Dr பஸீஹாவின் கொரோனா அனுபவம் – இறைவனுக்கே எல்லாப் புகழும்

எனது அன்புக்கும் மரியாதைக்குமுரிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

அல்லாஹ்வின் பேரருளின் காரணமாக நாம் நலமாக உள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!

அவனிடமிருந்து அருளாகத் தரப்பட்ட ஒரு சோதனையின் வேதனையை ஓர் உறுப்பின் வலி போன்று எனது ஊரைச் சேர்ந்த, நாட்டைச் சேர்ந்த அனைவரும் உணர்வதை என்னால் அறிய முடிகின்றது. ஒரு சமூக, தேச கட்டமைப்பின் வெளித்தோற்றமாக நான் அதனைக் காண்கின்றேன்.

முதலில் குறிப்பாக எனது குடும்பம், உறவினர்கள் உட்பட ஊரவர்கள் அனைவருக்கும் பொதுவாக எமக்காகப் பிரார்த்தித்த, கவலைப்பட்ட அனைவருக்கும் அல்லாஹ் அவனது பூரண மன்னிப்பையும் ஈருலக வெற்றியையும் வழங்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன். 

மாவனல்லை மண்ணில் ஒரு புதிய ஈமானியப் பாசம் உருவாகி, அனைவரும் ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட அரண் போல இனி அவன்ஆக்கி விடுவானாக.

பரவியிருக்கும் Covid-19 தொற்றுநோய் எங்கிருந்து என்னை/ எம்மைத் தொற்றியது என்பதை இதுவரை அறியோம்.

அது அப்படி இருக்க நாட்டில் Covid-19 தொற்று பலருக்கு வரும் வாய்ப்பு இருப்பது கவலைக்கிடமானது. அவசரமாகவோ, மெதுவாகவோ பலருக்குத் தொற்று ஏற்பட்டதன் பின்னரே இந்நோய் நாட்டை விட்டு, உலகை விட்டு விடைபெறப் போகின்றது என்பது தான் எதிர்வுகூறல்.

இருப்பினும் நாம் மிகவும் கவனமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருப்பது இன்றியமையாததாகும்.

என்னைப் பொறுத்தவரையில் அனேகமான நேரங்களில் நான் Mask அணிந்து கொண்டு தான் இருப்பேன். (95%) . ஆனால் என்னை சந்திக்க வருபவர்கள் பலர் Mask அணியாமல் வருவதுண்டு. 

மருந்து எடுக்க வருபவர்களுக்கு சில வேளை தொலைபேசியில் மருந்து அனுப்புகின்றேன் என்று கூறினாலும், கொஞ்சம் சந்திக்க வர முடியாதா? என்று கேட்பார்கள்.

ஒரு வைத்தியரை சந்திப்பதற்கு எவ்வளவு எச்சரிக்கை உணர்வு இருக்க வேண்டும் என்பதை நோயாளர்களுக்கு விளங்க வைப்பது மிக சிரமமான காரியமாக இருந்தது.

நான் இம்முறை சுகயீனமுற்றதிலிருந்து வைத்தியசாலை தவிர வேறெங்குமே போகவில்லை. மிக வருத்தத்தோடும் லீவு எடுக்க முடியவில்லையே என்ற வேதனையாடும் தான் வேலைக்குப் போக வேண்டி இருந்தது.

அந்நோய் Covid-19 ஆக இருக்குமென யூகிக்கவில்லை. இப்பொழுது மீட்டிப் பார்க்கின்றேன்; தாங்க சிரமமான உடல் வலி, பசியின்மை, சிறியதொரு இருமல், இளம் காய்ச்சல், சுவை, மணம் விளங்காமை, வயிற்றோட்டம் எனும் அறிகுறிகள் கட்டம் கட்டமாக எனக்கு வந்தன. 3,4 நாட்களின் பின்னர் (உடல் வருத்தம் குறையும் பொழுது) கணவருக்கும் காய்ச்சல் குணம் ஏற்பட்டது.

சுகயீனமுற்ற உடனேயே (முதல் நாளிலே) இதனை நான் மேலிடத்துக்கு அறிவித்தேன். Covid-19 தொற்றுள்ளவர்களை சந்திக்கவில்லையே என்ற காரணத்துக்காக எனது முறைப்பாடுகள் அடுத்த கட்டத்தை நகர்த்தப் போதுமானதாக அவர்களுக்கு இருக்கவில்லை. 

