மைத்திரிபால அவ்வப்போது அச்சுறுத்தல் விடுத்தார் – ரணில்

2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதியிலிருந்து 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி வரை தாம் பாதுகாப்பு பேரவையை கூட்டியிருக்கவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னாள் பிரதமர் சாட்சியமளித்தார்.

இன்று முற்பகல் 10.15 அளவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சாட்சி விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டு ஒப்டோபர் 26 ஆம் திகதி ஆட்சி மாற்றத்தின் பின்னர், அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் பாதுகாப்பு பேரவையைக் கூட்டவில்லை என தம்மிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஒத்துழைப்பு முதல் ஆறு மாதங்களில் மாத்திரமே கிடைத்ததாக நேற்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இன்று ரணில் விக்ரமசிங்கவிடம் வினவியுள்ளார்.

அதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராகவே களமிறக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

எனினும், மாதுலுவாவே சோபித்த தேரரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பதவியை ஏற்றதாக முன்னாள் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, அரசியல் ரீதியிலான பதில்களை வழங்க வேண்டாம் என முன்னாள் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், மைத்திரிபால சிறிசேன அரசியல் கட்சி சார்பின்றி தேர்தலில் போட்டியிட்டு பின்னர் சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டமை அவருக்கு ஒத்துழைப்பு வழங்காதிருக்க காரணமாக அமைந்ததா என வினவியுள்ளார்.

Read:  பாகிஸ்தான் சம்பவம் - வெட்கமும் துக்கமும்

மைத்திரிபால சிறிசேனவிற்கு அதிக வாக்கு வங்கி இருக்கவில்லை எனவும் அவருக்கு சுந்திரக் கட்சியினது ஒத்துழைப்பும் இருக்கவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க அதற்கு பதிலளித்துள்ளார்.

பாராளுமன்றத்தை கலைத்துவிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவ்வப்போது அச்சுறுத்தல் விடுத்ததாகவும் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பேரவை ஜனாதிபதியின் அலோசனை சபையாகவே நடத்திச்செல்லப்பட்டதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

உடல் நிலை சீராகயின்மையால், மேலதிக சாட்சி விசாரணைக்கு பிறிதொரு நாளை வழங்குமாறு முன்னாள் பிரதமரின் சட்டத்தரணி விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, எதிர்வரும் 13 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க இன்று ஆணைக்குழுவில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் சாட்சியமளித்ததன் பின்னர் வௌியேறிச் சென்றார்