கொரோனா பரிசோதனையில் குழந்தைக்கு நேர்ந்த அவலம்

சவுதி அரேபியாவில் கொரோனா பரிசோதனையின் போது குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில், அதிக உடல் வெப்பநிலை காரணமாகக் குழந்தை ஒன்றை அவரின் பெற்றோர்கள் ஷாக்ரா பொது வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று குழந்தைக்கு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய மருத்துவர்கள் பரிசோதனையை மேற்கொண்டனர்.

அப்போது, பரிசோதனையில் பயன்படுத்தப்படும் உபகரணத்தை குழந்தையின் மூக்கில் விடும்போது உபகரணம்  உடைந்துள்ளது.

இந்தக் குச்சியை வெளியில் எடுக்க குழந்தைக்கு மயக்க மருந்தை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். எனினும், குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தை தனது சுயநினைவையும் இழந்துள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 24 மணி நேரத்துக்குப் பிறகு குழந்தை உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தந்தையான வைத்தியசபாலையில் நடந்த சம்பவத்தை விவரிக்கும்போது,

குழந்தைக்கு மயக்க மருந்தைக் கொடுக்க அனுமதி மறுத்ததாகக் கூறியுள்ளார். ஆனால், மருத்துவர்கள் இதை வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார். அறுவைசிகிச்சை முடிந்த பிறகு, குழந்தைநல மருத்துவர் குழந்தையைப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால், வைத்தியசாலை நிர்வாகம் சிறப்பு மருத்துவர் விடுப்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. சுவாசக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாகக் குழந்தை சுயநினைவை இழந்ததாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைவதாக உணர்ந்த அவர் குழந்தையை சிறப்பு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல கேட்டுக்கொண்டார். அனுமதி கிடைத்தும், ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமாகியுள்ளது.

இதனிடையே, குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் மரணம் மற்றும் நிலைமையை தவறாக கையாண்டது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குழந்தையின் தந்தை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் விசாரணைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தை மரணம் தொடர்பாக தந்தைக்கு அமைச்சர் தௌபிக் அல் ரபியா இரங்கலும் தெரிவித்துள்ளார்.