பகிடிவதையால் பாழாய் போகும் பல்கலைகழக மாணவர்களின் வாழ்க்கை?

இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களில் 20 சதவீதத்தினர், தமது படிப்பை நடுவில் கைவிடுவதாகவும், அவர்களில் 10 இல் இருந்து 12 சதவீதத்தினர் பகிடிவதையை சகிக்க முடியாமல் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார். 

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 15 பல்கலைக்கழகங்கள் இலங்கையில் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு 2016 – 2017 ஆம் ஆண்டுக்கென மொத்தமாக 30,662 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதாக அக்குழு தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி கூறியதை வைத்துப் பார்த்தால், இந்த ஆண்டு அனுமதி பெற்ற மாணவர்களில் சுமார் 3000 பேர், பகிடிவதை காரணமாக படிப்பை இடைநிறுத்தியுள்ளதாக பொருள்கொள்ள முடிகிறது. இது அதிர்ச்சி தரும் எண்ணிக்கையாகும். 

பகிடிவதையை பல்கலைக்கழகங்களில் ஒழிப்பதற்கு சட்டம் இயற்றப்பட்டுள்ளது, சுற்றறிக்கைகளும் விடப்பட்டுள்ளன. ஆனாலும், அதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதையே சம்பவங்களும், புள்ளி விவரங்களும் உணர்த்துகின்றன. 

பகிடிவதையைச் சகித்துக் கொள்ள முடியாமல், மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் இலங்கையில் நிகழ்ந்துள்ளன. 

பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களில் பலர், பகிடிவதைகளைத் தாங்க முடியாமல், படிப்பைக் கைவிட்டுச் செல்வதாக ஜனாதிபதியே கூறியுள்ளமை கவனத்துக்குரியதாகும். 

கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை ஒழிப்பதற்கென்றே 1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, கல்வி நிறுவனங்களில் பகிடிவதையையும் வேறு வகையான வன்செயல்களையும் தடைசெய்தல் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் 946 ஆம் இலக்க சுற்றறிக்கையிலும் பகிடிவதைக்கு எதிராக சரத்துகள் உள்ளன. இந்த சரத்துக்களில், பகிடிவதையில் ஈடுபடுவோருக்கான தண்டனைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. 

பகிடிவதையில் ஈடுபடுகின்றவர்களின் பல்கலைக்கழக அனுமதியைக் கூட ரத்துச் செய்ய முடியும். இவ்வாறு அனுமதி ரத்து செய்யப்படுவோர் அவர்களின் வாழ்நாளில் எந்தப் பல்கலைக்கழகங்களிலும் படிப்பைத் தொடர முடியாது. 

´1998ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, கல்வி நிறுவனங்களில் பகிடிவதையையும் வேறு வகையான வன்செயல்களையும் தடைசெய்தல் சட்டத்தின்படி, பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்க முடியும். மேலும், பகிடிவதையினால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் இந்த சட்டத்தில் உள்ளன. 

இவ்வாறான கடும் சட்டங்களும், ஒழுக்க நடவடிக்கைகளும் இருக்கும்போதிலும் பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளைத் தடுக்க முடியாமல் போவதற்கான காரணங்கள் என்ன என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. 

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்துக்கு 2017 ஆம் ஆண்டு அனுமதி பெற்றவர் கெவின் பீரிஸ். இவர் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்தவர். பல்கலைக்கழகத்தில் கடுமையான பகிடிவதைக்கு உள்ளானதால், கெவின் தனது படிப்பை கைவிட்டார். 

இந்த நிலையில், இவரை பகிடிவதைக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் மாணவர்கள் ஆறு பேருக்கு எதிராக பல்கலைக்ககழக நிர்வாகம் ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொண்டது. அதற்கிணங்க, நான்கு மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி நிரந்தரமாக ரத்துச் செய்யப்பட்டது. மேலும் இரண்டு மாணவர்களின் அனுமதி இரண்டு வருடங்களுக்கு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

“தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மிகவும் குறைந்துள்ள போதிலும், முற்றாக ஒழியவில்லை” என்று, அந்தப் பல்கலைக்கழகத்தின் முக்கிய அதிகாரியொருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். தன்னுடைய அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அந்த அதிகாரி, மேலும் பல விடயங்களையும் பகிர்ந்து கொண்டார். 

