கொள்கலன்களில் சேமித்து வைக்கப்படும் நூற்றுக்கணக்கான சடலங்கள்

கொரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் அரிசோனா மற்றும் டெக்சாஸ் மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் குளிரூட்டிகள் மற்றும் குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் சேமித்து வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அரிசோனா மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான பொனிக்ஸில் 14 குளிரூட்டிகளில் 280 உடல்கள் வைக்கப்பட்டுள்ளதுடன், கொரோனாவினால் குறித்த பகுதியில் உயிரிழப்புகள் மேலும் அதிகாரிக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்சாஸ் மாநிலத்தில் சான் அன்டோனியோ மற்றும் பெக்சர் ஆகிய பகுதிகளில் ஐந்து குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் 180 உடல்கள் தற்போது சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக சான் அன்டோனியோ சுகாதார உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் கொரோனாவினால் நியூயோர்க்கில் தினசரி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 700 கடந்த நிலையில் அங்கு டஜன் கணக்கான குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் உடல்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டன.

இந் நிலையில் அரிசோனா மற்றும் டெக்சாஸில் கொரோனாவினால் தினசரி உயிரிழப்புகள் ஜூன் மாத இறுதியில் இருந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸில் வியாழக்கிழமை 10,457 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அன்றைய நாள் உயிரிழப்புகளும் 129 ஆக பதிவாகியது. உயிரிழந்தவர்களின் உடல்களை சேமிக்க மாநிலத்தின் கேமரூன் மற்றும் ஹிடல்கோ மாவட்டங்களும் குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்தி வருகின்றன.

இதேவேளை அமெரிக்காவில் வியாழக்கிழமை மாத்திரம் 71,135 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இது நாட்டில் கொரோனா தொற்று ஆரம்பமாகியதிலிருந்து ஒரு நாளில் பதிவுசெய்யப்பட்ட அதிகளவான கொரோனா தொற்று எண்ணிக்கையாகும்.

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 13,765,713 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 589,211 ஆக பதிவாகியுள்ளது.

வீரகேசரி பத்திரிகை