நாட்டின் பொருளாதார நிலை – மீண்டெழ முடியா வீழ்ச்சி

நாட்டின் பொருளாதார நிலை, சாண் ஏற முழம் சறுக்குகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து, இலங்கையின் பிரதான வருமான மூலங்கள் அனைத்துமே, பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

குறிப்பாக, ஏற்றுமதி வருமானமும், சுற்றுலாத் துறை வருமானமும் மோசமான பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன.

2019ஆம் ஆண்டின் ஜனவரி தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரையான காலத்தில், ஏற்றுமதிகள் மூலம் இலங்கைக்கு 8030 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்தது. 

ஆனால், இந்த ஆண்டின் ஜனவரி தொடக்கம் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில், 6445 மில்லியன் டொலர் மாத்திரமே ஏற்றுமதிகள் மூலம், வருமானமாக கிடைத்திருக்கிறது.

ஏற்றுமதிகள் மூலம் கிடைத்து வந்த வருவாய், இந்த எட்டு மாத காலப்பகுதியில், 19.7 வீதம் வீழ்ச்சி கண்டிருக்கிறது.

அதேபோல, கடந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதம் ஏற்றுமதிகள் மூலம், 1033 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்ற இலங்கைக்கு, இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதம், 947 மில்லியன் டொலர் வருமானமே கிடைத்திருக்கிறது.

இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தி, ஏற்றுமதிகளை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டம் நடைமுறைக்கு வந்து, கிட்டத்தட்ட ஒரு வருடமாகப் போகின்ற போதும், இதுவரை அது வெற்றியளிக்கவில்லை.

இன்னொரு பக்கத்தில் மிகமோசமான அடியை வாங்கியிருக்கிறது சுற்றுலாத் துறை.

கடந்த ஆண்டு தொடக்கத்தில், இரண்டரை மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இழுக்கும் திட்டத்துடன் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

ஆனால், ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களால் சுற்றுலாத் துறை வருமானம் பெரும் சரிவைச் சந்தித்தது.

அதற்குப் பின்னர் மெல்ல மெல்ல நிலைமை சீரடைந்து வந்த நிலையில் தான், கொரோனா தொற்று பேரிடியைக் கொடுத்திருக்கிறது.

கடந்த ஆண்டில் 271 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுக் கொடுத்த சுற்றுலாத்துறையினால் இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில் எந்த வருமானத்தையும் பெற முடியவில்லை.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் நேரடிப் பாதிப்பு காணப்பட்ட காலப்பகுதியை உள்ளடக்கிய, கடந்த ஆண்டின் ஜனவரி தொடக்கம் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில், 2380 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தது சுற்றுலாத்துறை.

ஆனால் இந்த ஆண்டில், ஜனவரி தொடக்கம் ஓகஸ்ட் வரையான காலத்தில், 956 மில்லியன் டொலர் மாத்திரமே வருமானமாக கிடைத்திருக்கிறது.

கி்ட்டத்தட்ட 60 சதவீத வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது சுற்றுலாத்துறை.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றாகத் தடைப்பட்டுப் போயுள்ள நிலையில், அரசாங்கம் அடுத்த கட்டமாக எந்த நகர்வையும் முன்னெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றை தடுப்பதற்காக, விமான சேவைகளை தடுக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது.

உலகின் பெரும்பாலான நாடுகள் அந்த வழிமுறையைத் தான் கையாண்டன. அதற்குப் பின்னர், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி விட்டு, சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பான முறையில் கொண்டு வரும் வகையில், விமான சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது.

ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், குறித்த காலத்தில் அதனைச் செய்ய முடியவில்லை. காரணம், வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களை அழைத்து வர வேண்டியிருந்தது.

பல மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கைத் தூதரகங்களின் முன்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. சில இடங்களில் அந்த நாட்டு பொலிசார் தலையிட்டு தாக்குதல் நடத்தி புலம்பெயர் தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் நிலையும் ஏற்பட்டது.

கொரோனா தொற்று பரவலிலானால், தொழிலாளர்கள் பலர் வேலையையும் இழந்து போயுள்ளனர். அவர்களால் அங்கு தொடர்ந்து தங்கியிருக்கும் வசதிகளும் இல்லை.

