டக்டொக் உள்ளிட்ட சீன செயலிகள் குறித்து எச்சரிக்கிறது அமெரிக்கா

இந்தியா போன்ற நாடுகளில் டிக்டொக்,  உள்ளிட்ட கையடக்கத் தொலைபேசி செயலிகளுக்கு தடை விதிப்பதானது சீனாவின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு பெரும் இழப்பாகும் என்று வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரியொருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சீனாவின் டிக்டோக், வீ சட் போன்ற செயலிகளின் பயன்பாடுகள் குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் மிகவும் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரோபர்ட் ஓ பிரையன் வெளிநாட்டு செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா முன்னதாகவே இந்த பயன்பாடுகளை தடைசெய்துள்ளது. அதுபோல் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இவற்றை தடைசெய்து விட்டால் சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது மிகப்பெரிய உளவு மற்றும் கண்காணிப்பு சாதனத்தை இழந்து விடும்.

டிக்டொக்கில், முகத்தை அடையாளம் காணும் வசதி உள்ளது. இதன்  மூலம்  தனிப்பட்ட நபரின் தரவுகள் மற்றும் உறவினர்களின் தரவுகள் திருடப்படுகின்றன.

நண்பர்கள் யார், பெற்றோர் யார் என்பதை இந்த டிக்டொக் செலயில் மூலம் சீனா அறிந்து கொள்கின்றது. இதன் மூலம் நபர் ஒருவரின்  உறவுகளை அவர்களால் வரைபடமாக்க முடியும்.

ட்ரம்ப் நிர்வாகம், டிக்டொக்கை மட்டுமல்ல, வீ செட் மற்றும் வேறு சில சீன பயன்பாடுகள்தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தியுள்ளது, ஏனென்றால் சீனர்கள் அமெரிக்காவின் தனிப்பட்ட தரவின் தீவிர நுகர்வோர் என்றும் ஓ பிரையன் மேலும் தெரிவித்தார்.