குண்டுதாரியின் மனைவி ஸாறா ஜஸ்மின் பொலிஸ் பரிசோதகரான அபூபக்கருடன் வண்டியில் செல்வதைக் கண்கண்ட சாட்சியுள்ளது – வெளியானது அதிரடித் தகவல்

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலின் குண்டுதாரியான மொஹம்மட் ஹஸ்தூனின் மனைவியான, 2 ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக கூறப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் அல்லது சாரா ஜஸ்மின் அல்லது சாரா கடந்த 2019 செப்டம்பர் மாதம் இள மஞ்சள் நிற கெப் வண்டியில், பிரதான பொலிஸ் பரிசோதகர் அபூபக்கருடன் செல்வதைக் கண் கண்ட சாட்சியாளர் உள்ளதாக  பிரதான பொலிஸ் பரிசோதகர் அர்ஜுன மஹின்கந்த தெரிவித்தார்.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில்  சேவையாற்றும்  பிரதான பொலிஸ் பரிசோதகர் அர்ஜுன மஹின்கந்த நேற்று ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க அழைக்கப்பட்ட போதே அவர் இந்த தகவலை வெளிப்படுத்தினார்.

சாரா ஜஸ்மின் அல்லது சாரா எனும் குறித்த பெண் கடந்த 2019 செப்டம்பர் மாதம் நாட்டிலிருந்து தப்பி இந்தியாவுக்கு சென்றுள்ளமை தொடர்பில் சந்தேகிக்கத்தக்க  சாட்சியங்கள் உள்ளதாகவும் அவர் இதன்போது சாட்சியமளித்தார்.

21/4 உயிர்த்த ஞாயிறுதினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க  விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக்குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவில்  இடம்பெற்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில்    குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.

இதன்போது அரசின் மேலதிக சொலிசிட்டர்  ஜெனரல் அய்ஷா ஜினசேனவின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு பிரதான பொலிஸ் பரிசோதகர் அர்ஜுன மஹின்கந்த  சாட்சியமளித்தார்.

அதன் சுருக்கம் வருமாறு,

‘ உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலின் குண்டுதாரியான மொஹம்மட் ஹஸ்தூனின் மனைவியான புலஸ்தினி ராஜேந்திரன் அல்லது சாரா, களுவாஞ்சிக்குடியிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உதவியமை தொடர்பில், சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, சாராவின் மாமாவை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

உண்மையில் கல்முனை – சாய்ந்தமருது வெலிவொலிவேரியன் கிராமப்பகுதியில்  கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி வீடொன்றுக்குள் குண்டை வெடிக்கச் செய்து நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் உயிர் தப்பியதாக  நம்பப்டும் சாரா ஜெஸ்மின் எனும் பெண் களுவாஞ்சிக் குடி , மான்காடு பகுதியில் மறைந்திருந்ததாக கண் கண்ட சாட்சியாளர் ஒருவர் ஊடாக எனக்கு கடந்த 2020 ஜூலை 06  ஆம் திகதி  தகவல் கிடைத்தது. அதன்படி கடந்த ஜூலை 8 ஆம் திகதி நான் மட்டக்களப்பு சென்றேன்.  அங்கு சாராவை நேரில் கண்ட நபரையும் சந்தித்தேன்.

அந்த கண்கண்ட சாட்சியாளரின் சாட்சியத்தின் பிரகாரம்,  கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள், அதிகாலை 3.15 அளவில்  மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் தேத்தாதீவு பகுதியை கடந்து சென்றுகொண்டிருந்த போது,  பிரதான வீதிக்கு நுழைய முடியுமான குறுக்கு வீதியான  கடற்கரை வீதியிலிருந்து பெண் ஒருவரும்  இரு ஆண்களும்  வந்துள்ளனர். 

அதனை குறித்த கண்கண்ட சாட்சியாளர் அவதானித்துள்ளார்.  அப்பெண் அப்போது கறுப்பு நிற பர்தா அணிந்திருந்ததாகவும், முகத்தை மறைத்திருக்கவில்லை எனவும்  அவரின் பின்னால் இரு ஆண்கள் வந்ததையும்  கண்டதாக சாட்சியாளர்  அவதானித்துள்ளார்.

அவ்வாறு பிரதான வீதிக்கு வந்த பெண், பாதை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த இள மஞ்சள் நிற கெப் ரக வாகனத்தில் ஏறுவதை சாட்சியாளர் அவதானித்துள்ளார்.

குறித்த கெப் வண்டியின் பின் ஆசனத்தில் அந்த பெண் அமர்ந்துள்ளதுடன், முன் ஆசனத்தில், அதாவது சாரதி ஆசனத்துக்கு அருகே உள்ள ஆசனத்தில் அப்போது களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி அபூபக்கர் இருந்துள்ளதை சாட்சியாளர் கண்டுள்ளார். தற்போது அபூபக்கர் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் சி.சி.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கண்கண்ட சாட்சியாளர், பொலிஸ் அதிகாரியை சந்தேகித்து அவரிடம் விசாரிக்க தனது வாகனத்தை விட்டு இறங்கும் போதே, அந்த இள மஞ்சள் நிற கெப் வண்டி மட்டக்களப்பு பகுதியை நோக்கி வேகமாக சென்றது.

இதன்போது மேலதிக விசாரணையில், சாராவுக்கு படகு மூலம் இந்தியாவுக்கு செல்ல உதவிய இருவர் தொடர்பிலும் தகவல் கிடைத்தது. அதில் ஒருவர் சாராவின் மாமா. அவர் சாராவின் தாயாரின் தங்கையின் கணவராவார். மற்றையவர் அவரது சகோதரராவார்.

கடந்த 2019 செப்டம்பரில் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு முன்பு சாரா களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் மூன்று இடங்களில் பதுங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.’ என சாட்சியாளர் இதன்போது குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் ஆணைக்குழுவில் சாட்சியமளித்த, தாக்குதல்கள் இடம்பெற்ற 2019 ஏப்ரல் மாதம் அம்பாறைக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாமந்த விஜேசேகர,

‘ கல்முனை – சாய்ந்தமருது வீட்டில்  2 ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த  புலஸ்தினி ராஜேந்திரன் அல்லது சாரா என அறியப்படும் பெண் உள்ளிட்ட 17 பேர் வரை இறந்ததாக விசாரணையில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்ட போதும், டி.என்.ஏ. பரிசோதனையில் சாராவின் அடையாளம் உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

சாரா இறுதி நிமிடம் வரை குறித்த வீட்டில் இருந்ததை, சி.ஐ.டி.யினர் தாக்குதலின் பின்னர் உயிர் பிழைத்த நிலையில் கைது செய்த பயங்கரவாதி சஹ்ரானின் மனைவியும், தாம் கைதுசெய்த சஹ்ரானின் பிரதான உதவியாளர் சியாமும் உறுதி செய்த போதும் டி.என்.ஏ.யில் சாரா கொல்லப்பட்டமையை உறுதி செய்ய முடியவில்லை என அவர் சாட்சியமளித்தார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page

Free Visitor Counters