குவைத் போன்ற பல மத்திய கிழக்கு நாடுகளின் தூதரகங்களில் பெருமளவு புலம்பெயர் தொழிலாளர்கள் அடைக்கலம் தேடியிருக்கிறார்கள்.

அவர்களை அவசரமாக நாட்டுக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு முன்னர், சுமார் 50 ஆயிரம் பேரை திருப்பி அழைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்று அரசாங்கம் கூறியிருந்தது.

ஏற்கனவே பல ஆயிரம் பேர் அழைத்து வரப்பட்டுள்ள போதும், அழைத்து வரப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை, இன்னமும் 50 ஆயிரமாகத் தான் இருக்கிறது.

காரணம், வெளிநாடுகளில் வீசா முடிந்தவர்கள், தங்கியிருக்கும் காலத்தைக் கடந்தவர்களும், பதிவு செய்து வருவதால் நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறைவதாக இல்லை.

இவர்களை ஓரேயடியாக அழைத்து வர முடியாது. அவ்வாறு அழைத்து வந்தாலும் கூட, இங்கு தனிமைப்படுத்துவது பி.சி.ஆர். சோதனை நடத்துவது, தொற்றுள்ளவர்களுககு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்கள் உள்ளன.

எனவே தான், தினமும் 300 தொடக்கம் 400 பேரை அழைத்து வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிலவேளைகளில் 600 தொடக்கம் 700 பேரும் அழைத்து வரப்பட்டனர்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் காணப்பட்ட வெற்றிடங்களைப் பொறுத்தே இது தீர்மானிக்கப்பட்டது.

இலங்கையர்களை திருப்பி அழைத்துக் கொண்ட பின்னர் தான், சுற்றுலாப் பயணிகளுக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கக் கூடிய நிலை உள்ளது.

ஏனென்றால் இரண்டு தரப்பையும் ஒன்றாக கையாளும் வசதி அரசாங்கத்திடம் கிடையாது.

இதனால் எப்படியும் இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான விமான சேவைகளை ஆரம்பிக்க முடியாது என்பது ஏற்கனவே தெளிவாகியிருந்தது.

இந்தநிலையில் இப்போது கொரோனாவின் அடுத்த அலை வீச ஆரம்பித்திருக்கிறது.

இதனால் தனிமைப்படுத்தல் நிலையங்கள் நிரம்பியுள்ளன. தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளும் நிரம்பி விட்டன.

உள்நாட்டில் தொற்று கட்டுக்கள் இருந்தால் தான், இந்த இரண்டு வசதிகளையும் வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு பயன்படுத்த முடியும்.

96 தனிமைப்படுத்தல் நிலையங்களில், 10, 250இற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது போதாதென்று நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள கல்வியியல் கல்லூரிகள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்காக இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

தொற்றாளர்களுக்கான மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுகிறது.

இவையெல்லாம் இன்னொரு துறையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விடயங்கள். அவசரத்துக்கு இதனை செய்யலாம். ஆனால் நீண்டகாலத்துக்கு செயற்படுத்த முடியாது.

இவ்வாறான நிலையில், சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதென்பது அரசாங்கத்துக்கு இலகுவான விடயமாக இருக்கப் போவதில்லை.

நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பு செய்து வந்த சற்றுலாத்துறையினால் எந்த வருமானமும் பெற முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கிறது.

உள்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும். அதனை அரசாங்கம் குறுகிய காலத்துக்குள் செய்துவிட முடியாது.

ஆக இந்தப் பிரச்சினையை கையாளுவதில் நீண்டகால சிக்கல்களை அரசாங்கம் எதிர்கொள்ளப் போகிறது என்பதே உண்மை.

கொரோனா தொற்று சிக்கல் தீர்க்கப்படும் வரை சுற்றுலாத் துறை வருமானத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்பது தான் இன்றுள்ள நிலை.

எனவே, பொருளாதார தேட்டத்துக்கு மாற்று வழிகளை தேட வேண்டியது தான் அரசாங்கத்துக்கு உள்ள ஒரே வழி.

VIA-கார்வண்ணன் வீரகேசரி பத்திரிகை
Previous articleஇலங்கையில் கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம்
Next articleரிஷாத் பதியித்தீனை பாதுகாக்க எமக்கு எந்தவித தேவையும் இல்லை; சஜித் அணி MP சமிந்த விஜேசிறி