ராஜபக்ஷவினரின் சீன சார்பு நகர்வுகளை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது: வானதி சீனிவாசன் விசேட செவ்வி

குறிப்புக்கள் 

  • இலங்கையில் அரசியல் சூழல்கள் மாறியுள்ள நிலையில் இந்தியாவின் தொடர்தேச்சியான அழுத்தங்கள் மூலமே நிலைமைகளை மாற்றியமைக்க முடியும்
  • மேம்பட்ட தலைமையின் கீழ் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் ஒருங்கிணைத்து, ஒருமித்து குரல் எழுப்ப வேண்டுமென்ற எதிர்பார்ப்பு உள்ளது
  • இனப்பிரச்சினைக்கான தீர்வு அளிக்கப்பட வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளதோடு பா.ஜ.க., தமிழர்களை ஒருபோதும் கைவிடாது
  • இராமேஸ்வரம் – தலைமன்னார் பாலம் அமைப்பு, காரைக்கால் –  காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன

இந்தியப் பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தையை அடுத்து சீனாவின் உயர்மட்டக்குழு உடனடியாக இலங்கைக்கு விரைந்திருக்கின்றது. ராஜபக்ஷ அரசு சீனாவுடன் மீண்டும் நெருங்க ஆரம்பித்திருக்கின்றது. ராஜபக்ஷவினரின் அனைத்து நகர்வுகளையும் இந்தியா உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது என்று பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக துணைத் தலைவர் சட்டத்தரணி வானதி சீனிவாசன் வீரகேசரிக்கு தொலைபேசி ஊடாக வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். 

அவருடைய செவ்வியின் முழுமையான வடிவம் வருமாறு, 

கேள்வி:- தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜ.க.வின் கூட்டணி, வெற்றிக்கான வியூகங்கள் எவ்வாறு இருக்கின்றன?

பதில்:- பாராளுமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க.வின் பங்கேற்புடன் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி உயிர்ப்புடன் வலுவானதாக இருக்கின்றது. அந்தக் கூட்டணியிலேயே தமிழக சட்டமன்ற தேர்தலையும் சந்திப்பதற்கு தயாராகியுள்ளோம். 1990இல் பா.ஜ.க.வுக்கு பத்மநாபபுரத்தொகுதியில் உறுப்புரிமை கிடைத்திருந்தது. அதன் பின்னர் கூட்டணியாக களமிறங்கியபோது பிரநிதித்துவங்கள்; கிடைத்திருந்தன. இம்முறை பா.ஜ.க.வின் பிரதிநிதிகள் சட்டமன்றத்தை நிச்சயம் அலங்கரிப்பர்.

கேள்வி:- தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு திரவிடக் கட்சிகளின் ஆதிக்கம் தொடர்ச்சியாக இருந்து வரும் நிலையில் மாற்றம் ஏற்படும் என்று நம்புகின்றீர்களா?

பதில்:- தமிழகத்தில் நீண்டகாலமாக இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் ஆளும் தரப்பாக மாறிமாறி இருந்துள்ளன. தற்போதும், கூட அந்த தரப்புக்களே பணம், அதிகார பலத்துடன் இருக்கின்றன. இந்த யதார்த்தத்தினை நாம் உணர்ந்துள்ளோம். ஆனால், தமிழக மக்கள் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. மாநிலக் கட்சிகளைத் தாண்டி தேசிய கட்சிகளை அங்கீகரிப்பதற்கான காலம் கனிந்துள்ளது. அதனை தேர்தல் முடிவுகள் நிச்சயமாக வெளிப்படுத்தும். 

