பல் துலக்கும் தூரிகைகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கியது ஏன்? தொடர்…

றிஸ்வி முப்தி: உண்மையில் நான் ஏற்கனவே கூறியதை போல, பன்றியின் அனைத்தும் முஸ்லிம்களுக்கு ஹராம். பல் துலக்கும் தூரிகைகளில் பன்றியின் மயிர்கள் பயன்படுத்தப்படுவதாக அறிகின்றோம். அப்படியான சந்தர்ப்பங்களில் எமக்கு அவ்வாறான பொருட்களுக்கும் ஹலால் சான்றிதழ் தேவை. எவ்வாறாயினும் ஜம்இய்யதுல் உலமா சபை ஹலால் சான்றிதழ் வழங்கும் போது பற் தூரிகைகளுக்கு வழங்கியதா என ஞாபகம் இல்லை. அதனை தேடிப்பார்த்து கூறுகின்றேன்.

அரச சட்டவாதி : சுமார் 1400 வருடங்கள் வரை முஸ்லிம்கள் இந்நாட்டில் வாழ்கின்றனர். ஏனைய மக்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்த முஸ்லிம்களுக்கு திடீரென ஹலால் சான்றிதழ் தேவைப்பட்டதன் பின்னணி என்ன?

றிஸ்வி முப்தி: ஆம், 1977 ஆம் ஆண்டின் திறந்த பொருளாதார கொள்கையின் பின்னரேயே அதற்கான தேவை ஏற்பட்டது. அதுவரை உதாரணமாக எமக்கு இலங்கையில் எங்கு சென்றாலும் உடன் பழச்சாறினைப் பெறமுடிந்தது. எனினும் திறந்த பொருளாதார கொள்கையின் பின்னர் அனைத்தும் பதப்படுத்தப்பட்டவைகளையே நாம் பெறுகின்றோம். இவ்வாறு அவற்றை பதப்படுத்த மூன்று வகையான ஜெலடின்களை பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்று பன்றியில் இருந்து பெறப்படுகின்றது. பன்றியிலிருந்து பெறப்படும் ஜெலட்டின் கலந்தவை முஸ்லிம்களுக்கு ஹராம். எனவே தான் முஸ்லிம்களுக்கு ஹலால் சான்றிதழுக்கான அவசியம் உள்ளது. முஸ்லிம் நாடுகள் மட்டுமன்றி ஏனைய நாடுகள் கூட நுகர்வோரின் தேவையை கருதி ஹலால் சான்றிதழை கண்டிப்பாக அமுல் செய்கின்றன. உலகின் மிகப் பெரிய பௌத்த நாடாக கருதப்படும் தாய்லாந்திலேயே ஹலால் தொடர்பில் பல்கலைக்கழக பீடம் ஒன்றே உள்ளது. இலங்கையில் இருந்து தென் ஆபிரிக்காவுக்கு ( அங்கு 6 வீதம் மட்டுமே முஸ்லிம்கள் உள்ளனர்) தேங்காய் மா ஏற்றுமதி செய்ய முற்பட்ட போது அந்நாடு கண்டிப்பாக ஹலால் சான்றிதழை கோரியிருந்தமை எனக்கு ஞாபகம் உள்ளது.

அரச சட்டவாதி : இலங்கையில் முதன் முதலில் ஹலால் சான்றிதழ் எப்போது விநியோகிக்கப்பட்டது?

றிஸ்வி முப்தி: நான் நினைக்கின்றேன், 2000 ஆம் ஆண்டு முதல் ஹலால் சான்றிதழ் விநியோகிக்கப்பட்டது. அதுவும் பிரீமாவுக்கே அந்த சான்றிதழ் விநியோகிக்கப்பட்டது. பிரீமாவும், மெக்ஸிஸ் கோழி இறைச்சிக்கும் ஹலால் சான்றிதழ் தருமாறு அவர்களிடம் இருந்தே முதலில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த கோரிக்கைக்கு அமையவே அப்போது அந்த சான்றிதழ் அவ்விரு நிறுவங்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.

