அவதான நிலையில் கொழும்பு:  புதிய கொரோனா தொற்றாளர்களின் உடலில் வைரஸ் செயற்பாடு தீவிரம்

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொவிட்-19 தொற்று ஏற்பட்ட நிலையில் இனங்காணப்பட்ட பெண் முதலாவது தொற்றாளர் அல்ல. முதல் தொற்றாளர் யார் , எவ்வாறு தொழிற்சாலையிலுள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பதை இனங்காண்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

தற்போது இனங்காணப்படும் நோயாளர்களில் வைரஸின் செயற்பாடுகள் தீவிரமாகக் காணப்படுகின்றமையால் தொற்று பரவக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. இந்த கொத்தணி பரவலால் கொழும்பு மாவட்டத்திற்கு நேரடி தொடர்பு இல்லை என்ற போதிலும் ஆடை தொழிற்சாலையுடன் நேரடி தொடர்புகளைப் பேணிய அலுவலகம் கொள்ளுபிட்டியில் உள்ளதால் அவதான நிலைமை காணப்படுவதாகவும் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

முதலாவது தொற்றாளர் அல்ல

கேள்வி : இந்தியாவிலிருந்து குறித்த ஆடை தொழிற்சாலைக்கு வந்த இருவரால் தான் தொற்று ஏற்பட்டது என்று கூறப்படுகிறதே ?

பதில் : எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் முதலாவதாக இனங்காணப்பட்ட பெண் முதலாவது தொற்றாளர் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. காரணம் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து குறித்த ஆடை தொழிற்சாலையில் பெரும்பாலனவர்களுக்கு தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளது.

இந்த பெண்ணுக்கு செப்டெம்பர் 28 ஆம் திகதியே சுகயீனம் ஏற்பட்டுள்ளது. எனவே இவர் முதலாவது தொற்றாளர் அல்ல. இவருக்கு முன்னர் தொற்று ஏற்பட்டவர்கள் அங்கு இருந்துள்ளார்கள். 800 பேரில் முதலாவது தொற்றாளர் யார் என்று இனங்காண்பது கடினமாகும். இந்நிலையில் முதலாவது தொற்றாளரையும் தொழிற்சாலையிலுள்ளவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதை இனங்காண்பதிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

12 மாவட்டங்களில் தொற்றாளர்கள்

மினுவாங்கொட – ஆடை தொழிற்சாலையில் தொழில்புரிபவர்கள் சிலர் விடுமுறையில் சென்றுள்ளனர். அவர்களில் அம்பாந்தோட்டை, பதுளை, காலி, குருணாகல், மொனராகலை, புத்தளம், கேகாலை, களுத்துறை, கண்டி, மாத்தறை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலுள்ளோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து மக்கள் வீண் அச்சமடைய தேவையில்லை. ஆரம்பத்தைப் போன்று அடிப்படை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றினால் ஆபத்துக்களை குறைத்துக் கொள்ள முடியும்.

கொள்ளுபிட்டி அலுவலகம்

மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் வைரஸ் தொற்றினால் கொழும்பு மாவட்டத்திற்கு நேரடி பாதிப்பு இல்லை. இதே போன்று எதிர்பாராத வகையில் தொற்று ஏற்படுமாயின் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளல் அவசியமாகும். இதனால் பி.சி.ஆர். பரிசோதனைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

எனினும் கொள்ளுபிட்டியில் உள்ள அலுவலகமொன்றுக்கும் குறித்த ஆடை தொழிற்சாலைக்கும் நேரடி தொடர்புகள் இருந்துள்ளன. குறித்த அலுவலகத்திலுள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அறிகுறியற்ற தொற்றாளர்கள்

குறித்த ஆடை தொழிற்சாலையில் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற போதிலும் அவர்களில் பெருமளவானோருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை. இருந்த போதிலும் அவர்களது உடலில் வைரஸின் செயற்பாடு தீவிரமாகவுள்ளது. தொற்று ஏற்பட்ட ஆரம்பகட்டத்திலேயே இனங்காணப்பட்டமையே இதற்கான காரணமாகும்.

அவதான நிலையில் குடும்பத்தினர்

வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் முதலாவதாக இனங்காணப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆரம்ப கட்டத்திலேயே பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டமையால் அவர்களிடம் வைரஸ் தன்மை வெளிப்படாமல் இருக்கலாம். அதனாலேயே அவர்களது பரிசோதனை முடிவில் தொற்று ஏற்படவில்லை என்று கிடைக்கப் பெற்றுள்ளது.

எனினும் தொடர்ந்தும் அவர்களை தனிமைப்படுத்தி 10 நாட்களுக்குள் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும். அடுத்த பரிசோதனை முடிவில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் முடிவு கிடைக்கப் பெறலாம் , மாறாக ஏற்படவில்லை என்ற முடிவும் கிடைக்கப் பெறலாம். முடிவுகள் எவ்வாறிருப்பினும் அதுவரையில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

மாணவர்கள்

ஆடை தொழிற்சாலையில் முதலாவதாக இனங்காணப்பட்ட பெண்ணுடைய மகள் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவருடன் கற்ற 160 மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்ற முடிவு கிடைத்துள்ளது. எவ்வாறிருப்பினும் பாதுகாப்பு கருதி இவர்களும் தொடர்ந்தும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது வரையில் இனங்காணப்பட்ட நோயாளர்கள் அம்பாந்தோட்டை, தெல்தெனிய, இரணவில மற்றும் கொழும்பு ஐ.டி.எச். உள்ளிட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வரையில் யாரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை. அத்தோடு நாட்டில் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு பரந்தளவில் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை சமூக பரவல் என்று கூற முடியாது. எனினும் சமூகப் பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது என்றார்.

SOURCEவீரகேசரி பத்திரிகை (எம்.மனோசித்ரா)
Previous articleஐ.சி.பி.டி, கெம்பஸ் மாணவனுக்கு கொரோனா தொற்று
Next articleபரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் ஆலோசனைகள்