கேள்வி:- இந்தியாவில் குறிப்பாக தமிழக அகதி முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- நீங்கள் என்று விழிப்பதை தமிழக பா.ஜ.க.வினையே குறித்துரைக்கின்றீர்கள் என்ற புரிதலுடன், பதிலளிக்கின்றேன். தமிழக முகாம்களில் உள்ள அகதிகள் சம்பந்தமாக நூறுசதவீத உறுதிப்பாட்டுடனான கரிசனையை தமிழக பா.ஜ.க கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழகத்தில் உள்ள, தி.மு.க, வைகோ, சீமான் போன்ற தரப்புக்கள் வெறுமனே உணர்வு ரீதியாக பிரதிபலிக்கின்றார்களே தவிர இந்த விடயத்திற்கு நிரந்தரமான தீர்வினை பெறுவது தொடர்பில் சரியான பார்வைகள் அவர்களிடத்தில் இல்லை. 

பா.ஜ.க.வினைப் பொறுத்தவரையில் தமிழ் அகதிகள் சம்பந்தமாக நீண்டகாலமாக குரல்கொடுத்தே வந்திருக்கின்றது. கடந்த காலத்தில் பா.ஜ.க.வுக்கு அரசியல் ரீதியாக பலமில்லாத நிலை இருந்த போதும் கூட இந்த விடயத்தினை அகில இந்திய ரீதியாக முன்னகர்த்தி வாழ்வாதரத்திற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றது. 

தற்போது பா.ஜ.க.வின் நிலைமைகள் முன்னேற்றகரமாக மாறியுள்ள நிலையில் அகதிகளின் எதிர்காலம் தொடர்பில் படிப்படியான நடைமுறைச்சாத்தியமான செயற்பாடுகளை அந்த மக்களின் விருப்புக்களுக்கு அமைவாக முன்னெடுத்து வருகின்றது. 

கேள்வி:- இலங்கை , இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வினை எட்டுவதில் இழுபறிகள் தொடருகின்றனவே?

பதில்:- அவ்வாறு கூறமுடியாது. பிரதமர் மோடி பதவியேற்றதன் பின்னரான சூழலில் இந்திய மீனவர்களின் உயிர்பலிகள் வெகுவாக குறைந்துள்ளன. அதேபோன்று, இலங்கையினுள்ளே தமிழ் மீனவர்கள் நடத்தப்படும் முறைமையிலும் கணிசமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஏழுவருடங்களாக பாரிய முறுகலான நிலைமைகள் எதுவுமே ஏற்படவில்லை. மேலும் இது உணர்வு ரீதியானதொரு விடயமாக உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றகரமான நிலைமைகள் படிப்படியாக நிரந்தரமான தீர்வினைப் பெற்றுத்தரும்;.

கேள்வி:- இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் கரிசனை எவ்வாறுள்ளது?

பதில்:- இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகால உறவுகள் இருந்து வருகின்றன. எமது கட்சியின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலிருந்து ‘அயலவர்களுக்கு முன்னுரிமை’ என்ற கொள்ளை திடமாக பின்பற்றப்படுகின்றது. அவ்வாறான நிலையில் இலங்கையில் நிரந்தமான சமாதனம் ஏற்பட வேண்டும் என்பது இந்தியாவின் நீண்டகால விருப்பாகும். இலங்கை வாழ் அனைத்து இனங்களினதும், பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு தொடர்ச்சியான இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்து வருகின்றது. 

கேள்வி:- இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்திய இலங்கை அரசாங்கத்துடன் மென்போக்கான அணுகுமுறையினை கடைப்பிடிப்பதாக விமர்சனங்கள் இருக்கின்றனவே? 

பதில்:- இலங்கையின் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த தடவை ஆட்சியிலிந்து அகற்றப்பட்டபோது தான் ஆட்சியிலிருந்து விடைபெறுவதற்கு இந்தியப் புலனாய்வு பிரிவான ‘றோ’வே பின்னணியில் இருந்ததாக பகிரங்கமாக கூறியிருந்தார். இந்தக் கூற்றானது இலங்கையில் இந்தியாவின் தலையீடுகள் எவ்வளவு தூரம் இருக்கின்றது என்பதை புடம்போட்டுக் காட்டுகின்றது. ஆகவே பிரதமர் மோடி அரசு இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் தளர்வாக செயற்படுகின்றது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கேள்வி:- ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை 33ஆண்டுகளாக முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை நீடித்துக்கொண்டிருக்கின்றதல்லவா? 