இந்நிலையில் சிரேஷ்ட அரச சட்ட வாதியால், கையளிக்கப்பட்ட சஞ்சிகை ஒன்றில் பிரசுரமான கட்டுரை ஒன்றின் மீது அவதானம் செலுத்திய அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, (தற்கொலை தாக்கு தல்கள் குறித்த அஷ்ஷெய்க் யூசுப் அல் கர்ளாவியின் கூற்று) அத்தகைய கூற்றுக்கள் இலங்கையின் சூழலுக்கு எந்த வகையிலும் பொருந்தாது எனவும், அந்த கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருக்கக் கூடாது எனவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போதான தொடர் சாட்சியத்தில், கடந்த 2006 ஆம் ஆண்டளவில் யுத்த காலத்தின் போது, எந்த வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பாதுகாப்புத் தரப்பினருக்கு உதவியது என்பதற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே சாட்சி என சுட்டிக்காட்டிய அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, மூதூர் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் கூட பாதுகாப்புத் தரப்புக்கு தமது பங்களிப்புக்களை வழங்கியதாக சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இலங்கையிலுள்ள இஸ்லாமிய அமைப்புக்கள் சில குறித்தும் விரிவாக விளக்கிய அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, உலமா சபையின் நிறைவேற்றுக் குழுவில் சூபி கொள்கைகளை பின்பற்றும் உலமாக்களே பெரும்பான்மையாக உள்ளதாக ஒவ்வொருவரின் பெயராக குறிப்பிட்டு விளக்கினார். காதியானிகள், காத்தான்குடியில் அப்துர் ரவூபின் குழுவினர், ஷீயாக்களை தவிர இலங்கையில் உள்ள ஏனைய அனைத்து முஸ்லிம்களும் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என இதன்போது அவர் விளக்கினார். அவர்கள் அனைவரையும் ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதித்துவம் செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்

அத்துடன் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் யாப்பினையும் ஆணைக் குழுவுக்கு அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி கையளித்தார்.

இதனையடுத்து மிக உணர்வுபூர்மவாக சாட்சியமளித்த அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, 2014 முதல் தேவையான தகவல்களை உரிய தரப்புக்களுடன் பகிர்ந்துகொண்டிருந்த நிலையில், குறித்த தாக்குதலை தடுத்து மக்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போனமை தொடர்பில் தான் மிகவும் கவலையடைவதாக குறிப்பிட்டார்.

அத்துடன் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ கடந்த 2013 ஆம் ஆண்டு 33 நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஆற்றிய உரையினை ஞாபகப்படுத்திய அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, அதில் குறிப்பிடப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதில் 2015 ஆம் ஆண்டின் பின்னர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை அவதானிப்பதாக கூறினார்.

இந்நிலையில் மத்ரஸாக்கள் தொடர்பிலும் விஷேடமாக விளக்கிய அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, அவை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவந்து ஒரு முறையான மேற்பார்வை செய்யப்படுவதை வரவேற்றார்.

இதனைவிட முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் தொடர்பில் தனது அதிருப்திகளை பதிவு செய்த அவர், அத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி அரசியல்மயப்படுத்தப்பட்டது என வர்ணித்தார். இந்நிலையில் ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியான அமைச்சுக்களை ஏற்படுத்தாது அனைத்தையும் ஒரே குடையின் கீழ் வைத்திருப்பது சிறந்தது எனவும், ஏனைய மதத்தவர்களுடன் இணைந்தே பணியாற்ற தாம் எதிர்பார்ப்பதாகவும் அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி சுட்டிக்காட்டினார். இந்நிலையில் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தியின் சாட்சியம் நாளை ஒக்டோபர் 10 திகதி மாலை 4.00 மணிக்கு மீண்டும் தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SOURCEவிடிவெள்ளி
Previous articleஜனாஸா – மல்வானஹின்னை, பரீதா உம்மா
Next articleபதிவு செய்யப்படாத சிம் அட்டைகளுக்கு இணைப்பு கிடையாது – இலங்கையில் புதிய கட்டுப்பாடு