ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராதியா வைத்தியசாலையில் அனுமதி

திடீர் மூச்சுத்திணறல் காரணமாக பொலிவூட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியா ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
   
கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள பொலிவூட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு: நடிகை ஐஸ்வர்யா ...

பிரபல பொலிவூட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 12 ஆம் திகதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் இருவரும் மும்பையில் உள்ள வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்பட்டது. அதில் அபிஷேக் பச்சனின் மனைவியும் பொலிவூட்  நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் கொரோனா இருப்பது கடந்த 13 ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது.

வைரஸ் அறிகுறிகள் சிறிய அளவில் இருந்ததால் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
இதனால் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவரும் கடந்த சில நாட்களாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தனிமைப்படுத்திக்கொண்ட ஐஸ்வர்யாவுக்கும் அவரது மகளுக்கும் நேற்று நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் என இருவரும் மும்பையில் உள்ள நனாவதி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமித்தாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஏற்கனவே கொரோனா காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராதியாவுக்கு கொரோனா தீவிரமடைந்ததையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SOURCEவீரகேசரி பத்திரிகை