மாகந்துரே மதூஷின் கொலை தொடர்பில் பல்வேறு கேள்விகள்

மாகந்துரே மதூஷின் கொலை தொடர்பில் பல்வேறு கேள்விகள் காணப்படுவதாகவும் இவ்வாறான உயர் அபாயமுள்ள ஒரு நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்படாமை ஆச்சரியமளிப்பதாகவும்  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்திருக்கிறார்.

திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதூஷ் கொல்லப்பட்டமை தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். 

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

மாகந்துரே மதூஷின் மரணம் தொடர்பில் சில கேள்விகள் இருக்கின்றன. போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட இடத்திற்குச்செல்ல முன்னர், அது கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படவில்லையா? அவ்வாறு கண்காணித்திருந்தால் தாம் எவ்வாறான பகுதிக்குச் செல்கிறோம் என்றும், அதற்கு எத்தகைய தயார்ப்படுத்தலுடன் செல்லவேண்டும் என்றும் அறிந்திருக்கவில்லையா?

மாகந்துரே மதூஷுடன் விசேட அதிரடிப்படையினரும் சென்றார்களா? இதனைப்போன்ற உயர் அச்சுறுத்தல் கொண்ட நடவடிக்கைகளின் போது, அதில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்படுவதில்லையா?

மரணதண்டனைக் கைதியையோ அல்லது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகளை அழைத்துச்செல்வதற்கு விசேட அதிரடிப்படையினர் உள்வாங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.  

விசேட அதிரடிப்படையினரின் பற்றாக்குறை காரணமாக பல கைதிகள் தமக்குரிய சிகிச்சைக்கான  வைத்தியசாலை கிளினிக் திகதிகளைத் தவறவிட்டுள்ளமையை அறிவோம்.

அவ்வாறிருக்கையில் மிகவும் உயர் அபாயமுடைய, உயர் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய ஒரு கைதியுடன் சி.சி.டி அதிகாரிகள் மாத்திரமே சென்றதாக வெளியாகியிருக்கும் செய்திகள் ஆச்சரியமளிக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

SOURCEவீரகேசரி பத்திரிகை (ந.தனுஜா)
Previous articleஇஸ்ரேலும் ஐக்கிய அரபு இராச்சியமும் விசா இல்லாத பயணத்துக்கு ஒப்புதல்.
Next articleபாராளுமன்றத்தில் சஜித் – பவித்ரா கடும் வாய்ச் சண்டை