குருநாகலை ஆண்ட புவனேக பாகுவின் வரலாற்றுத் தகவல்கள்!

வத்ஹிமி அல்லது கலே பண்டார என அழைக்கப்படும் ஒரு முஸ்லிம் மன்னன் குருநாகலை இராசதானியை குறுகிய காலம் ஆண்டுள்ளார். இவரது இயற் பெயர் ‘குரஷான் செய்யது இஸ்மாயில்’ என்பதாகும். இவர் இரண்டாம் புவனேகபாகுவின் புதல்வராவார். அவரது முஸ்லிம் மனைவிக்குப் பிறந்த இஸ்மாயில்| தந்தை இரண்டாம் புவனேகபாகுவின் மரணத்தைத் தொடர்ந்து மன்னரானார். இது குறித்த செய்திகளையும் வரலாற்றுத் தகவல்களையும் சற்று விரிவாக நோக்குவோம்.

குருநாகலையும் முஸ்லிம் குடியேற்றமும்:
இலங்கை முஸ்லிம்கள் கடற்கரைப் பிரதேசங்கள் மட்டுமன்றி நாட்டின் மத்திய பகுதியிலும் பரவலாகக் குடியேறியுள்ளனர். குறிப்பாக குருநாகலையில் முஸ்லிம்கள் 14 ஆம் நூற்றாண்டுகளில் (இற்றைக்கு 650 வருடங்களுக்கு முன்பிருந்தே) குடியேறியுள்ளனர் என்பதை வரலாற்றில் இருந்து அறிய முடிகின்றது.

இலங்கையை 1344 களில் தரிசித்த மொரோக்கோ நாட்டு நாடுகாண் பயணி இப்னு பதூதா அவர்கள் தான் குருநாகலையில் முஸ்லிம்களைச் சந்தித்ததாகவும், அங்கு சேகு உதுமான் சீராதியின் பள்ளி இருந்ததாகவும், அவர் பாவாத மலைக்குச் செல்லும் பயணிகளுக்கு வழிகாட்டினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(ரிஹ்லது இப்னு பதூதா (கைரோ 1928 11{137)
நன்றி: இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும்: பக்கம்: 14

இந்தக் குறிப்பில் இருந்து குருநாகலையில் 650 வருடங்களுக்கு முன்பே குறிப்பிடத்தக்க முஸ்லிம்கள் வாழ்ந்திருப்பதை அறியலாம். குருநாகல் இலங்கையின் மையப் புள்ளியில் அமைந்திருப்பதால் இந்தப் பகுதி முஸ்லிம்கள் பரவலாகக் குடியேறும் நிலை ஏற்பட்டிருக்கலாம்.

குருநாகல இராசதானியும் புவனேகபாகு மன்னனும்:
கடற்கரை அல்லாத ஏனைய பிரதேசங்கள் (மலைய ரட, கண்டி) இராஜ்ஜியமாகவே அழைக்கப்பட்டு வந்தன. வெளிநாட்டவர் எதிர்ப்பு, சகோதர குரோதங்கள், யாழ்ப்பாண அரசின் எதிர்ப்புக்கள் போன்ற காரணங்களினால் பொலநறுவையில் இருந்த இராசதானி தம்பதெனியா, யாப்பகுவ, குருநாகல் என மாறியது. இரண்டாம் புவனேகபாகு குருநாகலையில் ஆட்சி செய்தான். (1293-1302) இம்மன்னனுக்கு பல மனைவியர் இருந்தும் வாரிசு இல்லாதிருந்தது. மாற்றுமதப் பெண்ணை மணந்தால் ஆண் வாரிசு கிடைக்க வாய்ப்புள்ளது என்ற ஜோதிடர்களின் கூற்றுக்கு ஏற்ப அஸ்வதும (யுளறயனரஅய) என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்ணை மணந்தான். அவனுக்குக் கிடைத்த மகன்தான் வத்ஹிமி என்றும் கலேபண்டார என்றும் அழைக்கப் படுகின்றான்.

