இஸ்ரேலும் ஐக்கிய அரபு இராச்சியமும் விசா இல்லாத பயணத்துக்கு ஒப்புதல்.

இஸ்ரேலும் ஐக்கிய அரபு இராச்சியமும் விசா இல்லாத பயணத்துக்கு திங்களன்று ஒப்புதல் அளித்தன.

இஸ்ரேலுக்கு முதல் தடவையாக ஐக்கிய அரபு இராச்சிய பிரதிநிதிகள் திங்கட்கிழமை சென்றதைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் இதற்கான மிக முக்கிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இஸ்ரேலும் ஐக்கிய அரபு இராச்சியமும் வெள்ளை மாளிகையில் வைத்து உறவுகளை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதிநிதிகள் தமது நாட்டுக்கு வருகைதந்த இந்த நாள் ‘அமைதிக்கான மகத்தான நாள்’ என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு புகழ்ந்தார்.

‘பல தலைமுறைகள் நிலைத்திருக்கக்கூடிய வரலாற்றை நாங்கள் இன்று படைக்கின்றோம்’ என இஸ்ரேல் – ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இடையிலான உடன்படிக்கை குறித்து வலதுசாரி பிரதமர் நெத்தன்யாஹு  தெரிவித்தார்.

இஸ்ரேலும் ஐக்கிய அரபு இராச்சியமும் நான்கு உடன்படிக்கைகளில் திங்களன்று கைச்சாத்திட்டன. அவற்றில் ஒரு உடன்படிக்கை இரண்டு நாடுகளினதும் பிரஜைகள் விசாவின்றி பயணிப்பதாகும் என நெட்டன்யாஹு கூறினார்.

மக்களை சுதந்திரமாக பயணிப்பதற்கு அனுமதிப்பதன்மூலம் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொருளாதாரம் பலன் அடையும் என அவர் சுட்டிக்காட்டினார்.

 ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எட்டிஹாட் எயார்வேஸ் விமானமொன்று இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில்                தரையிறங்கியபோது பிடிக்கப்பட்ட படம். (AFP Photo)

இந்த உடன்படிக்கையுடன் முதலீட்டு பாதுகாப்பு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சிவில் விமானப் போக்குவரத்து ஆகிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.

சிவில் விமானப் போக்குவரத்து உடன்படிக்கைக்கு அமைய இரண்டு நாடுகளுக்கும் இடையில் வாராந்தம் 28 விமான சேவைகள் நடைபெறும்.

அயல் நாடுகளான எகிப்துடனும் ஜோர்தானுடனும் இஸ்ரேல் ஏற்கெனவோ சமாதான உடன்படிக்கைகள் செய்துகொண்டுள்ளபோதிலும் அந்த இரண்டு நாடுகளினதும் பிரஜைகள் இஸ்ரேலுக்கு செல்வதற்கு முன்னர் விசா பெற்றாகவேண்டும்.

இதேவேளை, ‘பொருளாதார சீர்திருத்தம், சர்வதேச வர்த்தகம், அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிகாத்தல் ஆகிய விடயங்களில் பிராத்தியத்துக்கு தலைமைதாங்குவதில் ஐக்கிய அரபு இராச்சியம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது’ என இஸ்ரேல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஐக்கிய அரபு இராச்சியத்தின் குழுவில் இடம்பெற்ற நிதி விவகார இராஜாங்க அமைச்சர் ஒபைத் அல் தையர் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்துடனான சுமுக உறவுகளுக்கு ஈடாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன எல்லையை இணைப்பதற்கான திட்டங்களை கைவிடுவதாக இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. எனினும் அதனை இணைப்பதற்கான திட்டம் மேசையில் இருப்பதாக நெத்தன்யாஹு தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு பயணித்த ஐக்கிய அரபு இராச்சிய பிரதிநிதிகளுடன் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவன் மனுச்சினும் சென்றிருந்தார்.

SOURCEமடவளநியூஸ்
Previous articleஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் – அமைச்சர் கம்மன்பில
Next articleமாகந்துரே மதூஷின் கொலை தொடர்பில் பல்வேறு கேள்விகள்