முஸ்லிம் உடலை தகனம் விவகாரத்தில் மீண்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம் – எச்சரிக்கிறார் ஞானசார தேரர்

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம் இனத்தவர்களின் உடலை தகனம் செய்வதை  பிரதானமாக கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாதம் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது பௌத்தர்கள் உரிமைகளை கோரினால் பாரிய நெருக்கடி ஏற்படும். என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம் தரப்பினரது உடல்களை  எரிப்பதா, புதைப்பதா என்பது தற்போதைய  பிரதான பேசுபொருளாக உள்ளது.

 முஸ்லிம்களின்  உடலை  எரிக்க வேண்டாம் என  இஸ்லாமிய அடிப்படைவாதிகள்  தொடர்ந்து  எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

இஸ்லாமிய அடிப்படைவாத்த்தை ஒழிப்பதாக  குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த ராஜபக்‌ஷர்களின் அரசாங்கம் தற்போது அடிப்படைவாதிகளின் ஆலோசனைகளுக்கு அடிபணிந்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 2005-  2015 வரையிலான காலப்பகுதியில் இஸ்லாமிய அடிப்படைவாதம்  தலைதூக்கியது. இதனை நாங்கள் பகிரங்கப்படுத்திய போது எங்களை இனவாதிகள் என்று விமர்சித்தார்கள்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுடன் நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் எந்தளவிற்கு  பலம் பெற்றுள்ளது என்பது. வெளிப்பட்டது.

 இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பல விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முற்றாக ஒழிப்பதை விடுத்து  அவர்களின் கோரிக்கைக்கு சார்பாக செயற்படுவது பெரும்பான்மை மக்கள் வழங்கிய  ஆணைக்கு முரணானது.

 கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள்  தகனம் செய்வது  முஸ்லிம் சமய  கோட்பாட்டுக்கு முரணானது என குறிப்பிடுகிறார்கள்.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price

 கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் பௌத்தர்கள் இந்துக்கள் மற்றும்  கத்தோலிக்க சமயத்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுகின்றன. இதன் போது மத சம்பிரதாய சடங்குகள்  செயற்படுத்தப்படுவதில்லை. இதற்கு பௌத்தர்கள் போர் கொடி தூக்கவில்லை. நாட்டின் பாதுகாப்பு குறித்து மாத்திரமே கவனம் செலுத்தப்பட்டது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்ய சுகாதார தரப்பினர் ஆரம்பத்தில் எடுத்த தீர்மானத்துக்கு ஏதுவான காரணிகளை  நாட்டு மக்களுக்கு  சுகாதார தரப்பினர் பொறுப்புடன் பகிரங்கப்படுத்த வேண்டும்.

கொவிட்-19 வைரஸ்  தொடர்பில் இராணுவ தளபதி, பொலிஸ் ஊடக பேச்சாளர் மற்றும் சுகாதார தரப்பினர் என அவரவர் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிடுகிறார்கள். எவர் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்வது  என்ற குழப்பம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது ஆகவே எடுக்கும் தீர்மானத்தை ஒருவர் அறிவிக்க வேண்டும். என்றார்.

SOURCE(இராஜதுரை ஹஷான்) வீரகேசரி பத்திரிகை