இந்த முஸ்லிம் பெண் பேருவலை பிரதேசத்திலிருந்து இங்கு வந்து குடியேறியவள். பேருவலை மருதானையில் இம்மன்னனின் பெயரோடு தொடர்புபட்ட ஒரு கிராமம் ‘வெத்துமி ராஜ புர’ என்ற பெயரில் உள்ளது.

தனக்குக் கிடைத்த ‘குறைஷான் இஸ்மாயில்’ எனும் இவ்விளவரசனை பேருவளையில் இஸ்லாமியப் பயிற்சிகளுடன் அவரது குடும்பம் வளர்த்தது. இவன் வளர்ந்து இள வயதான போது ஒரு துயர் சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகின்றது. புவனேகபாகு மன்னன் ஒரு போருக்குச் சென்றான். அந்தப் போரில் அவன் வெற்றியும் பெற்றான்.

மன்னனுக்கு இருபது அல்லது அதற்கும் அதிகமான மனைவியர் இருந்தனராம். மன்னன் போரில் வென்றால் வெள்ளைக் கொடியையும் தோற்றால் கருப்புக் கொடியையும் காட்டுமாறும் கூறியிருந்தனராம். வெற்றிக் களிப்பில் மது அருந்திய படை வீரன் வெள்ளைக்குப் பதிலாக கறுப்புக் கொடியைக் காட்டியதால் இராணிகள் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் இதையறிந்த மன்னன் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் எமது தலைப்பிற்கு முக்கியத்துவமானது அல்ல. மன்னனின் மரணத்தின் பின்னர் மன்னனின் முஸ்லிம் மகன் முடி சூடப்பட்டான். முஸ்லிம் ஒருவர் மன்னராக இருப்பதை மத குருக்களும் முக்கியஸ்தர்களும் விரும்பாததால் மலை உச்சியில் யாகம் செய்ய என அழைத்துச் செல்லப்பட்டு மன்னன் மலையில் இருந்து வீழ்த்தப்பட்டு கொல்லப்பட்டான். இந்த மன்னன் குறுகிய காலமே ஆட்சி செய்தான்.

இரண்டாம் புவனேகபாகுவின் முஸ்லிம் மனைவிக்குப் பிறந்த கலே பண்டார எனும் இளவரசன் சம்பந்தப்பட்ட இச்சம்பவம் உண்மையானது என ர்.று. கொட்ரிங்டன் எனும் வரலாற்றாசியர் குறிப்பிடுகின்றார். (இலங்கையின் சுருக்க வரலாறு – தமிழ் மொழி பெயர்ப்பு) ர்.று. கொட்ரிங் (1960) 71 ஆம் பக்கம். (நன்றி: கண்டி இராச்சிய முஸ்லிம்களின் சிங்கள வம்சாவளிப் பெயர்கள்: பக்கம் 24)

A.J.M. நிலாம் எனும் அரசியல் ஆய்வாளர் தனது கட்டுரையொன்றில் இச்சம்பவம் பற்றிக் குறிப்பிடும் போது,

‘குருநாகல் விஸ்தரய எனும் நூல் இந்த சரித்திரத்தைக் குறிப்பிடுகின்றது. மகா வம்சம் விபரிக்கையில் இம்மன்னன் அறம் செய்வதன் மூலம் நன்மை பெற முயன்ற ஒரு ஆட்சியாளன் முஸ்லிமாயினும் தினமும் 1000 பிக்குகளுக்கு தானம் வழங்குவதைக் கடமையாகக் கொண்டிருந்தான். என்றெல்லாம் சிறப்பித்துக் கூறுகின்றது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் மன்னன் கொல்லப்பட்ட பின் சில அமானுஷ்ய விடயங்கள் நடந்ததாகவும், அவனைக் கொன்றதே அதற்குக் காரணம் என்றும் மக்கள் நம்பியுள்ளனர். குதிரை யில் நகர் வலம் வரு வதை இம்மன்னன் வழக்கமாகக் கொண்டி ருந்தானாம். அவன் கொல்லப்பட்ட பின்னர் அவன் இரவில் குதிரை யில் வருவதை சிலர் கண்டார்களாம். (இது இஸ்லாமிய நம்பிக் கைக்கு முரணானது.) எனவே, வத்ஹிமி மன்னனைக் காவல் தெய்வமாக மதித்தனர்.