திரும்பத் திரும்ப எடுத்த முயற்சிகளும் அவ்வாறே புறக்கணிக்கப்பட்டன. கேகாலை OPD இற்கு வந்து சென்ற ஒரு நோயாளி Positive என்ற செய்தியை காரணம் காட்டி நானாகவே வேண்டிக்கொண்ட நிலையில் திடீரென ஒரு நாள் PCR Test செய்யும் அவகாசம் கிடைத்தது. 

அந்தவேளை OPD இல் குறிப்பிட்ட நோயாளர்களைப் பார்த்த வைத்தியர்களுக்கு PCR Negative ஆக Report வந்திருந்ததால் நானும் என்னுடன் இரு வைத்தியர்களும் செய்த PCR உம் Negative ஆகவே வரும் என்ற எதிர்பார்ப்பே எமக்கு இருந்தது.

PCR அனுப்பி 48 மணித்தியாலங்களும் தாண்டியிருந்த நிலையில் (Negative என்றால் அறிவிப்பதில்லை) நாம், Negative ஆகிவிட்டது என்ற நினைப்பிலும் தான் இருந்தோம

திடீரென Positive report வந்துள்ளது என்பதை அறிவித்த கேகாலை Infection Control Unit இன் விஷேட வைத்திய நிபுணர், இந்த report ஐ ஏற்றுக்கொள்ள முடியாது என உடனடியாக மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்றார். இதனை Positive என்று நாம் அறிவிக்க முடியாது என்றும் கூறினார். அடுத்த நாள் Repeat test Positive ஆக வந்தவுடனே நோய் கண்டுபிடிக்கப்பட்டது. நோய் அறிகுறிகள் குறைந்துகொண்டு வரும் தருவாயிலே இது அறியப் பட்டுள்ளது.

இனி PCR Positive என்பது நிச்சயப்படுத்தப்பட்ட பிறகுள்ள காட்சி முற்றிலும் வேறுபட்டது என்பதை என்னை விட நீங்கள் அறிந்து வைத்திருப்பதை Positive அறிவிக்கப்பட்ட தினம் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

Positive அறிவிக்கப்பட்ட முதல்  தினமே தொலைபேசிக்கு ஓய்வு இல்லாமல் போய் விட்டது. பல PHIs, GS, MOH, Police, CID officer, TASK FORCE EPID  Unit, Hospital என்று எண்ணிலடங்காத Official call கள் ஒரே விடயத்தைப் பலரும் திரும்பத் திரும்பக் கேட்டு விபரமெடுப்பது ஒரு பக்கம். பள்ளி நிர்வாகம், Friends, Relations, Patients, Neighbours என்று இன்னொரு பக்கம் .

Social media வில் உலாவி வரும் செய்திகளும் அப்படித்தான்.

PCR Positive என்பதன் அர்த்தம் ஒருவருக்கு Covid-19 தொற்று ஏற்பட்டுள்ளது என்பது எல்லோரும் அறிந்த விடயம். அதனைத் தொடர்ந்து அதன் அகோர பக்கத்தை கண் முன் கொண்டுவரும் காட்சி மிகவும் சுமையானது. நாட்டிலுள்ள ஏற்பாடுகள் மிகவும் கடுமையானது. அது அவ்வளவு சிரமமானது என்பதற்கு ஒரு நியாயமும் இருக்கின்றது. சிலவேளை நீங்கள் அதனை யோசித்து இருக்க மாட்டீர்கள். என்ன தெரியுமா?

Covid-19 தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால் அடுத்த கணமே அவர் தொற்றுக்குரியவர் என்பதால் கவனம் அவர் பக்கம் இன்றி அவரைத் தவிர்ந்த மற்றவர்கள் பக்கம் தான். மற்றவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தொற்றுக்குள்ளானவரின் பௌதீகத் தொடர்பை அறுக்க வேண்டி ஏற்படுகின்றது. மற்ற மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக சுமக்கும் கஷ்டங்கள் ஒரு முஃமினுக்கு இன்பமானவை தானே. ஆம் அவை தான் இன்பமானவை. யாரும் அச்சப்படத் தேவையில்லை.

PCR Positive இற்கு இருக்கும் அகோரம் எதிர்காலத்தில் குறைந்துவிடும் இன்ஷா அல்லாஹ். நோய் அறிகுறிகள் அற்ற அல்லது சிறிதளவு அறிகுறிகள் மட்டுமுள்ள நோயாளிகள் வீட்டிலேயே பராமரிக்கப்பட வேண்டும் என்ற நிலை ஏற்படும் அல்லது அருகேயுள்ள வைத்தியசாலையில் பராமரிக்கப் படுவார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அது Simple ஆகி விடும்.

