கொரோனாவை வைத்து சூறையாடுபவர்கள் – விழிப்பாக இருக்க வேண்டிய மக்கள்

நாட்டில் உருவாகியுள்ள நெருக்கடி நிலையில் இருந்து எவ்வாறு மீளுவது? என மக்கள் சதா சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை, நாளாந்தம் வெளிவரும் தகவல்கள் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளன. கொவிட் 19 வைரஸ் தொற்று நாடு பூராவும் வேகமாகப் பரவிக்கொண்டு வருகின்றது.

இருந்தபோதிலும் அது சமூகத் தொற்றாக இன்னும் மாறவில்லை. 

அவ்வாறு அது சமூகத் தொற்றானால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும் என தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் விசேட மருத்துவர் சுதத் சமரவீர கூறியுள்ளார்.

நாட்டில் சகல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

அவர்கள் அனைவரும் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புபட்ட நபர்களே என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த கொத்தணி தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ள அவர், மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டும் எனவும் கேட்டுள்ளார். 

இதனிடையே யாழ் .மாவட்டத்தில் 6 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பேருக்குமாக எட்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து குறித்த பகுதிகளை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று வடக்கு, தெற்கு, கிழக்கு என அனைத்து பகுதிகளிலும் தொற்று நோயாளர்கள் வியாபித்து வருகின்றனர். 

முதலில் இது ஒரு வைரஸ் தொற்று நோய் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

எவரும் தேடிச்சென்று நோயைப்பெற்றுக் கொள்வதில்லை. எவருக்கும் வரலாம். இந்தியாவில் ஐஸ்வர்யா ராய் தொடக்கம் அமெரிக்காவில் ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் வரை பலருக்கும் இந் நோய் ஏற்பட்டு குணமடைந்துள்ளனர்.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price

எனவே, நோய் தொற்றால் அவர்களை ஒதுக்குவது, அவர்கள் மனம் நோகும்படி நடந்து கொள்வது, அவர்களை சமூகத்தில் இருந்தும் ஒதுக்க நினைப்பது யாவும் பெரும் மடமைத்தனம் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

முதலில் நாம் நம்மை பாதுகாக்க வழிமுறைகளைத் தேட வேண்டுமே தவிர, தொற்றுநோய் ஏற்பட்டவர்களை கண்டு ஓடி ஒளிந்து கொள்வதால் எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை.

இவற்றுக்கு மத்தியில் கொள்ளை கும்பல் ஒன்று சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி சூறையாடி வருகின்றது. 

இவர்கள் குறித்து, கூடுமானவரை எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இவ்வாறான படுமோசமான சம்பவமொன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஹாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்று கண்டறிவதற்காக பி.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளப்போவதாக கூறி, கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மஹாவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு வியாழக்கிழமை சென்றுள்ள இந்த கொள்ளையர்கள், வீட்டில் இருப்பவர்களுக்கு தாம் பொது சுகாதார பரிசோதகர்கள் என்றும், பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வந்துள்ளதாகவும் குறிப்பிட்டே இவ்வாறு மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது, பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் சென்றுள்ளதுடன், சந்தேக நபர்கள் வீட்டில் இருந்தவர்களுக்கு மருந்து வில்லை ஒன்றை வழங்கி அதனை அருந்துமாறும் தெரிவித்துள்ளனர்.

மருந்தை அருந்தியவுடன் வீட்டார் மயக்கமடைந்துள்ளனர். பின்னர் சந்தேக நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்போது மயக்கமுற்ற வீட்டார் வெள்ளிக்கிழமை காலையிலேயே மீண்டும் சுயநினைவுக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், வீட்டிலிருந்த மூன்றரை பவுண் தங்க நகைகள் இதன்போது கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில், விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் மஹாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read:  Omicron பரவல் முன்னெச்சரிக்கை; தனது எல்லைகளை மூடுகிறது ஜப்பான்

இதேவேளை, பி.சீ.ஆர். பரிசோதனைகள் செய்வதற்கு முன்னர் ஒருபோதும் மருந்து அருந்த வேண்டிய தேவையில்லை என்று வைத்திய நிபுணர்களும், பொது சுகாதார பரிசோதகர்களும் தெரிவித்துள்ளனர்.

அதனால் பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

இவ்வாறான நெருக்கடி நிலைமையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடி காரர்கள் சமூகத்தில் இருப்பதினால் மக்கள் இது போன்ற நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் பொலிசார் எச்சரித்துள்ளார். 

எனவே, இவ்வாறான துஷ்டர்களைக் கண்டால் நாம் தூர விலகி நிற்க வேண்டும்.

SOURCEவீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்