“பகிடிவதைக்கு எதிராக எல்லோரும் குரலெழுப்புகின்றனர். பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களை தண்டிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கூறுகின்றனர். அதற்கிணங்க, பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கினால், தண்டனை பெற்ற மாணவர்கள் உடனடியாகவே, மனித உரிமை ஆணைக்குழுவிடம் சென்று முறையிடுகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்கின்றனர். 

சமூகத்தில் உள்ளவர்களில் சிலரும், தண்டனை வழங்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்குகின்றனர். அந்த மாணவர்களின் எதிர்காலத்தை பல்கலைக்கழக நிர்வாகம் நாசமாக்கி விட்டதாக குற்றஞ்சாட்டத் தொடங்குகின்றனர். 

பகிடிவதைக்குள்ளான மாணவர்களின் பக்க நியாயங்கள் பற்றி பேசாமல், பகிடிவதை செய்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை அநீதியானது என்று இவ்வாறான சந்தர்ப்பங்களில் கணிசமானோர் கூறத் தொடங்குகின்றனர். இதனால், பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பெரும் பிரச்சினைகளையும், சங்கடங்களையும் சந்திக்க நேரிடுகிறது,” என்றார் அந்த அதிகாரி. 

அதேவேளை, “பகிடிவதைக்குள்ளாகும் அநேக மாணவர்கள், அது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிடுவதில்லை” எனவும் அந்த அதிகாரி கவலை தெரிவித்தார். 

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பகிடிவதை நடந்து கொண்டுதான் இருக்கிறது. மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை எனும் பெயரில், மாணவிகள் மீது, ஆண் மாணவர்கள் சேற்று நீரை வாரி இறைக்கும் காணொளி பதிவொன்று, சமூக ஊடகங்களில் அண்மையில் வெளியானது. அதைப் பார்த்த பலரும் தமது கோபங்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்திருந்தனர். 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் ப. சுஜீபனின் கதை இதைவிடவும் கவலைக்குரியது. சுஜீபன் மீது கடந்த பிப்ரவரி மாதம் மூத்த மாணவர்கள் சிலர், பகிடிவதை எனும் பெயரில் கொடூரமானதொரு தாக்குதலை நடத்தியிருந்தார்கள். இதனால் தலை உள்ளிட்ட உடற்பகுதிகளில் காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இதேவேளை, தன்மீது பகிடிவதை எனும் பெயரில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்ட சுஜீபன், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்ததாக பிபிசி தமிழிடம் கூறினார். இந்த சூழ்நிலையில், தனது படிப்பை நிறுத்திக் கொள்வது என்றும் சுஜீபன் முடிவு செய்தார். 

சுஜீபனின் குடும்பத்தில் அவர்தான் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை முதலாவதாகப் பெற்றிருந்தார். ஆயினும், அவருக்கு கிடைத்த அந்த மிகப்பெரும் வாய்ப்பை கைவிடுவதென, அவர் எடுத்த முடிவுக்குப் பின்னால், பகிடிவதையின் மிகக் கொடூரமான வலியும், அவமானங்களும் இருந்தன. 

“பிறகு என்ன நடந்தது” என்று சுஜீபனிடம் கேட்டோம். 

“படிப்பை கைவிட்டு ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில், பல்கலைக்கழக ஒன்றியத் தலைவர் உள்ளிட்டோர் என்னை தேடிவந்து, மீண்டும் படிப்பைத் தொடருமாறு கூறினார்கள். எனக்கு நடந்த அந்தக் கசப்பான சம்பவம் போன்று இனியும் நடக்காது என்கிற உத்தரவாதங்களை தந்தார்கள். அதனையடுத்து, நான் மீண்டும் பல்கலைக்கழகம் சென்றேன்,” என்றார். 

இப்போது சுஜீபன் இரண்டாம் ஆண்டில் படித்துக் கொண்டிருக்கிறார். 

மாணவர்கள் ஒருவரை ஒருவர் கொடுமைப்படுத்தி, அதனூடாக மகிழ்ச்சியடையும் இந்த பகிடிவதையின் உளவியல் குறித்து அறிந்து கொள்தல் இங்கு அவசியமாகும் என்பதால், மனநல மருத்துவர் யூ.எல். சறாப்டீன் இடம், இது குறித்து பிபிசி உரையாடியது. 