தனிமைப்படுத்தல் முறைகளும் அவ்வாறு தான்.

அவ்வாறு சிரமங்கள் ஏற்பட்டாலும் அதனை கஷ்டங்களாக நாம் பார்க்கத் தேவையில்லை அதன் நலவுகளையே பார்க்க வேண்டும்.

எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் நாடாமல் எந்தவொன்றும் நடைபெறாது. நிச்சயமாக ஒரு நன்மையைத் தருவதற்காகவே இந்த சோதனையை நான் பார்க்கிறேன். 

குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் அசௌகரியங்கள் மிகவும் கவலைக்குரியதாக இருந்தாலும் அல்லாஹ்வின் உதவிகொண்டு அவற்றை முகங்கொடுக்கும் தைரியத்தை அவன் எமக்கு அளித்துக்கொண்டு இருக்கின்றான். அல்ஹம்துலில்லாஹ்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல Covid-19 தொற்றுக்குள்ளானவர் பௌதீக தொடர்பு அறுக்கப்பட்ட மறுகணமே பலரின் உள்ளத்திலும் சிந்தனையிலும் உணர்விலும் நாம் வாழத் தொடங்கியதை உணர்கிறேன். முழு ஊரிலும், நாட்டிலும், உலகிலும் எமக்காகப் பிரார்த்தித்துக் கொண்டு இருக்கும் பலரின் தொடர்பு வியப்புக்குரியதாக இருக்கின்றது. 

அல்ஹம்துலில்லாஹ் ஒரு இயக்க, சமூக கட்டமைப்பின் ஒரு பிரதியாகவே நான் இதனைக் கருதுகின்றேன். இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவர் மற்றொருவருக்கு தன் உடலின் கண் போல் நடந்துகொள்ளும் நிலை மிகவும் வரவேற்கத் தக்கது. மிக உயர்ந்த நிலையும் கூட.

நிச்சயமாக இலவசமாக வழங்கப்படும் ஒரு தலைமைத்துவப் பயிற்சியாகவே நாம்  இதனைப் பார்க்கின்றாம். குழந்தைகளும் கூட கருணைமிக்க ரஹ்மானுக்கு நன்றியில்லாத விதத்தில் ஒரு கணம் கூட நடந்துகொள்ளக் கூடாது என்பதிலே நாம் மிக கரிசனையாக இருக்கின்றோம்.

இவ்வாறு சிந்திக்க, செயல்பட முடியுமாக இருப்பதற்கு நாம் பயிற்றுவிக்கப்பட்ட, வளர்க்கப்பட்ட பாசறை தான் காரணமாக இருக்கும் என நினைக்கின்றேன்.

இறுதியாக தொடர்ந்தும் பலருக்கு தொற்றுகள் வரக்கூடாது என்றும் சிரமங்கள் ஏற்படாது இருக்க வேண்டும் எனவும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.

அவ்வாறு தொற்று யாருக்கும் ஏற்பட்டால் அதன் பின்னுள்ள காரியங்களை அல்லாஹ் அனைவருக்கும் இலகுபடுத்தி அதனூடாக பல நன்மைகளை வரவழைக்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்.

என்னையும் என் குடும்பத்தையும் முதலில் அல்லாஹ் தெரிவு செய்ததில் ஒரு நலவை நாடியிருப்பான். தைரியமாக இந்த சோதனையை முகங்கொடுக்க வேண்டும் எனும் பாடத்தை அனைவருக்கும் கற்றுத் தருவதற்காக அவ்வாறு செய்திருக்கவும் கூடும். அல்ஹம்துலில்லாஹ். அவன் எல்லா மறைவானவற்றையும் அறிந்தவன்.

அல்லாஹ் எம்மனைவரையும் மன்னிப்பானாக. அவனின் மன்னிப்பும் சுவனமும் கிடைக்குமானால் உலகில் என்ன சோதனை வந்தாலும் அது சிரமமானதாக அமையாது. இறைவா, தாயிப் மண்ணில் நபி(ஸல்) கேட்டது போல் நீ எம்முடன் கோபமில்லை என்றால் உனது மன்னிப்பு எமக்குக் கிடைக்குமென்றால் மற்ற சிரமங்கள் எதுவும் சிரமமல்ல. இறைவா, உன் பக்கமே நாம் மீள இருக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.

ஜஸாகுமுல்லாஹூ ஹைரன் – இப்படிக்கு, அல்லாஹ்வின் நன்றிமிக்க  அடிமை (Dr Faseeha Jawfer)

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page