பாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்கா இந்தியாவில் படுகொலை ; இலங்கையிலிருந்து சென்ற பெண் பானத்தில் விஷம் கலந்து கொலை செய்துள்ளதாக தகவல்

பாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்கா இந்தியாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பின் தகவல்கள் தெரிவித்தன.

இலங்கையில் இருந்து சென்றுள்ள பெண் ஒருவரே அவரை சக்தி பானம் ஒன்றில் விஷம் கலந்து கொலை செய்துள்ளதாக அந்த தகவல்கள்  தெரிவித்தன.

பாதுகாப்புத் தரப்பின்  உள்ளக தகவல்கள் பிரகாரம் அறிய முடிவதாவது,

கடந்த 2019 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி பாதாள உலகக்கோஷ்டியின் தலைவர்களில் ஒருவரான சமயங் உள்ளிட்ட சில கைதிகளை ஏற்றிச்சென்ற சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அதன் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் அங்கொட லொக்கா இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தார்.

இந் நிலையிலேயே இந்தியாவில் அங்கொட லொக்கா மறைந்திருந்த நிலையில், இலங்கையில் இருந்து அங்கு சென்று அங்கொட லொக்காவுடன் இருந்ததாக கூறப்படும்  அழகுக் கலை நிலைய பெண் ஒருவர் இவ்வாறு சக்தி பானம் ஒன்றில் விஷம் கலந்து அங்கொட லொக்காவை கொலைசெய்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பின் உள்ளக தகவல்கள் தெரிவித்தன.  

இந்த விஷம் கலந்த பானத்தை அருந்தி அங்கொட லொக்கா வைத்தியசாலையிலும் சுமார் ஒரு வாரம் வரை இருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும், அவரது இறுதிக் கிரியைகள் கூட அங்கேயே இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் அது தொடர்பில் உளவுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 இது தொடர்பில் பொலிஸ்  ஊடகப் பேச்சாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்னவிடம் வீரகேசரி வினவிய போது, தமக்கு உத்தியோகபூர்வமாக அத்தகைய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என கூறினார்.

 எனினும் இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர்  தகவல் தருகையில், தமக்கு உத்தியோகபூர்வ தகவல்கள் கிடைக்காத போதும், அவ்வாறான தகவல் ஒன்று கிடைத்ததாகவும் அது தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கூறினார்.

SOURCEவீரகேசரி பத்திரிகை ( எம்.எப்.எம்.பஸீர்)