பதில்:- இலங்கை, இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட காலமும் தற்போதுள்ள சூழலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்றது. ஆனாலும், இந்திய, இலங்கை ஒப்பந்தத்திற்கு அடித்தளமிட்ட தமிழ் மக்களின் உரிமைகள், அவர்களின் வாழ்வியல் ஆகியன விடயங்கள் முன்னேற்றம் அடைந்திருக்கின்றதா என்றால் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. 

இலங்கையிலும், இந்தியாவிலும் அரசாங்கங்கள் மாறிமாறி ஆட்சிக்கு வந்திருக்கின்றன அவ்வாறிருக்கையில் இலங்கையின் உள்ளக நிலைமைகள், தற்போதிருக்கும் அரசாங்கத்துடன் இந்தியா கொண்டிருக்கும் உறவு ஆகியவற்றையெல்லாம் அடியொற்றியே இந்திய, இலங்கை ஒப்பந்தம் பற்றிய ஆழமான நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும். அதற்காக, அரசியல் ரீதியான அழுத்தத்தினை மத்திய அரசு பலமட்டங்களில் ஏற்படுத்தி வருகின்றது. 

இறுதியாக இலங்கைப் பிரதமர் மஹிந்தவுடன் நடைபெற்ற காணொளி உச்சிமாநாட்டின்போது கூட இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையான நடைமுறைப்படுத்துமாறு நேரடியாகவே வலியுறுத்தியுள்ளார். பா.ஜ.க.வோ மத்திய அரசாங்கமோ தமிழர்களின் பிரச்சினையைக் கைவிடவில்லை என்பதே அதன் அர்த்தமாகும். 

சர்வதேச ரீதியாக கவனத்தினை ஈர்த்துள்ள இந்த ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா தன்னுடைய வகிபாகத்தினை எவ்வளவு தூரம் நடைமுறைச்சாத்தியமானதாக மாற்றுவதற்கு பிரயோக ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

கேள்வி:- காணொளி மாநாட்டிற்கு மறுதினமே பிரதமர் மோடியின் வலியுறுத்தலுக்கு எதிராக பிரதிபலிப்புக்களை அல்லவா இலங்கை அரசாங்கம் செய்திருக்கின்றது?

பதில்:- அப்படியென்றால் இந்தியாவிடம் நீங்கள் எதனை எதிர்பார்கின்றீர்கள்.

கேள்வி:- இனப்பிரச்சினை தீர்வு விடயத்திலும் சரி, தமிழர்களின் அபிலாiஷகளைப் பெற்றுக்கொடுப்பதிலும் சரி இந்தியாவுக்கு தார்மீக கடமையொன்று இருக்கின்றதல்லவா?

பதில்:- தார்மீக கடமை இருக்கின்றது. அந்த கடமையை அரசியல், இராஜதந்திர பேச்சுவர்த்தைகள் மூலமாகவே நிறைவேற்ற முடியும். அதற்குரிய நடவடிக்கைகளை முறையாக முன்னெடுத்துக்கொண்டு தான் இருக்கின்றோம். பிரதமர் மோடி பதவியேற்றவுடன் இலங்கைக்கே முதல் விஜயம் செய்திருக்கின்றார். யாழ்ப்பாணம், நுவரெலியா என்று தமிழர்களின் பகுதிகளுக்கு சென்றிருக்கின்றார். அம்மக்களுக்காக பல நலத்திட்டங்களை அறிவித்திருக்கின்றார். இலங்கை பாராளுமன்றத்தின் உள்ளிருந்தே இனப்பிரச்சினை தீர்வு, 13ஆவது திருத்தச்சட்டம் ஆகியன தொடர்பில் பகிரங்க வலியுறுத்தல்களை செய்திருக்கின்றார். 

