை தவிர்கும் வகையில் யாராவது மறைந்திருந்தால் அவர்களின் வீடுகளை சீல் வைத்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை, கொரோனா தொற்றில் மரணிக்கும் சடலங்கள் எரிக்கப்படுகின்றன. அதனை அடக்கம் செய்வதற்கும் உலக சுகாதார அமைப்பு அனுமதித்துள்ளதால் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்து சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். எமக்கு நீதி கிடைக்கும்வரை கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்காக குடும்பத்தாரிடம் கையொப்பம் கேட்கும்போது அதனை மேற்கொள்ளவேண்டாம்.

கொழும்பில் நேற்று முன்தினம் 3 ஜனாஸாக்களை எரிப்பதற்கு முற்பட்டபோது அந்தக் குடும்பத்தினர் யாரும் அதற்கு அனுமதித்து கையெழுத்திடவில்லை. அதனால் அந்த ஜனாஸாக்களை அவர்கள் பிரேத அறையில் வைப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இவ்வாறு அனைவரும் செயற்பட வேண்டும். அதற்காக யாரும் பணம் வழங்கவும் வேண்டாம்.

அத்துடன் ஜனாஸா எரிப்பு தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெறவுள்ளது. இருக்கின்றது. அதனால் முஸ்லிம்கள் பொறுமையும் எமது நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றார்.

SOURCEM R M.வஸீம் (Metro News)