இலங்கை தொடர்பாக அமெரிக்காவும் சீனாவும் இப்போது நேருக்கு நேர் மோதல்

அமெரிக்காவும் சீனாவும் இலங்கை தொடர்பாக இப்போது வெளிப்படையாகவும் உத்தியோகபூர்வமாகவும் மோத ஆரம்பித்திருக்கின்றன. தங்களுக்கு இடையிலான சர்ச்சையில் இலங்கைத்தீவை சிக்க வைப்பதனால் எழக்கூடிய எந்தவொரு ஐயுறவையும் சீனாவும் அமெரிக்காவும் பொருட்படுத்தவில்லை.

கொழும்பு ஆங்கில தினசரி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் மூலமாக அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. ரெப்லிற்ஸ் இந்த மோதலை ஆரம்பித்தார். தங்களது அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக சீனர்கள் இலங்கையை ஏமாற்றுவதாகவும் சீனாவிடம் இலங்கை அதன் சுயாதிபத்தியத்தை இழக்கும் ஆபத்து இருப்பதாகவும் அமெரிக்கத் தூதுவர் நேரடியாகவே கவலை வெளியிட்டார்.

கொழும்பிலுள்ள சீனத் தூதுரகம் உடனடியாகவே கடுமையான தொனியில் இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுமுறை பற்றி பாதகமான கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் இராஜதந்திர நியமங்களையும் நடைமுறைகளையும் அமெரிக்கத் தூதுவர் அலட்சியம் செய்து விட்டதாக அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. பல நாடுகளில் நேரடியான இராணுவ தலையீட்டின் மூலமாக அவற்றின் சுயாதிபத்தியத்தை அப்பட்டமாகவே அமெரிக்கா மீறுவதாக தூதரக அறிக்கை சாடியது. ஏனைய நாடுகளில் அப்பட்டமாக தலையீடுகளை செய்து கொண்டும் உலக வர்த்தக நிறுவனத்தின் விதிமுறைகளை மீறுவதுடன் ஒரு தலைபட்சமான தடைகளையும் விதித்துக்கொண்டு சுயாதிபத்தியத்தைப் பாதுகாப்பது குறித்து மற்றவர்களுக்குப் போதனை செய்யும் பழக்கத்தை கைவிடுமாறு சீனா அமெரிக்காவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த அறிக்கையை சீனத் தூதரகத்தின் அரசியல் பிரிவு தலைவரான லூ ஷொங் வெளியிட்டார்.

சுயாதிபத்தியத்தைக் கொண்ட ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு செய்வது ஒன்றும் ஆச்சரியத்திற்கு உரியது அல்ல என்கிற அதேவேளை, ஏனைய நாடுகளின் இராஜதந்திர உறவுகளை கட்;டுப்படுத்துவதற்கு அமெரிக்கா மேற்கொள்ளும் அருவருக்கத்தக்க முயற்சியைக் கண்டு பொதுமக்கள் திகைப்படைந்திருக்கிறார்கள். சுதந்திரமான நாடுகள் என்ற வகையில் சீனாவும் இலங்கையும் அவற்றின் சொந்த தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற வகையில் வெளிநாடுகளுடன் உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கு முழுமையான உரிமையைக் கொண்டிருக்கின்றன என்று சீனத் தூதரகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. “ இலங்கையும் சீனாவும் அவற்றுக்கிடையிலான உறவுகளை வளர்த்துக் கொள்வதில் கடைப்பிடித்து வந்திருக்கின்ற அணுகுமுறைகள் திரும்ப திரும்ப காலத்தின் சோதனைக்கு தாக்குப்பிடித்து வந்திருக்கின்றன. சீனாவுடனான தங்களது உறவுகள் குறித்து இலங்கை அரசாங்கமும் மக்களும் சுதந்திரமானதும் நேர்மையானதுமான மதிப்பீட்டைக் கொண்டிருக்கிறார்கள். சீன – இலங்கை உறவுகள்தொடர்பில் போதனை செய்வதற்கு அமெரிக்காவுக்கு அதிகாரமோ கடப்பாடோ கிடையாது. அத்தகைய அப்பட்டமான மேலாதிக்கவாதமும் அதிகார அரசியலும் சீன மக்களினால் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது.  இலங்கையர்களும் அதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வஞ்சகத்தனமான தராதரங்களைப் பிரயோகிப்பதையும் மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் அமெரிக்கா அந்த வழக்கத்தைக் கைவிட வேண்டுமென்று சீனா அமெரிக்காவிற்கு உறுதியான முறையில் யோசனை கூறுவதாகவும் சீனர்களின் அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.

