அரசியல் ஆதாயத்துக்கான இலக்கா முஸ்லிம்கள்?

முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்திற்கு பின்னர் இலங்கை அரசியலில் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக முஸ்லிம்கள் இருந்தார்கள். இந்நிலை 2015ஆம் ஆண்டு வரை நீடித்தது. ஆனால் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

பௌத்த இனவாத சக்திகளே ஆட்சியாளர்களை தீர்மானிக்கின்ற சக்தியாக உருவெடுத்துள்ளார்கள். ஆட்சியாளர்களை மட்டுமன்றி அவர்களின் கொள்கைகளையும் வகுக்கின்றவர்களாகவும் பௌத்த இனவாத தேரர்களும்ரூபவ் அமைப்புக்களும் மாறியுள்ளன.

விடுதலைப் புலிகள் வலிமை பெற்றிருந்த காலப் பகுதிகளில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், தமிழ்த் தலைவர்களுக்கு எதிரான கருத்துக்கள்ரூபவ் அரசியல் அதிகாரத்தினை பங்கீடு செய்வதற்கான எதிர்ப்புக்களின் மூலமாக அரசியல் செய்த பேரினவாதக் கட்சிகளுக்கு விடுதலைப் புலிகளின் மௌனிப்பின் பின்னரான சூழலில் அரசியல் செய்வதற்கான வெறுமையை ஏற்பட்டது. இதனால், சிங்கள பேரினவாதத்துடன் இணக்க அரசியலில் ஈடுபட்டு வந்த முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் இலக்கு வைத்து மற்றுமொரு இனவாத அரசியலுக்கு அத்திவாரமிட்டுக் கொண்டார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதிகள் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே செயற்பட்டு வந்துள்ளார்கள். ஆயினும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருந்த பௌத்த இனவாத அமைப்புக்களினதும் தேரர்களினதும் செயற்பாடுகளை அரசியல் தேவைக்காக அதிகம் பயன்படுத்திக் கொள்ளும் கொள்கையினை விடுதலைப் புலிகளின் மௌனிப்பின் பின்னரே அதிகம் அவதானிக்க முடிகின்றன.

சட்டத்தைக் கையில் எடுத்துச் செயற்படுகின்றவர்கள் முஸ்லிம்களைப் பற்றி உண்மைக்குப் புறம்பாக போலியான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து முஸ்லிம்களின் ஹலால் உணவு, மத்ரஸா, உலமா சபை, முஸ்லிம் பெண்கள் அணியும் கலாசார ஆடை, அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் எனப் பலவற்றையும் கேள்விக்கு உட்படுத்திய பௌத்த இனவாதிகள், அத்தகைய கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து வைத்துள்ளார்கள்.

முஸ்லிம் தலைவர்களை பயங்கரவாதிகளை விடவும் மோசமாகக் கருதும் நிலையை உருவாக்கியுள்ளார்கள். இத்தகைய நடவடிக்கைகளுக்கு உற்சாகமளித்து அரசியல் இலாபம் தேடிக் கொள்ளும் நடவடிக்கைகளை பேரினவாதக் கட்சிகள் மேற்கொண்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனும் தொடர்ச்சியாக பலத்த நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றார். முதலில் வில்பத்து காட்டை சட்ட விரோதமாக அழித்தார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்து ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இக்குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை. அதனையடுத்து, ஏப்ரல் 21இல் சஹ்ரான் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலுடன் சம்பந்தப்படுத்தி குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்கள். இவ்வாறு தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்த போதிலும் அவற்றிக்கு சாட்சியங்களும் ஆதாரங்களும் இருக்கவில்லை.

இந்நிலையில் ரிஷாத் பதியுதீன் சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து சந்தேகத்தின் பேரில் சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டார்.

சுமார் ஐந்து மாதங்களுக்கு மேல் விசாரணைகள் நடைபெற்றன. இறுதியில் கடந்த செப்டம்பர் 29ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார். ஆயினும் இந்த விடுதலையை பௌத்த இனவாதிகளும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்டவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆளுங் கட்சியை சேர்ந்த 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்டு றியாஜ் பதியூதீனை கைது செய்யுமாறு ஜனாதிபதியை கேட்டுக் கொண்டார்கள்.

