மர்மம் நீடிக்கிறது : ஆடைத்தொழிற்சாலை பெண் முதலாவது கொரோனா தொற்றாளர் அல்ல – வெளியானது புதிய தகவல்

கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பஹா வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட  மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரிந்த பெண் ஊழியர் நடைமுறையிலுள்ள கொரோனா கொத்தணி பரவலுக்கான மூலம் அல்ல.

ஆனால் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று கண்டறிவதற்கு முன்பு வேறு கொரோானா தொற்றாளர்கள் இருந்திருக்கலாம் என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர் ,

தொழிற்சாலை ஊழியர்களின் விவரங்களை ஆராய்ந்தபோது, முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் ஊழியருக்கு செப்டம்பர் 28 ஆம் திகதி அன்று பாரிய அளவில் நோய் அறிகுறிகள் காணப்படவில்லை. 20 ஆம் திகதி முதல் சில தொழிற்சாலை  ஊழியர்களுக்கு சுவாச நோய்கள் இருப்பதை நாங்கள் அவதானித்தோம்  ”என்றார்.

இந்த சிறியளவிலான அறிகுறிகள் பெண் ஊழியருக்கு செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி அன்று தென்பட்டுள்ளது, பின்னர் அவர் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

இந் நிலையில் கொரோனா கொத்தணி பரவல் எவ்வாறு உருவானது, அந்த பெண்ணுக்கு எவ்வாறு வைரஸ் பாதித்தது என்பதை கண்டறிய சுகாதார தரப்பினரும் பாதுகாப்புத் தரப்பினரும் விசாரணைகளை நடாத்தி வருவதாக  சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

“அது எப்படி நடந்தது என்பதை நாங்கள் கண்டுபிடிக்கலாம் அல்லது கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலைக்கு வெளிநாட்டினர் விஜயம் செய்ததாக பரவி வரும் வதந்தி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read:  மீண்டும் ரணில் !!
SOURCEவீரகேசரி பத்திரிகை