நிக்காப் தடை தீர்மானம் மேற்கொள்வது அடிப்படைவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்குவதை போன்றது என்றே தெரிவித்திருந்தேன்! -ரணில்-

அடிப்படைவாதத்தை ஒழிப்பதற்காக முஸ்லிம் அரசியல் தலைவர்களிடமிருந்தும் மதத் தலைவர்களிடமிருந்தும் ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெற்றதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகளின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்: முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பனிப்பாளர், தற்போதைய தேசிய உளவுச் சேவை பிரதானி சுரேஷ் சலே அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்தபோது நீங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தீர்களா ?

முன்னாள் பிரதமர் : அவரது அறிவில் பிரச்சினைகள் இருக்கவில்லை . எனினும் அவரது செயற்பாடுகளில் பிரச்சினை இருந்தது. இது தொடர்பான மேலதிக சாட்சியங்கள் ஊடகங்கள் இல்லாமல் வழங்கலாம்.( அதற்கான சந்தர்ப்பம் பின்னர் வழங்கப்பட்டது.)

அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்: நிகாப் ஆடையை தடை செய்வது தொடர்பில் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட போது நீங்கள் அதற்கு எதிர்ப்பை தெரிவித்தீர்களா?

முன்னாள் பிரதமர் : அப்போது இராணுவத் தளபதியாக செயற்பட்டு வந்த கிஷாந்த சில்வாதான் அந்த யோசனையை முன்வைத்தார். சோதனை நடவடிக்கைகளின் போது இதனால் சிக்கல் காணப்படுவதாக தெரிவித்தார். அந்த நேரத்தில் அத்தகைய தீர்மானம் எடுப்பது அடிப்படைவாதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை போன்றது என்றே தெரிவித்திருந்தேன்.

இதனால் முஸ்லிம் மிதவாதக் கருத்துகளை தெரிவிப்பவர்கள் எம்மிடமிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவித்தேன். இந்த நிகாப் தடை செய்வது தொடர்பான பேச்சு பிரான்ஸிலும் பேசப்பட்டபோது தான் இங்கும் பேசப்பட்டது. ஆனால் ஐக்கிய இராச்சியம் , அமெரிக்கா போன்ற நாடுகள் அதனை தடை செய்யவில்லை. இதன்போது முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு எதிராக அமெரிக்காவே போர் தொடுத்தது , பிரான்ஸ் கிடையாது என்றே நான் அங்கு தெரிவித்திருந்தேன்.

ஆணைக்குழு : தகவல்களை பெற்றுக் கொள்வதற்காகவே நிக்காப் ஆடையை தடை செய்ய அனுமதிக்கவில்லை என்று நீங்கள் தெரிவித்தீர்கள். ஆனால் 21 ஆம் திகதி வரையும் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லைதானே.?

முன்னாள் பிரதமர் : பெரும்பாலான முஸ்லிம்கள் எமக்குப் பல தகவல்களை பெற்றுக் கொடுத்திருந்தார்கள். அதனை வைத்து மேலதிக விடயங்களை கண்டறிவது எமது பாதுகாப்பு பிரிவினரின் கடமையாகும். எமது உளவுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைக்காமை அவர்களின் குறைபாடாகும். நுவரெலியாவில் பயிற்சிகள் கூட நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது குறுக்கிட்ட ஆணைக்குழு: நுவரெலியாவில் அடிப்படைவாத பயிற்சிகள் இடம்பெற்ற இடம் கண்டுப்பிடிக்கப்பட்டதுடன் , அந்த இடத்திற்கு பொலிஸாரும் சென்றிருந்தனர். இதன் போது ஸஹ்ரான் ஹாசிமும் இங்கு இருந்துள்ளதுடன் , ஆனால் கைது செய்வதற்கு முடியாமல் போயுள்ளதாகவும் முன்னாள் பிரதமருக்க தெரிவித்தது. இதனையடுத்து, வண்ணாத்துவில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை , முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசீம் இணைப்புச் செயலாளரை கொலை செய்ய முயற்சித்தமை, ஆகிய செயற்பாடுகளுடன் ஸஹ்ரான் தொடர்பு கொண்டுள்ளமை தெரியவந்துள்ளபோதிலும் அவரைக் கைது செய்வதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொலிஸ்மா அதிபரிடம் கேட்டிருந்தீர்களா ? என்று மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் முன்னாள் பிரதமரிடம் வினவினார்.

அது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவிடம் விசாரித்ததாகவும் , வவுணதீவு பொலிஸாரின் கொலைச் சம்பவம் தொடர்பிலும் சங்தேகங்கள் நிலவுவதான குற்றப் புலனாய்வு பிரிவினரே தனக்கு அறிவித்ததாகவும் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்: ஏப்ரல் 16 ஆம் திகதி தாழம்குடா பகுதியில் மோட்டார் சைக்கிள் வெடிப்பு தொடர்பில் நீங்கள் அறிந்திருந்தீர்களா?

முன்னாள் பிரதமர் : ஊடகச் செய்திகளின் ஊடாக அறிந்து கொண்டேன்.

அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்: 17 ஆம் திகதி உங்களுக்கு அறிவிக்கப்படவில்லையா?
முன்னாள் பிரதமர் : இல்லை , எனக்கு அறிவிக்கப்படவில்லை.

அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்: கடந்த 24 மணிநேர பாதுகாப்பு தொடர்பில் பொலிஸார் அறிக்கை அனுப்புவார்கள்தானே. அது உங்களுக்கு கிடைக்கவில்லையா?

முன்னாள் பிரதமர் : அந்த தகவல்கள் தொடர்பில் தேடுவதற்கு சில காலம் தேவைப்படும்.
அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்: இலங்கையில் பல பகுதிகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. கூரிய ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பில் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. உங்களுக்கு இது தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றனவா?

முன்னாள் பிரதமர் : இல்லை

இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல்கள் இடம்பெற்றபோது பிரதமாராக செயற்பட்ட ரணில் விக்கிரம சிங்க , கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தபோதும் இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு பிரிவினரோ , அப்போதைய அரச அதிகாரிகளோ கலந்து கொள்ளாதன் காரணமாக , பிரதமர் பாதுகாப்பு அமைச்சுக்கு செல்லவேண்டி ஏற்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுவின் அவதானம் செலுத்தப்பட்டது.

தான் அறிவிப்பு விடுத்தும் ஒருவரும் வந்திருக்காவிட்டாலும், அப்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு அது தொடர்பில் அலரிமாளிகையில் விட பாதுகாப்பு அமைச்சில் பேசுவது சிறந்தது என்று எண்ணியே சென்றதாகவும் அதன்போதும் அங்கு பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் கூடியிருந்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் அங்கிருந்த அதிகாரிகளுக்கு அடுத்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனை வழங்கியதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அலரி மாளிகையில் இடம்பெறவிருந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தெரிய வந்திருந்த போதிலும், அந்த தருணத்தில் அது தொடர்பில் விளக்கம் கோருவது பொருத்தமற்றது என்பதினால் அமைதியாக இருந்நததாகவும் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.
சிலவேளை நான் அதில் கேந்திர நிலையமொன்றை அமைத்துக் கொள்ள முடியும் என்று ஜனாதிபதி எண்ணியிருக்கலாம் என்றும் முன்னாள் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது ஜனாதிபதி நாட்டில் இல்லாததனால் , தான் அவரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு நாட்டின் நிலைமை தொடர்பில் தெரிவித்து உடனடியாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கூறி அதற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டதாகவும முன்னாள் பிரதமர் ரணில் தெரிவித்தார்.
அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்: அடிப்படைவாதிகள் தங்களது எண்ணங்களை வெற்றி கொள்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவே கிடைக்கப்பெற்றுள்ள சாட்சியங்களுக்கமைய தெரியவருகிறது, இந்நிலையில் ஸஹ்ரான் தனது அடிப்படைவாத கருத்துகளை இணைய வாயிலாக பகிர்ந்தளிக்கும் போது உங்களால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை?

முன்னாள் பிரதமர்: அது உரிய தரப்பினரிடம் கேட்கவேண்டிய வினா, என்னால் அதற்குg் பதிலளிக்க முடியாது. எமது உளவுப் பிரிவுக்கும் அவர்களுடன் தொடர்பு இருந்தது. அவர்களிடமிருந்து தகவல்களும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

அடிப்படைவாதத்தை ஒழிப்பதற்காக முஸ்லிம் தலைவர்களின் பங்களிப்பு தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதுடன் , முஸ்லிம் அரசியல் தலைவர்களிடமிருந்தும் மதத்தலைவர்களிடமிருந்தும் ஒத்துழைப்புகள் கிடைக்கப் பெற்றதாக முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

தாக்குதலுக்கு பின்னர் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடினீர்களா என்று இதன்போது ஆணைக்குழு கேள்வி எழுப்பியது.

ஆம், பேசினேன். இந்தத் தாக்குதல் தொடர்பில் எமது உளவுப் பிரிவினருக்கு பல தடவை தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதன் ஊடாக அறிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் அது தொடர்பில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட வில்லை என்று தெரியவந்தது.

விளையாட்டுத் தனமாக இத்தகைய விடயங்களை பொறுப்புவாய்ந்த அரசு ஒன்று கூறாது, ஏன் என்னறால் அது தொடர்பான பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டும். அதனால் தான் அது தொடர்பில் கவனம் செலுக்க வேண்டியது அவசியமாகும்.என்றார்.

எவ்வளவு தகவல்களை வழங்கியும் இழப்புகளை தடுக்க முடியாமல் போனது தொடர்பில் தான் கவலையடைவதாக இந்திய உயர்ஸ்தானிகர் அந்த சந்திப்பின் கூறியதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Previous articleரிஷாத் பதியுதீனைக் கைது செய்ய வேண்டாம் என்று இங்கு நாம் குரல் கொடுக்க முடியாது.
Next articleஅவதானம்..! வத்தளையில் 23 கொரோனா தொற்றாளர்கள்