சிவப்பு எச்சரிக்கை – புயலாக மாறுகிறது தாழமுக்கம்… வளிமண்டலவியல் திணைக்களம்.

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் காணப்படுகின்ற மிகவலுவான தாழ் அமுக்கமானது திருகோணமலை கரையில் இருந்து வடகிழக்காக சுமார் 280 km தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்தது சூறாவளியாக விருத்தியடையும். அதனைத் தொடர்ந்து வருகின்ற 12 மணித்தியாலங்களில் மிகப் பலமிக்க சூறாவளியாக மாற்றமடையும்.

இந்த சூறாவளியானது அடுத்த 48 மணித்தியாலங்களில் வடமேற்குத் திசையினூடாக தமிழகத்தின் கரையை ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மணத்தியாலத்திற்கு 60_70 km வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய பகுதிகளில் 40_50 km வேகத்தில் காற்று வீசும்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 80_100 km வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும் .இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் .

ஆகையினால் குறிப்பிட்ட இக் கடல் பிராந்தியங்களுக்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

தேசமானிய
மொஹமட் சாலிஹீன்
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

அதேவேளை, வங்காள விரிகுடாவின் தெற்மேற்குப் பகுதியில் உருவான பவன தாழமுக்கம் பற்றி வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.

இந்தத் தாழமுக்கம், அடுத்த 24 மணித்தியாலங்களில் புயலாக மாறலாம். அது வடமேற்குத் திசையில் நகர்ந்து, தீவிர புயலாக தமிழ் நாட்டை தாக்கலாம் என அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வடக்கு கிழக்கு கடல் சடுதியாக கொந்தளிக்கலாம். காற்றின் வேகம் திடீரென மணிக்கு 80 முதல் 100 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.

புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

அடுத்து வரும் நாட்களில் இரண்டு முதல் மூன்று மீற்றர் வரை உயரமான அலைகள் எழுவதுடன், மன்னாரில் இருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான கரையோரங்களில் கடல் அலைகள் கரையைத் தாண்டி தரைக்குள் வரும் சாத்தியமும் உள்ளதென திணைக்களத்தின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்தில் இருந்து கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும், இந்தக் கடற்பரப்புக்களில் இருப்பவர்கள் கரைக்குத் திரும்ப வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

Previous articleஒரு குறிப்பிட்ட இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனித்துவம் அளிக்க முடியாது
Next articleகோவிட் -19 சிகிச்சை மருத்துவமனை தாதிமார் அமைதி போராட்டம்.