இந்தப் பின்னணியில் தற்போது 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் வடமாகாண முஸ்லிம்களை வாக்களிப்பதற்கு அழைத்துச் செல்வதற்காக அரச நிதியினை சட்டவிரோமாக செலவு செய்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைது செய்வதற்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே மேற்படி குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்ட போது அதற்காக செலவு செய்யப்பட்ட நிதி மீள அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டது. அரசாங்கத்தின் பல கோடி நிதியினை முறையற்ற வகையில் கையாண்ட பலர் நாட்டில் குற்றச்சாட்டுக்குள்ளாகி உள்ளார்கள். அவர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணையும் செய்துள்ளார்கள். ஆனால் அவர்களை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு எந்தவொரு இதுவரையில் உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

அதனால் ரிஷாத் பதியுதீனை கைது செய்வற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை அரசியல் பின்னணியைக் கொண்டதென்றே கருதப்படுகின்றன. ரிஷாத் பதியுதீனுக்கும் ரியாஜ் பதியுதினுக்கும் எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு பௌத்த இனவாதிகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்கு அரசாங்கம் விரும்புவதாகவும் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இதே வேளை, ரிஷாத் பதியூதீனை கைது செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவினர் கோட்டை நீதிமன்றத்தினை கோரிய போதிலும் அதற்கான உத்தரவு வழங்கப்படவில்லை. சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாகவே குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் மேற்படி உத்தரவை வேண்டி நின்றனர். இந்நிலையில் தற்போது சட்டமா அதிபர் ரிஷாத் பதியுதீனை சட்டத்தின் அடிப்படையில் கைது செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறையை கேட்டுள்ளார். இதற்கு அமைவாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைது செய்வதற்கு ஆறு பொலிஸ் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். குற்றவாளிகளை பாதுகாப்பதுதான் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு பிரதான காரணமாகும். அதேவேளை, சந்தேக நபர்களையும் ஆதாரமற்ற வகையில் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து கைது செய்வதனையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் உண்மையான குற்றவாளிகள் தப்பிக் கொள்வார்கள்.

இலங்கையின் பொருளாதாரத்தை ஏப்பமிட்டவர்கள் பட்டியலில் அரசியல்வாதிகள் முதனிலையில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்காருப்பதும் ரிஷாத் பதியுதீன் மீது நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதும் அவர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்து விசாரணைகளை மேற்கொள்வதனையும்தான் சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது.

முஸ்லிம் விரோத செயற்பாட்டாளர்களின் ஆதரவுடன் அரசியல் வளர்ச்சியை அடைந்து கொண்டவர்கள் அதனை பாதுகாத்துக் கொள்வதற்கு, அச்செயற்பாட்டாளர்களின் வேண்டுகோள்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயாத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். சட்டத்தின் ஆட்சிக்கு மாறாக இனவாதிகளின் வேண்டுகோள்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலைமை தோன்றுவது நாட்டினை மேலும் வலுவிழக்கச் செய்துவிடும்.

அரசியல்வாதிகளினாலும் மாறிமாறி ஆட்சி செய்த அரசாங்கங்களினாலும் இலங்கை நலிவடைந்துள்ளது. இதிலிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டுமாயின் பாகுபாடற்ற வகையில் சட்டமும், ஒழுங்கும் அமுலாகும் அமைப்பு உருவாக வேண்டியுள்ளது. ஆனால், இலங்கையின் பேரினவாத அரசியல்வாதிகள், இனவாதிகளின் செயற்பாடுகள் அதற்கு மாற்றமாகவே அமைந்துள்ளன.

இந்த நாடு பௌத்த நாடு, தனியே பௌத்தர்களுக்குரிய நாடு என்பதனை வலியுறுத்துவதிலும், பௌத்த மயமாக்கலை மேற்கொள்வதற்கு எடுக்கப்படும் பெரும்பாலான நடவடிக்கைகள் சிறுபான்மையினரை சிறுமைப்படுத்துவதாகவே காணப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சி திட்டமானது சிறுபான்மையினரின் அரசியல், பொருளாதாரம், கலாசாரம், இருப்பு போன்றவற்றின் மீது பாய்ச்சப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே ரிஷாத் பதியுதீனையும் கைது செய்வதற்குரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ரியாஜ் பதியுதீன் விடுதலை, ரிஷாத் பதியுதீனை கைது நடவடிக்கை ஆகியவற்றின் மூலமாக பேரினவாத கட்சிகள் அரசியல் இலாபமடைந்து கொள்வதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மாற்று முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் குறித்து பெருமை பேசிக் கொள்ளும் ஒரு அநாகரிக அரசியலையும் அவதானிக்க முடிகின்றது. இன்று ரிஷாத் பதியுதீன் என்றால் நாளை இன்னுமாரு முஸ்லிம் அரசியல் தலைவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

