ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் புதிய பொருளாதார தடை

ஈரான் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகரித்துவரும் பொருளாதார அழுத்தத்தின் ஒரு பகுதியாக ஈரானிய எண்ணெய் தொழிலுக்கு எதிராக அமெரிக்க கருவூலத் துறை திங்கள்கிழமை புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.

அதன்படி ஈரானின் பெற்றோலிய அமைச்சகம், தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனம் மற்றும் தேசிய ஈரானிய டேங்கர் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை – குட்ஸ் படைக்கு நிதி உதவி செய்ததற்காக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குட்ஸ் படை என்பது ஈரானின் ஒரு உயரடுக்கு பிரிவு, இது வலுவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) ஒரு பகுதியாகும். இது ஈரானின் உச்ச தலைவர் அலி ஹுசைனி கமேனிக்கு மட்டுமே பதிலளிக்கும் ஒரு துணை இராணுவ அமைப்பு.

இந் நிலையில் ஐ.ஆர்.ஜி.சி யின் ஸ்திரத்தன்மை நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க ஈரான் பெற்றோலியத்துறையை பயன்படுத்துவதாக கூறியே இந்த தடையை விதித்துள்ளதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந் நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஈரானின் எண்ணெய் வள அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில், தெஹ்ரானின் எண்ணெய் தொழில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாது என்று திங்கட்கிழமை பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2018 இல் ஒருதலைப்பட்சமாக விலகினார்.

இதனால் ஒப்பந்தத்தின் கீழ் தளர்த்தப்பட்ட அமெரிக்க பொருளாதாரத் தடைகளை மீண்டும் செலுத்தத் தொடங்கியதிலிருந்து வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

அமெரிக்க பொருளாதாரத் தடைகளை மீறி ஈரானிய எண்ணெய் ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் கடுமையாக உயர்ந்தது, டேங்கர் கண்காணிப்பை அடிப்படையாகக் கொண்ட மூன்று மதிப்பீடுகளின்படி, ஈரானுக்கும் அதன் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்திற்கும் இது வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதிலிருந்து ஒரு நாளைக்கு 2.5 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி சுருங்கிவிட்டது. 

Previous article5000 தொற்றாளர்களை நெருங்கும் மினுவங்கொட கொத்தணி
Next article3 மாவட்டங்கள் அதி, அபாய வலயங்களாக அறிவிப்பு