வழமைக்கு மாறான வரவு – செலவு திட்ட வாசிப்பு – பிரதமர் மஹிந்த அமர்ந்து சமர்ப்பித்தமை ஏன் ?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர்  சமர்ப்பிக்கப்படும்  முதலாவது வரவு செலவு திட்டம் பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ் இன்று பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.

பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று பிற்பகல் 1.45 மணி்க்கு வரவு செலவு திட்டத்தை வாசிப்பதற்கு ஆரம்பித்து 4,50மணியளவில் நிறைவுக்கு கொண்டுவந்தார். 

பாராளுமன்ற இன்று 2021 வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பிற்பகல் 1.40 மணிக்கு கூடியது.

ஆரம்ப நடவடிக்கைகளைத்தொடர்ந்து  அடுத்தவருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்க பிரதமரும் நிதி அமைச்சரும் மஹிந்த ராஜபக்ஷ்வை சபாநாயகர் அழைத்தார். அதன் பின்னரே பிரதமர் படைக்கல சேவிதர்களின் உதவியுடன் சபைக்குள் வந்து, வரவு செலவு திட்டத்தை வாசிப்பதற்கு ஆரம்பித்தார்.

மூன்று உறுப்பினர்கள் வரவில்லை

பிரதமரினால் வரவு செலவு திட்டம் சமர்ப்பித்து வாசிப்பதற்கு முன்னரே ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களின் ஆசனங்களில் அமர்ந்து கொண்டிருந்தனர்.

என்றாலும் நீதிமன்ற உத்தரவில் சிறைச்சாலைகளில் இருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைலர் ரிஷாத் பதியுதீன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் சிறைச்சாலைகளில் கொவிட் அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களை  பாராளுமன்றத்துக்கு அழைத்துவரவில்லை.

வழமைக்கு மாறாக இடம்பெற்ற சம்பவங்கள்

விருந்தினர்கள்

புதிய வருடத்துக்கான வரவு செலவு திட்ட வாசிப்பு இடம்பெறும் போது பாாரளுமன்ற கலரியில் விசேட விருந்தினர்கள் அரச உயர் அதிகாரிகள், மாகாண ஆளுநர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு விசேட விருந்தினர்கள் 30பேருக்கு வரையறுக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஊடகவியலாளர்கள் எவருக்கும் இடமளிக்கப்படவில்லை என்பது விசேட அம்சமாகும். 

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price

இடைநடுவில் தேநீர் இடைவேளை

அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து வாசித்துக்கொண்டிருக்கையில் 2.50 மணியளவில் அவருக்கு ஏற்பட்ட களைப்பின் காரணமாக 10 நிமிடம் நேரம் கேட்டு ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.

அதனைத்தொடர்ந்து சபாநாயகர் 30 நிமிடங்களுக்கு தேநீர் இடைவேளைக்கு சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார். பாராளுமன்றம் மீண்டும் 3.20 மணிக்கு ஆரம்பித்ததும் பிரதமர் தொடர்ந்து வரவு செலவு திட்டத்தை வாசிக்க ஆரம்பித்தார்.

அமர்ந்துகொண்டு வாசித்தார்

தேநீர் இடைவேளைக்கு பின்னர் சுமார் அரை மணிநேரம் வரை அறிக்கை வாசித்துக்கொண்டிருக்கையில் ஏற்பட்ட களைப்பில் சபாநாயகரிடம் சிறிது நேரம் கேட்டு ஆசனத்தில் அமர்ந்தார்.

பின்னர் ஆசனத்தில் அமர்ந்தவாறு வாசிக்குமாறு தெரிவித்ததும் வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்து முடிவதற்கு சுமார் 5 நிமிடங்கள் இருக்கும்போது மீண்டும் எழுந்து நின்று வாசித்து 4.50மணியளவில் முழுமையாக சமர்ப்பித்தார்.

இரண்டரை மணி நேரம்வரை நீடித்த வரவு செலவு திட்ட உரை

அடுத்த வருடத்துக்கான வரவு செலவுதிட்டத்தை பிரதமர் பிற்பகல் 1.45மணிக்கு சமர்ப்பித்து வாசிக்க ஆரம்பித்து பிற்பகல் 4.50மணிக்கு முடித்துக்கொண்டார். இதற்கிடையில் அரை மணி நேரம் தேநீர் இடைவேளை வழங்கப்பட்டது. 

அதன் பிரகாரம் சுமார் 2 அரை மணிநேரத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான முழு வரவு செலவு திட்டத்தையும் பிரதமர் சமர்ப்பித்தார். இறுதியாக சபாநாயகர் சபையை வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்துக்காக நாளை காலை 9.30மணிவரை ஒத்துவைத்தார்.

மஹிந்த ராஜபக்ஷ்வினால் சமர்ப்பிக்கப்பட்ட 11 ஆவது வரவு செலவு திட்டம்

பாராளுமன்ற வரலாற்றில் நிதி அமைச்சராக இருந்து 12 வரவு செலவு திட்டங்களை சமர்ப்பித்து முதலிடத்தில் இருப்பது முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டிமேல் ஆகும்.

Read:  பாகிஸ்தான் சம்பவம் - வெட்கமும் துக்கமும்

அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்ததன் மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் 11 தடவைகள் சமர்ப்பித்து இரண்டாம் இடத்தில் இருக்கின்றார். இதில் மூன்றாம் நிலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ஜே,ஆர் ஜயவர்த்தன 9தடவைகள் வரவு செலவு திட்ட உரைகளை சமர்ப்பித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

SOURCEவீரகேசரி பத்திரிகை (ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்)