இலங்கை வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிகூடிய கடன் பெற்ற வருடம் 2020ம் ஆண்டிலேயே

இலங்கை வரலாற்றில் இந்த வருடமே அதிகூடிய கடன் பெறப்பட்டிருக்கின்றது. ஆனால் நாங்கள் 100 நாட்களில் செய்த வேலைத் திட்டங்களைக்கூட 365 நாட்களாகியும் அரசாங்கத்துக்கு செய்ய முடியாமல் போயிருக்கின்றது. அதனால் தான் மக்கள் கோட்டா பைல் என தெரிவிக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் , கேகாலை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2020ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்:-

வரலாற்றில் முதல் தடவையாகவே ஒரு வருடத்தில் 2 வரவு செலவு திட்டங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றது. அரசாங்கம் கடந்த வருடம் November மாதம் ஆட்சி பொறுப்புக்கு வந்து, அமைச்சரவையையும் ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் இந்த அரசாங்கத்துக்கு 2020ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமொன்றை தயாரித்து சமர்ப்பித்துக் கொள்ள முடியாமல் போயிருக்கின்றது.

ஆனால் 2015இல் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் நாங்கள் பெரும்பான்மை இல்லாத நிலையில் 100 நாட்களில் வரவு செலவு திட்டம் ஒன்றை முன்வைத்து பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைத்தோம். அரசாங்க ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை மேற்கொண்டோம்.

எரிவாயு, பெற்றோல் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணங்களையும் பெற்றுக் கொடுத்தோம். ஆனால் இவ் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 365 நாட்களாகியும் என்ன செய்தது என்று முடியுமானால் தெரிவிக்குமாறு சவால் விடுகிறேன். குறைந்தபட்சம் வரவு செலவு திட்டத்தையேனும் சமர்ப்பிக்க முடியாமல் போயிருக்கின்றது. அதனால்தான் மக்கள் கோட்டா பைல் என தெரிவிக்கின்றனர்.

மேலும் எந்தவொரு அரசாங்கமும் அந்த வருடத்துக்குரிய செலவை ஆண்டின் ஆரம்பத்தில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து, அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளவேண்டும். ஆனால் பிரதமர் இந்த வருடத்துக்கு அரசாங்கத்தினால் செலவழிக்கப்பட்ட நிதிக்கு அனுமதியை தருமாறே கேட்கின்றார்.

அதேபோல் இந்த வருவருடத்துக்கான 2 இடைக்கால கணக்கறிக்கைகளுக்கு பாராளுமன்றத்தில் அனுமதி கிடைக்கப்பெற்றது.

அதில் January முதல் April 31 வரையும் September முதல் December 31 வரையாகும். ஆனால் அதற்கு இடைப்பட்ட May மாதம் முதல் August 21 வரையான காலத்துக்கு அரசாங்கத்தினால் செலவழிக்கப்பட்ட நிதிக்கு பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்படவில்லை. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் இல்லை. அப்படியானால் அந்த காலப்பகுதியில் அரசாங்கத்தினால் செலவிடப்பட்டது சட்டவிரோதமாகும்.

அத்துடன் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் செலவுகளுக்காக கடன் பெற்றுக் கொள்ளும்போது அதற்கான அனுமதியை பாராளுமன்றத்திடம் கேட்கவேண்டும். இந்த வருடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு இடைக்கால கணக்கறிக்கையின் மூலம் 2 லட்சம் கோடி ரூபாவை கடன் பெற்றுக் கொள்ள பாராளுமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

ஆனால் இடைப்பட்ட காலத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட கடனுக்கு யார் அனுமதி வழங்கியது என நாங்கள் கேட்கின்றோம். இந்த வருடத்தில் அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடன் காரணமாக நாட்டின் மொத்த கடன் தொகை 2 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபா இன்னும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. நாடு சுதந்திரமடைந்து வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிகூடிய கடன் பெற்ற வருடமாக 2020ம் ஆண்டே வரலாற்றில் எழுதப்படுகின்றது என தெரிவித்தார்.

SOURCEஎம்.ஜே.எம் பாரிஸ்
Previous articleஜனாதிபதியைக் கண்டு அஞ்சும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!
Next articleஇதுதானா ஜனாதிபதியின் ஒரே நாடு – ஒரே சட்டமா? முஜிபுர் ரஹ்மான்