றிசாத் பதியுதீன் ஒளிந்து கொண்டது குற்றமா? அல்லது அரசியலா? உண்மை எப்போது வெளிவரும்?

பொலிசாரினால் வலைவிரித்து தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சர்றிசாத் பதியுதீன் அவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஆனாலும் அதுபற்றிய புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அவர் தேடப்படும்போதே அது ஒரு அரசியல் நாடகம் என்று அவரது எதிரிகளால் விமர்சிக்கப்பட்டது. ஆனால் கைது செய்யப்பட்டவர் உடனடியாக பிணையில் விடுவிக்கப்படுகின்றாரா அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்படுகின்றாரா என்பதைப் பொறுத்தே அதனை ஊகிக்க முடியும்.

எது எப்படியிருப்பினும், நான் றிசாத் பதியுதீனின் ஆதரவாளனுமல்ல, அவரது கட்சிக்காரனுமல்ல. ஆனாலும் மனிதாபிமானம் உள்ளவன். மேட்டுக்குடி போக்கு இல்லாத கொள்கை மற்றும் இலட்சியமுள்ள சமுதாயத்தினை முஸ்லிம் காங்கிரஸ் என்னும் தாய் கட்சியின்கீழ் கட்டியமைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன்.

அமைச்சராக அதிகாரத்தில் இருக்கும்போது அவரை கடுமையாக விமர்சித்தவர்களில் என்னைவிட யாரும் இருக்க முடியாது. ஆனாலும் செத்த பாம்புக்கு அடிப்பதுபோன்று இந்த இக்கட்டான நேரத்தில் அவரை விமர்சிப்பவனிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியாது. இது “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது” போன்றதாகும்.  

“தலையிடி காய்ச்சல் தனக்கு வந்தால்தான் தெரியும்” என்பார்கள். பொலிசார் ஒருவரை கைது செய்வதற்காக தேடுகின்றபோது அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் ஏற்படும் மன உளைச்சலும், பதட்டமும் எவ்வாறானது என்பது அதனை அனுபவித்தவர்களால் மட்டுமே உணரமுடியும்.

எத்தனையோ நியாயங்களை எடுத்துக்கூறியும் கொரோனாவினால் மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களை எரித்தே தீருவோம் என்று ஒற்றைக்காலில் நின்ற இன்றைய ஆட்சியாளர்களிடம் சட்டத்தின் ஆட்சியையும், மனிதாபிமானத்தையும் எதிர்பார்க்க முடியாது.
அரச நிதியை ஒரு அமைச்சின் செயலாளர் அல்லது கணக்காளருக்கு தெரியாமல் ஒரு அமைச்சரால் மட்டும் கையாள முடியுமா? இது பற்றி அதிகாரிகள் விசாரிக்கப்பட்டார்களா? என்பது பற்றி தெரியவில்லை.

ஆனால் மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் நாட்டின் பல நூறு கோடிகளை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரணில் விகரமசிங்க ஏன் கைது செய்யப்படவில்லை? இதுபோல் ஊழல் மோசடி செய்யாத அரசியல்வாதிகள் யார் இருக்கின்றார்கள்?
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ரிசாத் பதியுதீன் அவர்கள் அமைச்சராக இருந்தபோது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. அப்போது ஏன் இவரை கைது செயவில்லை? 

கைதுசெய்யப்பட்டால் தனக்கு நீதி கிடைக்காது அல்லது அவமானப்படுத்தப்படுவேன் என்று எண்ணிய தலைவர்களும், அச்சுறுத்தல் இருந்த ஆட்சியாளர்களும் தலைமறைவாவது புதியவிடயமல்ல.

சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தும், காசாவில் ஹமாஸ் இயக்க தலைவர்களும் அதிகாரம் இருந்தும் இன்றும் ஒளிந்துகொண்டிருந்தவாறே ஆட்சி செய்து வருகின்றார்கள்.

ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது சதாம் ஹுசைனும் ஒளிந்துகொண்டார். நான் அநீதி செய்யவில்லை என்று யாரிடம் அவர் நிரூபிப்பது?

அதுபோல் லிபியா, சூடான் போன்ற நாடுகளில் கடாபியும், ஓமர் பசீரும் ஒளிந்துகொண்டவாறே ஆட்சி செய்தார்கள். இவ்வாறு ஏராளமான உதாரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

படைபலத்துடன் அதிகாரம் உள்ளவர்களே ஒளிந்துகொள்ளும்போது, எந்தவித அதிகாரமும் இல்லாத நிலையில், நீதிமன்ற உத்தரவில்லாமல் வேண்டுமென்று கைதுசெய்ய தேடுகின்றபோது ஒளிந்துகொள்வதில் என்ன தவறு உள்ளது?

எனவே அரசியல் நோக்கத்திற்காக ஒரு கட்சியின் தலைவரான றிசாத் பதியுதீனை கைதுசெய்ய முற்பட்டபோது அவர் ஒளிந்துகொன்டதில் எந்த தவறுமில்லை. அதனை அவரது இக்கட்டான இந்த நேரத்தில் விமர்சிப்பவர்கள் இரக்கக்குணம் இல்லாத குறுகிய மனோநிலை கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

முகம்மத் இக்பால் -சாய்ந்தமருது-