மத்திய வங்கி மோசடி, ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலே கடந்த அரசாங்கத்தின் இலட்சணம் – விஜயதாஸ ராஜபக்ஷ

முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி அங்கிகரிக்கப்ட்ட கட்சியல்ல. அது ஒரு கட்சியில் இருந்து வெளியேறிய குழு. அடிப்படைவாதிகளின் கூட்டணியே  ஒன்றிணைந்துள்ளார்கள்.

நாட்டை இல்லாதொழித்து. இனங்களுக்கிடையில்  பிளவினை  ஏற்படுத்த முயற்சித்த தீவிரவாதிகளை போசித்த அரசியல்வாதிகளின் கூட்டணியை அரசியல்  கட்சி என குறிப்பிடுவது தவறு என முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

கெஸ்பாவ  பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த அரசாங்கத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் பல குறைப்பாடுகளை  தம்வசம் வைத்துக்கொண்டு மீண்டும் மக்களாணையை   கோருகிறார்கள்.

அரசியல் ரீதியில் இடம் பெற்ற தவறுகள் 2018ம் ஆண்டில் இருந்து திருத்திக் கொள்ளப்படுகிறது. மத்திய வங்கி  மோசடி, ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் ஆகியவை கடந்த  அரசாங்கத்தின் இலட்சணமாகும்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் கடந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையினை வெளிப்படுத்தியது 2019. ஏப்ரல் 21 ஆம் திகதி   குண்டுத்தாக்குதல்  இடம் பெறுவதற்கு 30 மாதங்களுக்கு முன்னர்  நான் பாராளுமன்றத்தில்  நீதியமைச்சர் என்ற பொறுப்பான பதவியில் இருந்து பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றினேன்.

பயங்கரவாதி சஹ்ரான் உட்பட 32 பேர் குண்டுத்தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டேன். ஒரு  இனத்தை மலினப்படுத்தும் நோக்கில் கருத்துரைக்கவில்லை. தேசிய பாதுகாப்பின் மீது இருந்த அச்சுறுத்தலை தெளிவுபடுத்தினேன்.

பயங்கரவாதி  சாஹ்ரான் தொடர்பில் குறிப்பிட்ட விடயத்தை அப்போதைய அமைச்சரவை பேச்சாளர் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் கடுமையாக  எதிர்த்தார்கள்.

என்னை இனவாதியாக குற்றஞ்சாட்டினார்கள். நாட்டில் தளைத்தோங்கியுள்ள அடிப்படைவாதம் தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவ்வேளையில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

Read:  மீண்டும் ரணில் !!

அவரால் எடுக்கவும் முடியாது. அடிப்படைவாதத்துடன் தொடர்புடையவர்களுடன்  தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு எதிராக  நடவடிக்கை  எடுத்தால் அவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவார்கள் அதனால் தனது பிரதமர் பதவி  பறிபோகும் என்று அவர் கருதி அமைதி காத்தார். அடிப்படைவாதிகள்  தங்களின் மிலேட்சத்தனமான  தாக்குதலை  நிறைவேற்றிக் கொண்டார்கள்.

ஏப்ரல்  21 குண்டுத்தூக்குதல் தொடர்பான குற்றச்சாட்டை  முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போது  ஐக்கிய மக்கள்  சக்தி தரப்பில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது முன்வைத்துள்ளேன் .

இதுவரையில் எவரும் என் குற்றச்சாட்டை எதிர்த்து எவ்வித நடவடிக்கைளும்  எடுக்கவில்லை. குண்டுத்தாக்குதல் தொடர்பான அனைத்து இரகசிய தகவல்களையும்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு  வழங்கியுள்ளேன்.

ஐக்கிய மக்கள் சக்தியை கட்சி என்று குறிப்பிடுவது தவறு ஒரு கட்சியில் இருந்து  விலகிய  கூட்டணி என்று குறிப்பிட வேண்டும்.    அடிப்படைவாதத்திற்கும், நாட்டை இல்லாதொழிக்க முயற்சித்த தீவிரவாதிகளுக்கும் உதவிய தரப்பினரது கூட்டணி என்றே  அதனை   குறிப்பிட வேண்டும். கடந்த  அரசாங்கத்தில் இடம்  பெற்ற முறைக்கேடுகளில் இருந்து  சஜித் தரபபினரால் மாத்திரம் விடுப்பட முடியாது.

5வருட ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு நாட்டை விற்கும் உரிமை கிடையாது.15 ஆயிரம் ஹேக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்க வேண்டாம் என ரணில் விக்ரமசிங்கவிற்கு  குறிப்பிட்டேன்.

99  வருட காலத்திற்கு துறைமுகம்  வழங்கப்பட்டுள்ளது. அதாவது 4 தலைமுறையினருக்கு  எமது நாட்டு துறைமுகத்தை உரிமைகொண்டாட முடியாது. இது வெறுக்கத்தக்கதொரு செயற்பாடாகும்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ  அனைத்து இன  மகக்ளுக்கும்    சிறந்த தலைவராக செயற்படுகிறார். அரசியல் கட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அவர்  நாட்டை நிர்வகிக்கவில்லை. 

Read:  மீண்டும் ரணில் !!

பொது கொள்கையின் அடிப்படையில்  செயற்படுகிறார். பாராளுமன்றம் அரசியல் கட்சிகளை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டும் என்ற  நிலை காணப்படுகிறது. ஆகவே  அவரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி  பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கத்தை அமைக்க் வேண்டும். என்பது  கட்டாயமாகும் என்றார்.

SOURCEவீரகேசரி பத்திரிகை (இராஜதுரை ஹஷான்)