மாடறுப்பதை தடைசெய்தால் காளை மாடுகளின், பெருக்கத்தை அரசு என்ன செய்யப்போகின்றது..? பாராளுமன்றில் கேள்வி

அரசாங்கம் பசுவதையை தடைசெய்ய எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் காளை மாடுகளை என்ன செய்வதென்பதை அரசாங்கம் அறிவிக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நாட்டை கட்டியெழுப்புதல் வரி, பொருளாதார சேவை விதிப்பனவு மற்றும் துறைமுக,விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு கட்டளைச்சட்டம் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மாடறுப்பை தடைசெய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. கால்நடையையும் விவசாயத்தையுமே எமது மக்கள் நம்பி இருக்கின்றனர். பசுவதை என்பது தடுக்கப்படவேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் காளை மாடுகளை என்ன செய்வதென்பதை அரசாங்கம் அறிவிக்கவேண்டு்ம். எமது விவசாயிகள் கால்நடைகளை வைத்துக்கொண்டுதான் அவர்களின் பெண் பிள்ளைகளுக்கு திருமணத்துக்கு சீதனமாக கொடுப்பது வழக்கம்.

அத்துடன் எமது பிரதேசத்தில் கால்நடைகளின் பெருக்கம் இன அடிப்படையில் ஒப்பிட்டு பார்க்கையில் அது அதிகரித்திருப்பதை காண்கின்றோம்.அதனால் மாடுகளை அறுப்பதை தடைசெய்கின்ற அதேநேரம், இந்த காளை மாடுகளின் பெருக்கத்தை அரசாங்கம் எவ்வாறு தடைசெய்யப்போகின்றது என்பதையும் அறிவிக்கவேண்டும். அரசாங்கம் எழுந்தமானமாக இவ்வாறு தீர்மானம் எடுக்கின்றபோது எமது விவசாயிகளே பாதிக்கப்படுவார்கள்.

மேலும் பால் உட்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கையை பாராட்டுகின்றேன். அதேநேரம் அரசாங்கத்தின் மாடறுப்பு தடையினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்தவேண்டும். அத்துடன் எமது மீனவர் சமூகத்தின் எதிர்காலம் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது. ஒருபக்கம் இந்திய தோழர்களின் வருகை மறுபக்கம் தென்னிலங்கை மீனவர்களின் வருகை. இன்னொரு பக்கம் அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் தொடர்பில் அதிகம் கெடுபிடிகளை ஏற்படுத்துவதும் எமது பிரதேசத்திலாகும்.

அதனால் அனைத்து பக்கங்களாலும் எமது பிரதேச மீனவர்களே தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர். இந்த அரசாங்க காலத்தில் மாத்திரமல்ல கடந்த அரசாங்க காலங்களிலும் எமது மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் அவர்கள் தங்களது தொழிலை தடைகள் இன்றி கொண்டுசெல்ல இடமளிக்க மறுத்து வந்திருக்கின்றது. எனவே அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கும்போது எமது பிரதேசத்தில் அன்றாடம் உழைத்துவரும்  மக்கள் மீதும் கருணைசெலுத்தவேண்டும் என்றார்.

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

Previous articleசற்றுமுன் வெளியான கம்பஹா ஊரடங்கு அப்டேட்..
Next articleமுஸ்லிம் வர்த்தகருக்குரிய, Brandix இனவாத ரீதியில் இலக்கு வைக்கப்படுகிறதா..?