சஹ்ரானின் ஓரிரு வகுப்புக்குச் சென்றுள்ள இளைஞர்கள் நீண்ட காலம் தடுத்து வைப்பு பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசாரர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் மற்றும் ஹஜ்ஜுல் அக்பர், ரூமி போன்ற பெரிய முதலைகள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சஹ்ரான் நடத்திய வகுப்புகள் ஒன்று அல்லது இரண்டுக்குச் சென்ற இளைஞர்கள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை, இது தான் இன்றைய நிலைமை’ என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் புதன் கிழமை நுகர்வோர் அதிகார சபையின் தலைவரைச் சந்தித்து முறைப்பாடொன்றினைக் கையளிக்க நுகர்வோர் அதிகாரசபைக்குச் சென்றனர். நுகர்வோர் அதிகாரசபையின் தலைவரைச் சந்திக்க முடியாத நிலையில் ஞானசார தேரர் சபையின் பணிப்பாளர்களில் ஒருவரைச் சந்தித்து முறைப்பாட்டினைக் கையளித்தார்.

இது தொடர்பில் ஞானசார தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ரிஷாட் பதியுதீன் அமைச்சராக இருந்த காலத்தில் 2017.03.14 ஆம் திகதி நுகர்வோர் அதிகார சபைக்கு வழங்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் நியமனத்தில் ஊழல்கள் நடைபெற்றுள்ளன. இது தொடர்பில் உடனடியாக விசாரணை நடாத்தப்பட்டு தகுதியற்றவர்கள் நீக்கப்பட்டு தகுதியானவர்கள் நியமிக்
கப்பட வேண்டும் இந்தப் பதவிக்கு பொருளாதார அல்லது முகாமைத்துவம் அல்லது விற்பனை ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்களே இணைத்துக் கொள்ளப்படவேண்டும்.

ஆனால் ரிஷாட் பதியுதீன் இந்தப்பட்டங்களுக்கு அப்பால் வேறு இஸ்லாம் போன்ற பாடங்களில் பட்டம் பெற்றவர்களை நியமிக்கும்படி கோரியுள்ளார். இஸ்லாம் பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் மத்ரஸா அரபுப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாகவே நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு 1386 பேர் விண்ணப்பித்தனர். 943 பேர் நேர் முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில் 13 வீதமானோர் சிங்களவர்கள். அதாவது, 750 பேர்,193 பேர் முஸ்லிம்களாவர். இவர்களின் விகிதாசாரம் 51 வீதமாகும். 218 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. இவர்களில் 97 பேர் முஸ்லிம்கள், 96 பேரின் பல்கலைக்கழக பட்டம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

Read:  பாகிஸ்தான் சம்பவம் - வெட்கமும் துக்கமும்

சாதாரணதர பரீட்சையில் சித்தியெய்தாதவர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்துக்கு 13 விசாரணை அதிகாரிகள் இருக்க வேண்டும். ஆனால், 19 பேர் நியமனம் பெற்றுள்ளார்கள் இவர்களில் ஒருவரே சிங்களவர். திருகோணமலை மாவட்டத்துக்கு ஒரு சிங்கள அதிகாரியேனும் நியமிக்கப்படவில்லை. இது இஸ்லாமிய இராச்சியத்தை உருவாக்குவதற்கான முயற்சி
யாகும். இந்த நியமனங்கள் உடனடியாக இரத்துச் செய்யப்படவேண்டும்.

ஜிஹாதில் இருவகை ஜிஹாத் உள்ளது. ஒன்று பொருளாதார ஜிஹாத் மற்றது சிந்தனை ஜிஹாத். சிந்தனை ஜிஹாத் மூலம் அடிப்படை வாதத்தை பரப்புவதற்காக நுகர்வோர் அதிகார சபையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் வழிமுறையினை கொலை செய்வதாகும். இவ்வாறான சிந்தனை ஜிஹாத் எதிர்வரும் 10 வருடங்களில் எவ்வளவுக்கு வியாபிக்கும். சொப்பிங் பேக் உடன் வந்தவர் எவ்வாறு 3000 ஏக்கர் காணிக்கு உரிமையாளரானார் என்பது தேடிப்பார்க்கப்படவேண்டும்.

அவரை பொலிஸார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார்.

SOURCE(ஏ.ஆர்ஏ. பரீல்)