500 மில்லியன் டொலர் சீன கடன் விவகாரம் :  ரணில் தலைமையில் கூடிய குழு எச்சரிக்கை

உத்தேச 500 மில்லியன் அமெரிக்க டொலர் சீன கடன் விவகாரம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும். மறுப்புறம் குவாட் என்ற கட்டமைப்பில் இந்து – பசுபிக் பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கைளை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுப்பட்டு வரும் நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை அனைத்துலகின் கவதானத்திற்கு உட்பட்டுள்ளதாக  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சி உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை கட்சியின்முக்கிய உறுப்பினர்கள், வெளிவிவகார மற்றும் சட்ட ஆலோசகர்கள் போன்ற தரப்பினரை சிறிகொத்தாவில் சந்தித்து கலந்துரையாடினார். அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க செல்லவிருந்த நிலையில் வழமையான இந்த சந்திப்பு சற்று அவசரமாகவே நடைப்பெற்றது.

கட்சி உறுப்பினர்கள் பலரும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து கூறிய இரகசிய சாட்சியம் தொடர்பில் ஆர்வமாக வினாவிய போதிலும், இரகசியம் இரகசியமாகவே இருக்கட்டும் என்று நகைப்புடன் கூறி முடித்து விட்டார்.

20 ஆவது திருத்தம் தொடர்பிலான  உயர் நீதிமன்றின் வியாக்கியானம் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் மாத்திரமே அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகங்களுக்கு கசிந்தமை சர்ச்சையை ஏற்படுத்திகிறது. பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் குறித்த ஆவணமும் கசிந்துள்ள ஆவணமும் ஒன்றெனில் கருத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பது ரணில் விக்கிரமசிங்கவின்  கருத்தாகியது.

மேலும் இதன் போது சீனாவின் தூதுக்குழு வருகை தந்தமை  மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலரின் இலங்கை விஜயம் உட்பட பல விடயங்கள் குறித்தும் பரந்தளவில் கலந்தாலோசிக்கப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சீனாசின் உயர் மட்டக்குழு இலங்கைக்கு விஜயம் செய்தது. அது மாத்திரன்றி 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை சுமத்தும் நோக்கில் 16.5 பில்லியன் ரூபாவையும்நிவாரண உதவியாக வழங்கியுள்ளது. பெரும் கடன் சுமைக்குள் இலங்கையை தள்ளுவதாகவே நிலை காணப்படுகின்றது.

இதனால் சீன கடன் தவணை மற்றும் வட்டி போன்றவற்றை செலுத்துவதற்கு பெரும் தொகை தேவைப்படும்.  இந்த நிலையானது தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டிற்கு மோசமானதொரு அச்சுறுத்தலான நிலைமையும் ஏற்படும்.

மறுப்புறம் அமெரிக்கா , இந்தியா , ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் குவாட் என்ற கட்டமைப்பை உருவாக்கி இராணுவ நடவடிக்கைளை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளன. இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் இவ்வாறானதொரு முயற்சிகள் இடம்பெறுகையில் அமெரிக்க இராஜாங்க தினைக்கள செயலர் மைக் பொம்மியோ அவசர விஜயமொன்றை மேற்கொண்டு இம் மாத இறுதியில் இலங்கை வருகின்றார்.

இந்த விடயமானது பிராந்திய அரசியலில் முக்கியத்துவம் பெறுவதுடன் அனைத்துலகின் அவதானத்திற்கு உட்பட்டுள்ளது. மில்லேனியம் சவால் ஒப்பந்தம் குறித்து இலங்கையுடன் தீர்க்கமான முடிவுகள் எடுப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக இதன் போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

SOURCEவீரகேசரி பத்திரிகை