“ அத்தகைய கேலிக்குரியதும் பாசாங்குத்தனமானதுமான நடத்தைகள் ஏற்கனவே சர்வதேச அரங்கில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவின் மதிப்பை மேலும் சேதப்படுத்துவதில் மாத்திரமே முடியும்.” என்று எச்சரிக்கை செய்திருக்கும் சீனத் தூதரகம், அமெரிக்காவின் மதிப்புக்கு ஏற்பட்டிருக்கும் சேதத்தை சீர் செய்வதற்கு வாஷிங்டன் எடுக்க வேண்டிய “நான்கு எளிமையான” நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியிருக்கிறது. (1) உலகில் கொவிட் – 19 கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப்  பொறுத்தவரை அதியுயர்ந்த எண்ணிக்கையை அமெரிக்கா கொண்டிருக்கின்ற அதேவேளை, அந்த தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஏனைய நாடுகளின் செயற்பாடுகளை அவதூறு செய்யக்கூடாது, (2) உலக வர்த்தக நிறுவனத்தின் அறிவுறுத்தல்களை மீறுகின்ற அதேவேளை, சுதந்திர வர்த்தகத்தின் பாதுகாவலனாக பாசாங்கு செய்யக்கூடாது., (3) சர்ச்சைக்குரிய எம். சி. சி உடன்படிக்கையின் உண்மைத் தன்மையை மூடி மறைத்துக்கொண்டு வெளிப்படைத் தன்மையின் பதாதையை உயர்த்திப் பிடிக்கக்கூடாது, (4) வெளிநாடுகளில் விமான குண்டுத் தாக்குதல்களை நடத்திக்கொண்டு, இராணுவ தளங்களை வைத்துக்கொண்டு ஒரு தலைபட்சமானத் தடைகளை விதிக்கின்ற அதேவேளை, சுயாதிபத்தியத்தைப் பற்றிய பிரச்சினையைக் கிளப்புவதன் மூலமாக மற்றைய நாடுகளின் வழமையான இருதரப்பு ஒப்பந்தங்களைக் களங்கப்படுத்தக்கூடாது. – இவையே அமெரிக்காவுக்கு சீனா கூறும் எளிமையான ஆலோசனைகளாகும்.

Read:  மீண்டும் ரணில் !!

இலங்கைக்கு அமெரிக்காவின் ஆலோசனை

முன்னதாக அமெரிக்கத் தூதுவர் ரெப்லிற்ஸ் ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இலங்கையுடனான சீனாவின் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து சந்தேகம் கிளப்பினார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக செயற்பாடுகளின் நலனுக்காக சுதந்திர வர்த்தகத்தின் உலகளாவிய தராதரங்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் நேர்மையான முதலீட்டு சூழ்நிலையை ஏற்படுத்துமாறும் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தினார்.

நாடுகளுக்கிடையிலான கூட்டுப்பங்காண்மையும் தோழமையும் பரஸ்பர நலன்களுக்கு உரியவையாகவம் ஒளிவு மறைவற்றவையாகவும் திறந்தவையாகவும் இருக்க வேண்டுமென்று அமெரிக்கா நம்புவதாக குறிப்பிட்ட ரெப்லிற்ஸ் சீனாவுடனான இலங்கையின் உறவுமுறை அத்தகைய விழுமியங்களைக் கொண்டதாக இருந்தால் அதனை அமெரிக்கா உற்சாகப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

“  மற்றைய நாடுகளுடனான உறவுகளைப் பொறுத்தவரை இலங்கை பாதிக்கக்கூடிய நிலையில் இருக்கக்கூடாதென்பதே எமது அக்கறை. நிலைபேறானதும் சுற்றுச்சூழலுக்கு நேசமானதும் கட்டுப்படியாகக் கூடியதுமான விளைவுகளைக் கொண்டுவரக் கூடிய சிறந்த ஒப்பந்தங்கள் குறித்து இலங்கையினால் பேச்சுவார்த்தை நடத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.” என்று அமெரிக்கத் தூதுவர் கூறியிருந்தார். ‘ மண்டலமும் பாதையும்’ செயற்திட்டத்தின் கீழான 60 இற்கும் அதிகமான திட்டங்கள் சீனக் கம்பனிகளுக்கே வழங்கப்பட்டிருப்பதாகவும் அவை தொடர்பான ஏலச்செயல்முறைகள் தெளிவற்றவையாக இருப்பதாகவும் 2019 உலக வங்கி ஆய்வொன்றில் கூறப்பட்டிருப்பதாக ரெப்லிற்ஸ் சுட்டிக்காட்டினார்.

“ மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் கீழான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் அவற்றை சிறப்பான முறையில் நடைமுறைப் படுத்தக்கூடிய நிலையிலிருக்கும் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படக்கூடிய சாத்தியத்தை அதிகரிப்பதற்கான பொதுக்கொள்வனவு நடைமுறைகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும்” என்று உலக வங்கி கேட்டிருக்கிறது. சீனாவிடமிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் 50 கடனுதவிகள் மிகவும் உயர்ந்த வட்டிவீதங்களைக் கொண்டிருப்பதாக இலங்கையின் ஆய்வு நிறுவனமான ‘வெரைற் றிசேர்ச்’ கூறியிருக்கிறது. மேலும், கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் நோக்குகையில் சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடனுதவிகளில் ஒன்றைத் தவிர சகலதும் நூறு சதவீத நிபந்தனைக்கு உட்பட்டவையாக இருக்கின்றன. அதாவது, ஒப்பந்தங்களும் ஏலங்களும் சீன ஒப்பந்தக்காரர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்று கடன் நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக இத்தகைய திட்டங்களுக்காகப் போட்டி போடுவதில் இலங்கையைச் சேர்ந்த மற்றும் சர்வதேச நிறுவனங்களின் ஆற்றல் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.  நேர்மையான போட்டி விலைகளைக் குறைக்கும் என்பதுடன் சிறந்த தரத்தையும் உறுதிப்படுத்தும்” என்றும் அமெரிக்கத் தூதுவர் கூறியிருந்தார்.

Read:  மீண்டும் ரணில் !!

இலங்கை ஒரு சுயாதிபத்தியமுடைய நாடு என்ற வகையில் அது மற்றைய நாடுகளுடன் கொண்டிருக்கக்கூடிய கூட்டுப்பங்காண்மையின் தரம் குறித்து அறிவுறுத்துவது அமெரிக்காவிற்கு உரியதல்ல என்று கூறிய தூதுவர்,  கொடுக்கல்வாங்கல்கள் ஒளிவுமறைவு அற்றவையாகவும் செலவுச் சுருக்கமானவையாகவும் உள்நாட்டு மக்களுக்கு தொழில் வாய்ப்புகள் மற்றும் ஏனைய பொருள்வள பயன்களையும் உருவாக்குவதாகவும் இருந்தால் அது நாடுகளுக்கு பயனுடையதாக இருக்குமென்று அமெரிக்கா நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையினதும் அமெரிக்காவினதும் நலன்களுக்காக சுதந்திர வர்த்தகத்தின் உலக தராதரங்கள் இருக்க வேண்டியதும் நேர்மையான முதலீட்டுச் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டியது முக்கியமானது என்றும் கூறினார்.  

உலகளாவிய அமெரிக்க பிரசாரத்தின் பகுதி

நேர்காணலில் ரெப்லிற்ஸ் கூறியதெல்லாம் எந்தவிதமான விதிமுறைகளுக்கும் நியமங்களுக்கும் கட்டுப்படாமல் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்கின்ற உலகளாவிய பிரசாரத்தின் ஒரு பகுதியாகும். இந்து சமுத்திரத்தில் இலங்கையின் அமைவிடத்திற்கு இருக்கின்ற கேந்திர முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் சீனாவுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடுப்பதற்கான அரங்காக அமெரிக்கா, இலங்கையைத் தெரிவு செய்தது ஒன்றும் ஆச்சரியத்திற்கு உரியதல்ல. இந்து சமுத்திர பிராந்தியத்தில்  சீனாவின் பொருளாதார விஸ்தரிப்பையம் இராணுவ பேராவலையம் கட்டுப்படுத்துவதற்கு ‘குவாட்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய மூலோபாய கூட்டு ஒன்றை அமெரிக்கா அமைத்திருக்கிறது. இலங்கை ஒரு ஆதரவானதும் முக்கியத்துவமானதுமான பங்கை வகிக்காத பட்சத்தில் குவாட்டினால் எந்த பிரயோசனமும் இருக்கப்போவதில்லை.

அதனால் தான் அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்புத் துறைமுகத்திலுள்ள பிரதான கொள்கலன் முனையம் மற்றும் இலங்கையின் சகல உட்கட்டமைப்புத் திட்டங்கள் மீது சீனா கொண்டிருக்கும்  பிடி தொடர்பில் அமெரிக்கா கவலை கொண்டிருக்கிறது. சீனாவிடமிருந்து பெற்ற பாரிய கடன்களை திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் இலங்கை பெய்ஜிங்கின் பாதுகாப்பு பொறுப்பின் கீழ் வந்து விடுமென்று அமெரிக்கா அஞ்சுகிறது. ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியதைப் போன்று சீனாவின் உதவிகள் பெரிதும் தேவைப்படுகின்ற உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு தேவைப்படுகின்றன என்பதும் இந்த கட்டமைப்புக்கள் பொருளாதார நோக்கங்களுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுவதற்காக உருவாக்கப்படுகின்றது என்பதுமே இலங்கை இரசாங்கத்தின் வாதமாக இருக்கிறது. பெரிய வல்லரசுகளின் போட்டா போட்டிக்கான ஒரு களமாக மாறுவதை இலங்கை விரும்பவில்லை. சர்வதேச சட்டங்களினால் ஆளப்படுகின்ற ஒரு சமாதான வலயமாக இந்து சமுத்திரம் இருப்பதே இலங்கையின் விருப்பம் என்பதை ஜனாதிபதி ராஜபக்ஷ ஏற்கனவே தெரியப்படுத்தியும் இருக்கிறார்.

