கொரோனா தாக்கத்தை உணராமல் பரீட்சை நடத்துவது விசப்பரீட்சைக்கு ஒப்பானது: தமிழர் ஆசிரியர் சங்கம் 

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் பயங்கரமானது எனவும், பல மாவட்டங்கள் தனிமைப்படுத்தலோடு முடங்கியுள்ளதெனவும், சில மாகாணங்களில் சகல கல்வி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன எனவும், தொற்றானது இன்னும் பல பிரதேசங்களுக்கு பரவும் ஆபத்து உள்ளதெனவும், ஊடகங்களில் பிரதான செய்திகளாக வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையும், உயர்தர பரீட்சைகளும் போட்டிப் பரீட்சைகளே. நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வியில் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

மேல்நிலை வர்க்கத்தினரைமாத்திரம் வைத்துக்கொண்டு கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது. நாட்டில் கொரோனா தொற்றானது சமூகத் தொற்றாக இல்லாத நிலையில் பரீட்சைகளை பிற்போட்டு, சமூகத்தொற்றாக உருவெடுத்துள்ள நிலையில் பரீட்சைகளை நடாத்தலாமா?

சில மாகாணங்களில் பிரத்தியேக வகுப்புகளும், தனியார் வகுப்புகளும் நடைபெறுகின்றன. சில மாகாணங்களில் எந்த வகுப்புகளும் நடைபெறவில்லை. அதிலும் பின்தங்கிய பிரதேசங்களில் இணையவழி கற்கைக்கான வசதிகளும் இல்லை. வசதி படைத்தவர்கள் பாதுகாப்பாகவும் பிற வசதிகளுடனும் தமது பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்கின்றனர். இது கல்வியில் சமமின்மையை வெளிப்படுத்துகின்றது.

கம்பஹாவில் உருவெடுத்த கொரோனா சமூகத் தொற்றானது நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவத்தொடங்கியுள்ளதாகவும் அதற்காக எல்லோரையும் சுகாதார பாதுகாப்போடு நடந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி சுகாதாரத்துறைசார்ந்த தொற்று நோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சுடத்சமரவீர இலங்கை முழுவதும் இந்நோய் பரவும் ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளார்.

இத்தகைய நிலையில் தமது பிள்ளைகளின் உயிர்பாதுகாப்பிலேயே பெற்றோர் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பரீட்சைகளை காலத்துக்குக் காலம் நடாத்தி மாணவர்களை அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு செல்வதே ஆசிரியர்களின் இலக்கு. அவர்களுக்கு பரீட்சைகளை நடாத்தாமல் தொடர்ந்தும் அதே நிலைகளில் வைத்திருப்பதனை எந்தவொரு ஆசிரியரும் விரும்பியதில்லை.

Read:  மீண்டும் ரணில் !!

ஆனாலும் தற்போதைய நிலையில் சுகாதாரத் துறையினர் ஒரு அறிவித்தலையும், பாதுகாப்புத் துறையினர் இன்னொரு அறிவித்தலையும், கல்வித் துறையினர் இன்னொரு அறிவித்தலையும் விட முடியுமா?

இதனை சுகாதாரத்துறை சார்ந்தவர்கள் எவ்வாறு நோக்குகின்றனர் என கேள்வி எழுப்பியுள்ளது.

SOURCE(எம்.நியூட்டன்) வீரகேசரி