அதேநேரம், எந்தவொரு முஸ்லிம் அரசியல் தலைவரையும் புகழ்பாடிக் கொள்ள முடியாது. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சமூகத்தின் விவகாரங்களை முன்னிலைப்படுத்தி செயற்படவில்லை. பேரினவாத கட்சிகளின் இனவாத நடவடிக்கைகளை ஆளுந் தரப்பு என்ற போர்வைக்குள் ஏற்றுக் கொண்டுதான் அமைச்சர்களாக இருந்து வந்துள்ளார்கள்.

இதேவேளை, முஸ்லிம் அரசியல் தலைவர்களை பணிய வைப்பதற்காக அமைச்சர்கள் பதவிகளும் பணக் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன. பதவிக்கும் பகட்டுக்கும் சமூகத்தின் அடிப்படை உரிமைகளையும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அடமானம் வைத்துள்ளார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.

இவ்வாறு முஸ்லிம் அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் அமைந்திருந்தாலும் அண்மைக் காலமாக முஸ்லிம் அரசியல் தலைவர்களின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் இனவாதிகளினதும், அரசியல் தேவைக்காகவும் என்பதனை புதிந்து கொள்ள வேண்டும்.

அதனால், ரிஷாத் பதியுதீன் மீதான கைது நடவடிக்கைகள் குறித்து மாற்று முஸ்லிம் கட்சிகளின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை காட்ட முடியாது. சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன் வைப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். இத்தகைய விமர்சனங்கள் பேரினவாதிகளினதும் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதாகவே அமையும்.

முஸ்லிம் அரசியல் தலைவர்களின் மீது பௌத்த இனவாதிகள் திட்டமிட்ட வகையில் குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது என்பது புதுமையானதுமில்லை. வைத்தியர்  ஷாபி சிஹாப்தீன் சிங்கள பெண்களுக்கு கட்டாய கருத்தடையை அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்கள். பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டன. இவ்வாறு முறைப்பாடு செய்தவர்களில் சிலர் குழந்தைகள் பெற்றுள்ளார்கள் என்ற உண்மையை இருக்கின்ற போதிலும் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை இன்னும் குற்றவாளி என்றே தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அதுமட்டுமன்றி அகில இலங்கை உலமா சபையின் நடவடிக்கைகள் குறித்தும் குற்றச்சாட்டுக்களை அடுக்குகின்றார்கள். இவை முஸ்லிம் விரோத செயற்பாடுகள் வேண்டுமென்று மேற்கொள்ளப்படுகின்றன என்பதனை தெளிவுபடுத்துகின்றன. 

இதேவேளை,  அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் குறித்து பலத்த விமர்சனங்களை பௌத்த தேரர்கள் உள்ளிட்டவர்களும், ஆளுந் தரப்பினரும், எதிர்க்கட்சியினரும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மேலும், 20 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள சில விடயங்களை சுட்டிக்காட்டி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரம் நிறைவேற்ற முடியாது.

அதனால், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமென்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்தோடு கொவிட – 19 இரண்டாவது அலை குறித்து எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றனர். இதிலிருந்து பெரும்பான்மையின மக்களின் பார்வையை திசை திருப்புவதற்காகவே ரிஷாத் பதியுதீனை கைது செய்யவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகங்களும் சமுதாயத்தில் இல்லாமில்லை.

கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின் போது ரிஷாத் பதியுதீன் பற்றியே அதிகம் பேசப்பட்டன. உயிர்த்த ஞாயிற்றுத் தாக்குதலுடன் ரிஷாத் பதியுதீனையும் முடிச்சுப் போட்டே தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டார்கள்.

அதனால், இன்றைய ஆட்சியாளர்களின் வெற்றிக்கு ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களும் காரணமெனலாம். அதனால் இன்னுமொரு அரசியல் நகர்வுக்காக ரிஷாத் மீது குறி வைக்கப்பட்டுள்ளதா என்று எண்ண வேண்டியுள்ளது. (வீரகேசரி பத்திரிகை) சஹாப்தீன்