“பல்கலைக்கழங்களுக்கு அனுமதி பெறுகின்ற மாணவர்கள் பல்வேறுபட்ட சூழல், மதம், கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையினைக் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களுக்கிடையில் அறிமுகத்தையும், நட்பையும் ஏற்படுத்துதல் அவசியமாகும். மேலும், புதிய மாணவர்களை சமூக மயப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. அவற்றினை சில பொறிமுறைகளின் ஊடாகவே செய்யலாம். அதற்காக ஏற்படுத்தப்பட்டதே ´பகிடிவதை´ ஆகும்.” 

“ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு மாணவர்கள் தம்மிடமுள்ள திறமைகளின் அடிப்படையில் ஆடி, பாடி, கவிதை சொல்லி, நடித்துக்காட்டி மகிழ்விப்பார்கள். இதன்போது ஒருவர் குறித்து மற்றையோர் அறிந்து கொண்டு, நட்புப் பாராட்ட முடியும். ஆரம்பத்தில் இப்படித்தான் ´பகிடிவதை´ இருந்தது. அதனால்தான், அதனை முன்னோர்கள் அனுமதித்தனர். 

ஆனால், இப்போது பகிடிவதை என்பது வன்முறையாக மாறிவிட்டது. கனிஷ்ட மாணவர்களை ´மட்டம் தட்டுவதற்காக´வும் இப்போது பகிடிவதை என்பதை சிரேஷ்ட மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். 

திறமையுள்ள, நன்கு பிரசித்தி பெற்ற கனிஷ்ட மாணவர்கள் மீது, சில சிரேஷ்ட மாணவர்களுக்கு பொறமை ஏற்படுவதுண்டு. இதனால், அவ்வாறான கனிஷ்ட மாணவர்களை மட்டம் தட்டுவதற்கு வன்முறைத்தனமான பகிடிவதையை சிரேஷ்ட மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்” என்றார் டொக்டர் சறாப்டீன். 

இதேவேளை, வன்முறை மற்றும் போதைவஸ்து உள்ளிட்ட பழக்கவழக்கச் சூழலில் இருந்து வருகின்ற மாணவர்களும் பகிடிவதையை வன்முறையாகக் கையாள்கிறவர்களாக இருப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

“சில மாணவர்கள் – மற்றவர்களைக் கொடுமை செய்வதில் இன்பம் காண்பவர்களாக (Sadistic) இருப்பார்கள். அவ்வாறான மாணவர்கள் மற்ற மாணவர்களுக்குத் துன்பத்தை விளைவிப்பதன் மூலம் இன்பம் காண்பார்கள். அதேவேளை வீட்டு வன்முறைப் பின்னணியிலிருந்து வருகின்ற சில மாணவர்களும் பகிடிவதை எனும் பெயரில் வன்முறை புரிவார்கள். இவ்வாறான மாணவர்களிடம் தலைமைத்துவம் செல்லும் போது, நிலைமை இன்னும் மோசமடையும். இவ்வாறான மாணவர்களின் தலைமைத்துவத்தைப் பின்பற்றும் ஏனைய மாணவர்களும் வன்முறையைக் கையில் எடுப்பார்கள்.” 

“இவ்வாறான வன்முறை கலந்த பகிடிவதை யார்மீது மேற்கொள்ளப்படுகிறதோ, அந்த மாணவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்படைகின்றனர். பகிடிவதையினால் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன” எனவும் டொக்டர் சறாப்டீன் தெரிவித்தார். 

பகிடிவதையினை இல்லாதொழிப்பதற்கான தீர்வு தொடர்பாக டொக்டர் சறாப்டீனிடம் கேட்டோம். 

“முதலில் பல்லைக்கழகத்துக்கு அனுமதிபெறும் மாணவர்களின் உளவியல் மற்றும் ஆளுமையினை மதிப்பீடு செய்தல் வேண்டும். இதற்காக, வினாக் கொத்து கருவிகளை (Tools) பயன்படுத்த முடியும். இந்த செயன்முறையினூடாக, ஒவ்வொரு மாணவரின் உளவியல் தன்மை தொடர்பில் அறிந்து கொள்ள முடியும். அதேபோன்று, உள, உடல் பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கலாம். இவ்வாறான பயிற்சி தற்போது வழங்கப்படுகிறது”. 

இவை தவிர, பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெறும் முதலாம் ஆண்டு மாணவர்களும் சிரேஷ்ட மாணவர்களும் குறிப்பிட்ட காலத்து, சந்தித்துக் கொள்ளாததொரு சூழ்நிலையினையும், பல்கலைக்கழக நிர்வாகத்தினர் ஏற்படுத்த வேண்டும்” எனவும் டொக்டர் சறாப்டீன் விவரித்தார்.