இலங்கையில் இருக்க கூடிய அரசியல் சூழல் மாறிருக்கின்றது. ஆகவே படிப்படியான அணுகுமுறை ஊடாகவே நிலைமைகளை மாற்றியமைக்க முடியுமே தவிர உடனடி பிரதிபலிப்புக்களால் எதனையும் சாதிக்க முடியாது. இந்தியாவின் அரசியல் அழுத்தம் தொடர்தேச்சியாக அதிகரித்துக்கொண்டு தான் உள்ளது. 

2004முதல் 2014வரையிலான காலப்பகுதியில்  இலங்கை தமிழர்களுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்தது. அக்காலப்பகுதியில் தமிழர்கள் சார்ந்து எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. பிரதமர் மோடியின் வருகையின் பின்னரான சூழலில் இலங்கை தமிழர்கள் விடயத்தில் கணிசமான முன்னேற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

கேள்வி:-13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக தற்போதைய ஆட்சியாளர்கள் இதுகாலவரையில் இல்லாதவாறு எதிர்மறையாக பிரதிபலிக்கின்றமையை அவதானித்துள்ளீர்களா?

பதில்:- ஆம். அவ்விதமான பிரதிபலிப்புக்களை நாங்கள் அவதானித்துள்ளோம். ராஜபக்ஷவினர் கடந்த ஆட்சிகாலத்தினை விடவும் இம்முறை பெரும்பன்மை சிங்கள மக்களின் பெருவாரியான ஆணையைப் பெற்றிருக்கின்றார்கள். அரசியல் ரீதியாக பலமடைந்திருக்கின்றார்கள் என்ற யதார்த்தத்தினை நாம் தவிர்த்து விடமுடியாது. தமிழர் பிரச்சினையை இந்தியா கைகழுவிட்ட பிரச்சினையாக கொள்ளவில்லை. ஆனால் உரிய காலம் கனியும் வரையில் காத்திருக்கின்றது. அதற்குரிய சூழலை நோக்கிய நகர்வுகளையும் முன்னெடுத்து வருகின்றது. 

கேள்வி:- இனப்பிரச்சினை தீர்வு விடயத்தல் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் வகிபாகம் தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்னவாக உள்ளது?

பதில்:- போர் நிறைவுக்கு வந்த பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் மத்தியில் ஒற்றுமையில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தமது இனக்குழுமம் சார்ந்து ஒன்றிணைந்த ஒரேகுரலில் வலியுறுத்தல்களை செய்யும் நிலைமைகளும் இல்லாதிருக்கின்றது. ஒட்டுமொத்த தமிழர்களுக்குமான மேம்படுத்தப்பட்ட அரசியல் தலைமைக்கான வெற்றிடமும் காணப்படுகின்றது. எனது தனிப்பட்ட அவதானிப்புக்களில் இந்த விடயங்களை நான் அடையாளப்படுத்தியுள்ளேன். இதனையொத்த நிலைப்பாடுகள் பா.ஜ.க.வுக்கும் இல்லாமில்லை. ஆகவே இந்த விடயங்கள் தொடர்பாக தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் கூடியளவு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 

இதனைவிடவும், அத்தலைவர்கள், விசேடமாக பா.ஜ.க.வின் தமிழக தரப்புக்களுடனும் சரி, மத்திய அரசாங்கத்தரப்புக்களுடனும் சரி கொண்டிருக்கின்ற ஊடாட்டம் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. அவர்களின் ஊடாட்ட ரீதியான பின்னடைவுகள் இலங்கையுடனான மத்திய அரசின் அணுகுமுறைகளின்போது விடயதான முன்னுரிமை பட்டியலில் தாக்கத்தினை ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

அதுமட்டுமன்றி தமிழகத்தில் உள்ள மாநில கட்சிகள் தமது நலன்களை மையப்படுத்தி இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு மட்டுப்பாடுகளை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். அதனால் இந்த விடயம் தொடர்பில் தேசியக் கட்சிகளோ வட இந்திய பிரதிநிதிகளோ அதிகளவில் புரிந்து கொள்ளாத சூழல் காணப்படுகின்றது. 