கொல்லப்பட்ட மன்னன் குருநாகல் கச்சேரி வீதியில் அடக்கம் செய்யப்பட் டான். மார்க்க அறிவற்ற முஸ்லிம்கள் கலே பண்டார அவ்லியா என்ற நம்பிக்கையில் இங்கு சென்று பிரார்த்தனைகளைச் செய்து வருகின்றனர்.

அதிகமான சிங்கள மக்கள் இவரை கலேபண்டார தெய்யோ என அழைத்து வழிபட்டு வருகின்றனர். மன்னராக ஏற்க மறுத்தவர்கள் கடவுளாக வழிபட்டு வருவது ஆச்சரியம்தான்!

சிங்கள மக்கள் கலேபண்டார தேவாலய எனும் பெயரில் தனி ஆலயம் அமைத்து விழாக்களையும் இவர் பெயரில் நடத்தி வருகின்றனர்.

இம்மன்னன் ஆண்ட காலம் குறித்து கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஓரிரு வருடங்கள் ஆட்சி செய்துள்ளார். 1288-1290 வரை அவர் ஆண்ட காலமாகக் கூறப்படுகின்றது. இந்த நிகழ்வு 13 ஆம் நூற்றாண்டிலேயே அதாவது 700 வருடங்களுக்கு முன்னரே குருநாகலில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்தமைக்குச் சான்றாக அமைந்துள்ளது.

அத்துடன் அரசன் பெண் எடுக்கும் அளவுக்கு அவர்கள் கௌரவ சமூகமாகவும் இருந்திருப்பதைக் காணலாம். சாதி வேறுபாடுகள் நிலவி வந்த அந்த சமூக அமைப்பில் முஸ்லிம்கள் உயர் சாதிக்கு சமமாக மதிக்கப்பட்டனர் என்பதை இந்தத் திருமண நிகழ்வு மூலம் அறியலாம்.

இதே வேளை, ஒரு மன்னனை மணந்தும் கூட மதம் மாறாமல் இருந்த அந்த முஸ்லிம் பெண்ணின் மார்க்க உறுதியையும் இச்சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. மன்னனின் மகனை இஸ்லாமிய நெறியில் வளர்த்தமை அந்தப் பெண்ணின் மார்க்க உறுதிக்கு பெரிதும் எடுத்துக்காட்டாக அமைகின்றது.

முஸ்லிம் பெண்ணை மணந்தாலும் அந்தப் பெண்னை மதம் மாற்ற முயற்சிக்காத, தனது மகனை இஸ்லாமிய முறையில் வளர்க்க அனுமதித்த புவனேகுபாகு மன்னனின் தாராளத் தன்மையும் இதில் தெளிவாகின்றது.

அத்துடன் அரசன் மதம் மாறியிருந்தால் அந்த மக்கள் அவனை ஏற்றிருப்பார்கள். இந்த நாட்டில் பல தமிழ் மன்னர்கள் மதம் மாறியுள்ளனர். அண்மைக் கால வரலாற்றில் கூட அரசியல் தலைமையை அடைய பல அரசியல் தலைவர்கள் தமது மதங்களை மாற்றியுள்ளனர்.

இந்த மன்னன் அக்கால முறைப்படி சிங்களப் பெயரில் ஆட்சி செய்தாலும் தனது மார்க்க நெறியை மாற்றிக் கொள்ளாதது அவனது உறுதிக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இன்றைய முஸ்லிம் சமூகம், இந்த மன்னன் மற்றும் இவனது தாயிடமிருந்து கற்க வேண்டியவை அதிகம் இருக்கின்றன.

வத்ஹிமி, கலேபண்டார என்று அழைக்கப்படும் குறைஷான் இஸ்மாயில் எனும் இந்த மன்னன் தொடர்பான வரலாறு இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்திற்கான ஆதாரங்களில் ஒன்றாகும். SHM இஸ்மாயீல் ஸலபி (01.07.2018)