மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள செயற்பாடுகள் மீள ஆரம்பம் – முற்பதிவுகளுக்கு தொலைபேசி இலக்கங்கள்!

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார்வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் செயற்பாடுகள் வரையறுக்கப்பட்ட ஊழியர்களுடன் நாளைய தினத்திலிருந்து மீள ஆரம்பமாகின்றன.

கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எமது திணைக்களத்தின் பிரதான காரியாலயம் அமைந்துள்ள பிரதேசம் இதுவரை காலமும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் தற்போது அந்த தனிமைப்படுத்தல் உத்தரவை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானத்திருக்கிறது. எனவே கடந்த சில நாட்களில் பொதுமக்கள் எதிர்நோக்கியிருந்த சிக்கல்களுக்குத் தீர்வைப்பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நாளைய தினத்திலிருந்து (செவ்வாய்கிழமை) நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள எமது பிரதான காரியாலயத்தின் செயற்பாடுகள் வரையறுக்கப்பட்ட ஊழியர்களுடன் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாரஹென்பிட்டி பிரதான காரியாலய செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும், அதனூடாக சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே திகதியும் நேரமும் ஒதுக்கப்பட வேண்டும். அதன்படி நேற்றைய தினத்திலிருந்து (திங்கட்கிழமை) இனிவரும் காலங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 வரையான காலப்பகுதியில் எமது காரியாலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு, சேவையைப் பெறுவதற்கான முன்னனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேவேளை யாழ்ப்பாணம், அநுராதபுரம், குருணாகலை, கம்பஹா மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள எமது காரியாலயங்கள் தொடர்ந்தும் பொதுமக்களுக்கான சேவை வழங்கலில் ஈடுபட்டுவரும் நிலையில், பொதுமக்கள் தமக்கு அண்மையிலுள்ள காரியாலயங்களில் தமக்கான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்நிலையில் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக வருபவர்கள் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் சுகாதாரப்பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதாரப்பாதுகாப்பு அறிவுறுத்தல்களை உரியவாறு பின்பற்ற வேண்டும் என்று மோட்டார்வாகன போக்குவரத்துத் திணைக்களம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இதேவேளை நாளை முதல் மேற்படி திணைக்களத்தின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் கீழ்வரும் தொலைபேசிய இலக்கங்களின் ஊடாகத் தொடர்புகொண்டு முன்னனுமதியைப் பெற்றுக்கொள்வது அவசிமாகும்.

கார், வான், லொறி ஆகியவற்றைப் பதிவுசெய்தல் – 0706354107 அல்லது 0706354108, பஸ் வாகனப்பதிவு – 0706354109, மோட்டார் சைக்கிள்களைப் பதிவுசெய்தல் – 0706354110 அல்லது 0706354111, முச்சக்கரவண்டிகளைப் பதிவுசெய்தல் – 0706354112, கார் ஒதுக்கீடு – 0706354114 அல்லது 0706354115, முச்சக்கரவண்டி ஒதுக்கீடு – 0706354116 அல்லது 0706354117, லொறி ஒதுக்கீடு – 0706354117, மோட்டார் சைக்கிள் ஒதுக்கீடு – 0706354137 அல்லது 0706354137, பஸ் வாகன ஒதுக்கீடு – 0706354139 அல்லது 0706354139, வாகன இலக்கத்தகடு – 0706354141, நிர்வாகம் – 0706354142, சந்தேகங்கள் – 0706354144, முறைப்பாடுகள் மற்றும் யோசனைகள் – 0706354150, ஏனையவை – 0706354147 அல்லது 0706354148 அல்லது 0706354149

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page