பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் கருத்து

கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வார இறுதியில் எடுக்கப்படும் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். பாடசாலைகளின் 3 ஆம் தவணை எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதுபற்றி விரிவாக ஆராய்ந்ததன் பின்னர் உரிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. மாணவர்களின் சுகாதார பாதுகாப்பிற்கு முக்கியத்துவமளித்து இத் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் தொடர்பான உண்மையான தகவல்கள் அனைவருக்கும் தெளிவாகியுள்ளன. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடனேயே இந்த விஜயம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை பாடசாலைகளில் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட பேச்சுவார்த்தை இணையவழி மூலம் இன்று நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் கல்வி அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர் மாகாண கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேல் மகாணம் உள்ளிட்ட 118 பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும்.

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் பாடசாலை விடுமுறைக்கு பின்னர் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எதிர்வரும் 9 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்தது.

நாட்டின் நிலைமை தொடர்பில் இறுதி வரையில் கண்காணித்து அதற்கமைவாக எதிர்வரும் வார இறுதியில் நாட்டில் நிலவும் நிலைமையை கவனத்தில் கொண்டு பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டவிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். (அரசாங்க தகவல் திணைக்களம்)