Read:  மீண்டும் ரணில் !!

ஆனால், அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் வலுக்குன்றி வருகின்ற அதேவேளை, கொவிட் 19 இற்குப் பின்னரும் கூட பொருளாதார ரீதியில் தொடர்ந்து சீனா முன்னேறி வருகின்ற நிலையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனர்களின் பொருளாதாரா முன்னேற்றங்களை அவற்றால் நடுக்கத்துடன் பார்க்காமல் இருக்க முடியவில்லை. சீனா கொவிட் 19 ஐ உள்நாட்டில் கட்டுப்படுத்திய பிறகு பல ஆயிரம் கோடி டொலர்கள் செலவிலான ‘மண்டலமும் பாதையும்’ செயற்திட்டத்தின் கீழ் பிரமாண்டமான உட்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. அதனால், அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் சீனா மீதான பொருளாதாரத் தடையுடன் கூடிய தாக்குதல்களைத் தொடரும்.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் இந்திய அரசியல் ஆய்வாளரான இஷான் தரூர் 2020 ஜூலை 24 எழுதிய கட்டுரை ஒன்றில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கை உலகளாவிய மார்க்சிய மேலாதிக்கத்தை நோக்கமாகக் கொண்ட வங்குரோத்தான சர்வாதிபத்திய கோட்பாடொன்றில் உண்மையாக நம்பிக்கை வைத்திருப்பவர் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ வர்ணித்ததாக தரூர் எழுதியிருக்கிறார். உலக ஒழுங்கு முறையை தனது நலன்களுக்கு ஏற்றவாறு சூழ்ச்சித்தனமாகக் கட்டுப்படுத்துவதற்கும் மேலும் ஆதிக்கம் செலுத்துவதற்கும் சீனா முன்னெடுத்து வருகின்ற வியூகங்களையும் செயற்பாடுகளையும் தடுத்து கேள்வி கேட்காமல் பயந்தாங்கொள்ளிப் பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பதாக அமெரிக்காவிலும் மேற்குலக நாடுகளிலும் உள்ளவர்களை பொம்பியோ கடுமையாகச் சாடினார்.

சீன அரசாங்கத்;தை அலட்சியம் செய்யுமாறும் அந்த அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு சீன மக்களுடன் சேர்ந்து செயற்படுமாறும் பொம்பியோ நேரடியாகவே அறைகூவல் விடுத்தார். எந்தவொரு வெளிநாட்டு எதிரியையும் விட சீன மக்களின் நேர்மையான அபிப்பிராயங்களுக்குத் தான் சீன கம்யூனிஸ்ட் கட்சி கூடுதலாகப் பயப்படுகிறது என்றும் பொம்பியோ கூறினார். ஆனால், தற்போது கடைப்பிடிக்கின்ற பாதையில் இருக்கக்கூடிய ஆபத்துக்களை டொனால்ட் ட்ரம்பும் அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுகின்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனும் கணக்கிலெடுக்க வேண்டியிருக்கும் என்று தரூர் எழுதியிருக்கிறார்.

இந்தக் கருத்தைப் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வு பேராசிரியராக இருக்கும் ஜீ டேலீயும் ஆதரித்திருக்கிறார். “ இரு தரப்பினருமே ஓரளவு கோட்பாட்டுப் பணிவைக் கடைப்பிடிக்க வேண்டும். சகவாழ்வை முன்னெடுப்பதற்காக ஒருவர் மற்றவராக மாற வேண்டியதில்லை. உண்மையில் மனிதகுல வரலாற்றின் பெரும் பகுதியில் பல்வேறு போட்டித் தன்மையான கோட்பாடுகள் இருந்து வந்தது ஒரு வழமையான நிலைவரமே ஆகும். உலகளாவிய சிந்தனைச் சந்தையில் ஒரு கோட்பாட்டின் மேலாதிக்கம் ஒரு விதி என்பதை விட விதிவிலக்கானது என்றே கூற வேண்டும்” என்று அவர் எழுதியிருக்கிறார். (டெய்லி எக்ஸ்பிரஸ்) 

SOURCEவீரகேசரி பத்திரிகை (பி.கே. பாலச்சந்திரன்)