பெண்களின் அந்தரங்கங்களை பேஸ்புக்கில் பகிரும் செயலிகள் – அவதானம்

இன்றைய தலைமுறையினரிடையே ஸ்மார்ட்  போன்கள் இன்னொரு மினி உலகம் என்று கூறும் அளவுக்கு தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

ஸ்மார்ட்  போன்களை  உயிரோட்டமாக்குவது செயலிகள். இந்த செயலிகள்  முதலில் பயனர்களின் மனதைத் திருடி அதன் பின் அவர்களின் அந்தரங்கம் முதல் அனைத்தையும் அவர்களுக்கு தெரியாமல் சூறையாடிவிடுகின்றது.

செயலிகளின் இந்த தனி நபர் விபரக் கொள்ளையானது அவற்றின் வருமானம் மட்டுமே நோக்கமாகச் செயற்பட்டுவருகின்றது.

 தமது அன்றாட வேலைப்பழு காரணமாக தமது சொந்த விடயங்களை கண்காணிக்கத் தவறிவிடும்  இன்றைய சமூகம் தமது அந்தரங்க செயற்பாடுகளையும் செயலியின் உதவியுடன் தான் மேற்கொள்கின்றது.

எமது பலவீனத்தை தமது வருமானமாக்கியுள்ள சில செயலிகளில் ஒரு வகைதான் பெண்களைக் குறிவைத்துள்ள அந்தரங்கம் சார்ந்த செயலிகள்.

பெண்களின் மாதவிடாய் சுழற்சியைக் கண்காணிக்கும் செயலிகளாக இணையத்தில் உலாவரும் இச் செயலிகள் ஒருவர் எப்போது உடலுறவு கொள்கிறார் என்பது உட்பட தனிநபர்களின் அந்தரங்க தரவுகள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படுவதாக ‘பிரைவேசி இன்டர்நேஷனல்’ (PL) நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

உடல்நலம் சார்ந்த தகவல்கள், பாலியல் தரவுகள் முதல், எண்ணவோட்டம், பயனர்கள் உண்பவை, குடிப்பவை மற்றும் மாதவிடாய் காலத்தில் பெண்ணொருவர் பயன்படுத்தும் சுகாதார பொருட்கள் வரை மிகவும் அந்தரங்க தரவுகளை இந்த மாதவிடாய் செயலிகள் சேகரிக்கின்றன.

இத்தகைய தகவல்களைப் பெண்கள் அந்த செயலிகளிடம் அளிப்பதற்குப் பிரதிபலனாக, அந்த மாதத்தில் அவர்கள் கரு வளத்தோடு இருக்கின்ற நாட்கள் அல்லது அடுத்த மாதவிடாய் காலம் எப்போது வரும் என்பதைத் தெரிந்து கொள்ளும் சேவையை இந்த செயலிகள் வழங்குகின்றன என இவ் ஆய்வு தெரிவிக்கின்றது.

இங்கு “Purpose: ” என்ற கேள்விக்கு பயனர்கள் வழங்கும் பதிலுக்கு ஏற்ப இது தொடர்பான பொருட்களை விளம்பரம் செய்வோருக்கு பேஸ்புக் ஊடாக தகவல்கள் பகிரப்பட்டு விளம்பர வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றது என்பதை PL சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தகைய அந்தரங்க தகவல்களை பேஸ்புக் நிறுவனத்தோடு பகிர்வது சமூக வலையமைப்பின் மென்பொருள் மேம்பாட்டுக் கூறுகள் (எஸ்டிகே) மூலம் நடைபெறுகிறது.

இவ்வாறான செயலிகள் உங்கள் அனுமதியின்றி உங்களை பற்றிய எந்த தரவுகளை பெற்று கொள்ளமுடியாது.  

செயலியைப் பயன்படுத்துவோரின் சுதந்திரமான மற்றும் நேரடியான சம்மதத்தை, வெளிப்படையாக பெறாத போதிலும் இத்தகைய  செயலிக்குள் நுழைவதற்கு முன்னரே அவற்றின் நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் மற்றும் அந்தரங்க கொள்கைகள் பற்றி பயனர்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றது.  

