அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நிலைவரத்தை கலவரமாக்கிய ட்ரம்ப்

அமெரிக்க தேர்தலின் பெரும்பாலான மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இறுதியாக வந்த முடிவுகளின் படி ஜோ பைடன் 264 வாக்குகளும், ட்ரம்ப் 214 வாக்குகளும், பெற்றுள்ளனர்.

இது ஜோ பைடனுக்கு சாதகமாக இருக்கிறது. இன்னும் சில மாநிலங்களில் முடிவுகள் வெளிவர உள்ளன. 

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், ட்ரம்ப் தனது டுவிட்டர் பதிவில், வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என்று பதிவிட்டு உள்ளார்.

முன்னதாக, டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக, ‘வெற்றி அறிவிப்பு’ வெளியிட்டார். தாம் வெற்றி பெற்று விட்டதாகவும், அதற்காக அமெரிக்க மக்களுக்குத் தாம் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

‘இனிமேலும் வாக்கு எண்ணிக்கையை தொடரக்கூடாது; மோசடி நடக்கிறது; அமெரிக்காவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தப் பார்க்கிறார்கள்’ என்றெல்லாம் கூறிய டிரம்ப், வாக்கெண்ணும் பணிகளை நிறுத்தக் கோரி அமெரிக்க உயர் நீதி மன்றை அணுகப்போவதாகக் கூறினார். அதன்படி 3 மாநிலங்களில் வாக்குப்பதிவை நிறுத்த மனு அளித்துள்ளார்.

இதனையடுத்து 9 நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றின் 6 பேர் ட்ரம்பின் குடியரசு கட்சியினர்; 3 பேர்  ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள். எனினும் இவர்கள்  நியாயத்துக்குப் புறம்பாக தீர்ப்பு வழங்க மாட்டார்கள் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

எனினும் ட்ரம்பின்  இச் செயற்பாடு காரணமாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவருதில் தாமதம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. 

தற் போது வரை நியூஜெர்சி, கலிபோர்னியா, கொலம்பியா உள்ளிட்ட 15 மாநிலங்களில் ஜோ பைடனும் அலபாமா, அர்கன்சாஸ், இடாகோ, கென்டக்கி, ஒக்லா உள்ளிட்ட 13 மாநிலங்களில் ட்ரம்ப்பும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். 

மேலும் 10 மாநிலங்களில் ஜோ பைடனும், 7 மாநிலங்களில் ட்ரம்பும் குறுகிய வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளனர்.

இன்னும் சில மாநிலங்களில் போட்டி மிகக் கடுமையாக இருக்கிறது. கடைசி வாக்கு எண்ணி முடிக்கப்படும் வரை, யார் வெற்றி பெறுவார் என்று உறுதியாகச் சொல்ல முடியத நிலையே உள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மொத்த தேர்வாளர்களின் வாக்குகள்  எண்ணிக்கை 538 ஆகும். இதில் ஒருவர் ஜனாதிபதி ஆவதற்கு பெரும்பான்மையாக 270 வாக்குகள் தேவை. 

இந்நிலையில், 264 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ள ஜோ பைடன், பொறுமையாக இருப்போம்; நாம்தான் வெல்கிறோம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நியாயமாக நடக்கவில்லை; மோசடி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என்கிற பிம்பத்தை ஏற்படுத்தி தனது தோல்வியை மறைக்க முயற்சிக்கிறார் டிரம்ப். 

அமெரிக்க ஜனாதிபதியாக ஒருவர், அதிகபட்சமாக இரண்டு முறை (8 ஆண்டுகள்) பதவி வகிக்க முடியும். ஒரு ஜனாதிபதியாக தேர்தலில் நின்று தோல்வியுற்றால் தனக்கு பெரும் அவமானம் என்று  டிரம்ப் கருதலாம். இதனால் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்துள்ள ட்ரம்ப், அமெரிக்க தேர்தல் நிலவரத்தை கலவரமாக மாற்றியுள்ளார்.

எவ்வாராயினும் தமதமாகவேனும் அமரிக்காவில் ஜனநாயகம் வெற்றி பெறுமா என உலகமே அமெரிக்க தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்த வண்ணம் உள்ளது. -வீரகேசரி பத்திரிகை-