அவ்விதமான நிலைமைகளை மாற்றிமைக்க வேண்டும். அவர்களின் கரிசனைகளையும் வென்றெடுக்க வேண்டும். அதற்குரிய அணுகுமுறைகள், தொடர்ச்சியான தொடர்பாடல்களை தமிழர் மக்களின் பிரதிநிதிகள் பேண வேண்டியுள்ளது. 

கேள்வி:- தற்போதைய ஆட்சியாளர்களுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தையை அடுத்து சீனாவின் உயர்மட்டக்குழு உடனடியாக இலங்கைக்கு விரைந்திருக்கின்றது. ராஜபக்ஷ அரசாங்கம் சீனாவுடன் மீண்டும் நெருக்கத்தினை கொள்ள ஆரம்பித்திருக்கின்றது. ராஜபக்ஷவினரின் அனைத்து நகர்வுகளையும் இந்தியா உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது. 

சீனா வட இந்திய எல்லைகளில் மீறல்களை செய்கின்றது. சமநேரத்தில் இலங்கையுடனும் நெருங்குகின்றது. இந்த நகர்வுகளை எல்லாம் இந்தியா மிகவும் அவதானத்துடன் கருத்தில் கொண்டிருக்கின்றது. அனைத்து விடயங்களையும் இந்தியா அறிந்திருக்கின்றது. ராஜபக்ஷவினரின் நகர்வுகளை அறியாதவர்களாக இந்திய தரப்புக்கள் இருக்கவில்லை. 

கேள்வி:- இந்திய, இலங்கை ஒப்பந்தம் அல்லது இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்தியா தற்துணிவான அழுத்தங்களை பிரயோகிக்க விளைந்தால் இலங்கை சீனா சார்பு நிலையை முழுமையாக எடுத்துவிடும் என்ற அச்சம் இந்திய மத்திய அரசாங்கத்திடம் காணப்படுகின்றதா? 

பதில்:- அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை நான் பிரதிபலிக்க முடியாது. எனினும் பூகோள அனுபவத்தின் அடிப்படையில் இந்திய மத்திய அரசாங்கத்தின் கடுமையான அழுத்தங்கள் இலங்கை சீன சார்பு நிலைக்கு செல்வதற்கான சந்தர்ப்பங்களை அதிகப்படுத்தும். குறிப்பாக, தென்னிலங்கையில் சீனாவின் முதலீடுகள் மற்றும் பிரசன்னம் ஆகியவற்றையும் அரசாங்கத்தின் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு போன்ற விடயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது. 

கேள்வி:- இலங்கையில், இந்தியா தலைமையில் நிரந்த அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படுகின்றபோது அதன் ஆட்புல எல்லை பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:- நிச்சயமாக, இந்த விடயத்தினை தென்னிந்தியாவுடன் மட்டுப்படுத்தி குறுகியதாக்கி விடக்கூடாது. தென்னிந்தியாவைத் தாண்டி, ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் நிரந்தர அமைதியையும் பாதுகாப்பினையும் உறுதி செய்யும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

கேள்வி:- இறுதியாக, சிங்களத் தீவுக்கு பாலம் அமைப்போம் என்ற பாரதியின் கனவை நனவாக்குவதாக பிரதமர் மோடி இலங்கை பாராளுமன்றில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார் அதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெறுகின்றவா?

பதில்:- ஆம், இராமேஸ்வரத்திற்கும், தலைமன்னாருக்கம் இடையில் பாலம் அமைப்பதற்காக அமைச்சர் நிதின் கட்ஹரி அதுபற்றிய பூர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். அதனைவிடவும் கரைக்காலுக்கும் காங்கேசன் துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்தினை ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று பலாலிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமான சேவைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இதனைவிடவும் இலங்கை வாழ் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்திலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீவர கரிசனை கொண்டிருக்கின்றது என்பதை குறிப்பிட்டுக் கூறுகின்றேன். 

VIAவீரகேசரி பத்திரிகை நேர்காணல்: ஆர்.ராம்