முஸ்லிம்களை தமிழர்களிடமிருந்து பிரித்து தனியான தரப்பாக அடையாளப்படுத்தும் தேவை உளவுப் பிரிவினருக்கு இருந்தது!

தமிழர் தரப்புடன் இணைந்ததாக இருந்த முஸ்லிம்களை தனியான இனத்துவ அடையாளத்தைக் கொண்ட தரப்பாக பிரிப்பதற்கு உளவுத்துறைக்கு பாரிய தேவை இருந்தது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாட்சியமளித்துள்ளார்.

வடக்கிலிருந்து தமிழீழ விடுதலை புலிகள் முஸ்லிகளை வெளியேற்றியதையடுத்து, முஸ்லிம்களின் அத்தகைய கோரிக்கைக்கு எமது உளவுச் சேவையும் மறைமுகமாக உதவியது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். புலிகளுடனான யுத்ததின்போது உளவுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள அது ஓர் யுக்தியாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் நேற்று இதனை வெளிப்படுத்தினார்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அய்ஷா ஜினசேன, முதலில் வட்டுக்கோட்டை பிரகடனத்திலிருந்து சாட்சி நெறிப்படுத்தலை ஆரம்பித்ததுடன், அதனை ஒலுவில் பிரகடனத்துக்கு சமமானதா என முன்னாள் பிரதமர் ரணிலிடம் வினவினார். எனினும் ஒலுவில் பிரகடனும் வட்டுக்கோட்டை பிரகடனமும் சமனானது அல்ல என ரணில் விக்கிரமசிங்க இதன்போது விளக்கினார்.

அது தொடர்பிலான மேலதிக விளக்கங்களை முன்வைத்த ரணில் விக்ரமசிங்க, முஸ்லிம்கள் தனியான இனத்துவ அடையாள தரப்பாக அரசியலில் அடையாளப்படுத்தப்பட்ட பின்னணியை விளக்கினார்.

‘தமிழீழ விடுதலை புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், முஸ்லிம்களை தனித்துவ அடையாளத்துடன் அரசியலில் அடையாளப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மேலெழுந்தது. அப்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரபும் அந்த கொள்கையில் இருந்தார்.

முஸ்லிம்களை இவ்வாறு தமிழர்களிடமிருந்து பிரித்து தனியாக தரப்பாக அடையாளப்படுத்த எமது உளவுச் சேவைக்கும் பாரிய தேவை இருந்தது. அது ஒரு மறைமுக தந்திரோபாய வியூகம். அவ்வாறு முஸ்லிம்கள் தனித் தரப்பாக அடையாளப்படுத்தப்பட்டதன் ஊடாக யுத்ததின்போது, உளவுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வது இலகுவானது.’ என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதன்போது,2015 ஆம் ஆண்டுவரை அமைக்கப்பட்ட அத்தனை அரசாங்கங்களிலும் சிறு பான்மையினரின் ஒத்துழைப்பின்றி அமைக்கப்படுவது சாத்தியமற்றதாக இருந்தது அல்லவா? என ஒவ்வொரு அரசாங்கத்திலும் அங்கம் வகித்த சிறுபாண்மையினரின் விபரங்களை சுட்டிக்காட்டி வினவப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, எப்போதும் ஐக்கிய தேசிய கட்சிக்கு என தனியான முஸ்லிம் வாக்காளர்கள் இருந்ததாக தெரிவித்தார். சுதந்திர கட்சிக்கும் அவ்வாறான வாக்காளர்கள் இருந்தபோதும், அந்த வாக்காளர்கள் பின்னர் முஸ்லிம் காங்கிரஸுக்கு மாறியதாக அவர் சுட்டிக்காட்டினார். (எம்.எப்.எம்.பஸீர்)