அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் !

வைரஸ் பரவலின் காரணமாக மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்காமலிருப்பதற்கு பொது மக்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் தொற்றா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களினதும் முதியவர்களின் மரணங்களை தடுக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கொரோனா வைரஸ் என்பது தொற்றும் நோயாகும். இதற்கும் தொற்றா நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது உலகலாவிய ரீதியில் நிரூபனமாகியுள்ளது.

எனவே தான் முதியவர்கள் அல்லது தொற்றா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள வீடுகளிலுள்ளோர் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அத்தியாவசியமாகும் .

தற்போது தொற்றா நோயால் பாதிக்கப்பட்ட சில இளம் வயதினர் உள்ளிட்ட முதியவர் பலரும் உயிரிழந்துள்ளார். முதியவர்கள் சமூகத்திற்குள் சென்று வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை.

மாறாக முதியவர்கள் உள்ள வீடுகளுக்கு வைரஸ் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் தொடர்ந்தும் இவ்வாறு பொறுப்பற்று செயற்பட்டால் மரணங்களின் எண்ணிக்கை தடுக்க முடியாதாகிவிடும்.

கம்பஹா மாவட்டத்தில் மையம் கொண்டிருந்த கொரோனா இரண்டாம் அலை , தற்போது கொழும்பில் மையம் கொண்;டு பரவல் அதிகரித்துள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பி.சி.ஆர். பரிசோதனை, தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களை இனங்காணல் என்பன முக்கியத்துவமுடையவையாகும்.

இந்நிலையில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமை இடங்களை இனங்கண்டு வரைபடத்தை தயாரிக்குமாறு நாம் பல தடவைகள் வலியுறுத்தியுள்ள போதிலும் தொற்று நோயியல் பிரிவு அதனை இது வரையில் செய்யவில்லை. அடுத்த வாரமளவிலேனும் இந்த செயற்பாடு நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

Read:  பாகிஸ்தான் சம்பவம் - வெட்கமும் துக்கமும்
VIA(எம்.மனோசித்ரா) WK