இவற்றை கருத்தில் கொள்ளாது ஏனைய செயலிகளுக்கு வழங்குவது போன்று அனைத்து நிபந்தனைகளுக்கும் சம்மதம் தெரிவிப்பது  உங்களின் அந்தரங்க தரவுகள் திருடப்படுவதற்கு வாய்ப்பாக அமைகின்றது.

பிளாக்கால் டெக் நிறுவனத்தின் மாயா (Maya), மோப்ஆப் டெவலப்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் எம்.ஐ.ஏ.  மற்றும் லின்ச்பின் ஹெல்த் நிறுவனத்தின் பீரியட் டிராக்கர் ஆகிய பிற செயலிகள் இத்தகைய அந்தரங்க தகவல்களை பேஸ்புக் கோடு பகிர்கின்றது என ‘பிரைவேசி இன்டர்நேஷனல்’ கண்டுபிடித்துள்ளது.

இருப்பினும் இந்த ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளபடி, இத்தகைய அந்தரங்க தகவல்களைத் திரட்டுவதற்கு உருவாக்கப் பட்டுள்ள பேஸ்புக் எஸ்.டி.கே. மற்றும் அனலிடிக்ஸ் எஸ்டிகே ஆகிய இரண்டையும் தமது செயலிகளிலிருந்து உடனடியாக அகற்றியுள்ளதாக மாயா செயலி, ‘பிரைவேசி இன்டர்நேஷனல்’ நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த நிறுவனத்தின் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளையும், அந்தரங்க கொள்கைகளையும் ஒப்புக்கொள்வோருக்கு பேஸ்புக் விளம்பர எஸ்டிகே-யை பயன்படுத்துவதைத் தொடர்வதாகவும் அது கூறியுள்ளது. ஆனால், தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தரவுகள் அல்லது மருத்துவ தரவுகள் எதுவும் பகிரப்படாது என்று அது மேலும் தெரிவித்துள்ளது.

இக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பேஸ்புக் நிறுவனம்  மக்கள் விரும்புவதை இலக்கு வைத்தே விளம்பரம் செய்யப்படுவதாகவும், பயனர்கள் குறித்து மற்ற செயலிகள் அளிக்கும் தரவுகள் இதற்கு பயன்படுத்தப்படுவதில்லை என்றும்  கூறியுள்ளது.

அத்துடன் செயலிகளும், வணிக நிறுவனங்களும் தாங்கள் பெறுகின்ற தரவுகளை பேஸ்புக்கோடு பகிர்ந்து கொள்வதை அந்த செயலியின் பயனர்கள் தடுக்கும் வசதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

“இவ்வாறான அந்தரங்க செயலிகளின் மீது பயனர்கள் வைக்கும் நம்பிக்கையை  காப்பாற்றுவது அந்தந்த நிறுவனங்களின் பொறுப்பாகும்” என்று ‘பிரைவேசி இன்டர்நேஷனல்’ கூறியுள்ளது.

பெண்களின் அந்தரங்கங்களை பேஸ்புக்கில் பகிரும் செயலிகள் – அவதானம்எவ்வாராயினும் எமது அந்தரங்க தகவல்களுக்கு முழுப்பொறுப்பு உடையவர்கள் நாமே இவ்வாறான செயலிகளின் பயன்பாட்டை தவிப்பது அல்லது உங்களைப்பற்றிய அந்தரங்கங்களைப் பகிர்வதை தவிர்ப்பதன் மூலம் தேவையற்ற மன உளைச்சல்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.

Check Also

வட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சரை ஒன்றிணைக்க திட்டம்

பேஸ்புக் மெசஞ்சருடன் வட்ஸ்அப்பை ஒன்றிணைக்கும் புதிய திட்டத்தை பேஸ்புக் நிறுவனம் பரிசோதித்து வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இவ்வாறு இணைக்கும் போது …

You cannot copy content of this page

Free Visitor Counters